செவ்வாய், ஆகஸ்ட் 16, 2005

மங்கள் பாண்டே - எழுச்சி

tamiloviam.com ::

காலச்சக்கரமாக சரித்திரம் மீண்டும் மீண்டும் பிரதிபலிப்புகளை நிகழ்த்துகிறது.

தெற்காசியாவில் விளைந்த போதைப் பொருட்களைத் திருட்டுத்தனமாக, அன்றைய அளவில் பணக்கார நாடான சீனாவுக்கு, கிழக்கிந்திய கம்பெனி கொடுத்து வந்தது. இன்று ஆ·ப்கானிஸ்தானின் அபினை அமெரிக்கா ஊழல்தனமாக ஏற்றுமதிக்கிறது.

பிரிட்டிஷார் அரசாளாமல் அவர்களின் கிழக்கிந்திய கம்பெனி உலகெங்கும் வர்த்தகம் மூலமாக அரசுகளை அமைத்தது. அமெரிக்காவின் கூகிளும் மைக்ரோசா·ப்டும் உலகின் போக்கை தங்களின் எதேச்சதிகாரங்களின் மூலம் நிர்ணயிக்கிறது.

1850-களில் லண்டன் லார்ட்ஸ் கோமகன்களைக் கைக்கூலியாக வைத்துக் கொண்டு இடைத்தரகர்கள் கோலோச்சுகிறார்கள். கட்சி நிதிக்காக ரிலையன்ஸ¤ம் ரேமண்டுஸ¤ம் வாரி வழங்கி, வரிகளைக் குறைத்துக் கொண்டு, சாதகங்களை சாத்தியமாக்கிக் கொள்கிறார்கள்.

மேட்டுக்குடி விருந்துகளுக்கு அழைக்கப்பட்டாலும், கேப்டனாக பணியாற்றினாலும், வசதியான குடும்பத்தில் பிறக்காவிட்டால் இளப்பமாக பார்த்து மெல்லிய அவமானங்களுக்கு உட்பட நேர்ந்தது - கிழக்கிந்தியா கம்பெனிக் காலம். சமநிலையை வெளிப்புறமாக காண்பித்துக் கொண்டு, இனம், நிறம், மொழி கொண்டு ஏளனப் பார்வையை அடிநாதமாக வைப்பது இன்றும் நடக்கிறது.




"Those who fail to learn the lessons of history are doomed to repeat them."
- George Santayana



கேத்தன் மேத்தா என்னும் பொருளாதார அறிவுஜீவியும் ஆமிர் கான் என்னும் மசாலாக் கலைஞனும் சரி பாதியாக கலந்த படம் 'மங்கள் பாண்டே'. (Mangal Pandey)

மங்கள் பாண்டே என்னும் இபிகிசே (இந்தியாவில் பிறந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு சேவகம்) புரியும் குழப்பதாரியின் கதை. 'உடல் மண்ணுக்கு; உயிர் பரங்கியனுக்கு' என்று கொள்கைப் பிடிப்போடு வேதாகம முறைப்படி வாழும் பிராமணன். ஆ·ப்கானிஸ்தான் போரில் தன் தலைவனைக் காப்பாற்றுகிறான். உயிர் காத்த பாண்டேவுக்கு கேப்டன் வில்லியம் கார்டன் (William Gordon) நன்றிக் கடன் உடையவனாகிறான். இருவருக்குமிடையே ஆழ்ந்த நட்பு வளர்ந்தாலும், அமெரிக்கனுக்கும் இந்தியனுக்குமிடையே மறைந்திருக்கும் உரசல்கள் போல் சில கணங்குகள் தெரிகிறது.

கேப்டனுக்கு உடன்கட்டையேறுதல் அருவறுப்பைத் தருகிறது. கத்தி சண்டை போட்டு 'ஜ்வாலா' அமிஷா படேலைக் காப்பாற்றுகிறார். கொடுமையை மனதில் உருவேற்ற வேண்டிய காட்சி, ஆமீர் கான் என்னும் ஹிந்தி நாயகனின் வாள்போர் வீரத்தை வெளிப்படுத்தி, 'சதி' என்னும் கொடுமையின் வீரியத்தை விரயமாக்குகிறது. கிட்டத்தட்ட படம் முழுக்கவே உள்ளத்தில் பதிய வேண்டிய நிகழ்வுகள், இதுபோன்ற ஈயத்தனமான இந்திப்பட இளிப்புகளால் அசட்டு சிரிப்பை வரவைக்கிறது.

தீக்குளியலில் இருந்து காப்பாற்றிய கேப்டனுக்கு அடிமையாக சேவகம் செய்கிறாள் ஜ்வாலா. ஒரிஜினலாக ராணி முகர்ஜி நடிக்க வேண்டிய கதாபாத்திரம். இந்தியாவின் உருவகமாக 'ஜ்வாலா' காட்டப்படுகிறாள். கட்டப் பஞ்சாயத்து பண்ணையார் அரசர்களின் கொடுங்கோலில் இருந்து காப்பாற்றியதற்கும், வசதிகளை செய்து கொடுப்பதற்கும் என்றென்றும் நன்றிக்கு உரித்தவனாக பிரிட்டிஷ் கேப்டனை நினைக்கிறாள். படம் நெடுக பார்வையாளனை பிரதிபலித்து, கிளர்ச்சிக்கு வித்து எப்படி வந்தது என்று காட்டியிருக்கக் கூடிய கதாபாத்திரம். நம்பிக்கை துரோகமாக பணத்தின் பின் செல்ல நினைக்கும் கேப்டன் என்று கதை முன்னேற நினைத்தாலும், படத்தின் ஹீரோ 'மங்கள் ஆனதால் படம் இவர்களை அம்போவென்று நிறுத்திவிட்டு நம்மை ஏமாற்றுகிறது.

ஆரம்பத்திலேயே மறுப்புக் கூற்றுகள் போட்டுவிடுவதால், சரித்திர நம்பகத்தனமைகளையும் அதிகாரபூர்வ வரலாறு பிண்ணணிகளையும் ஒதுக்கி விடலாம்.

தம்மக்கள் எப்பொழுது அவமானப்படுத்தப்பட்டாலும் மங்கள் கொதிப்படைகிறான். காலையில் சந்தியாவந்தனம் முடித்துவிட்டு வரும்போது, தீட்டு பட்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறான். விபச்சார அழகி ராணி முகர்ஜியுடன் படுத்து எழுகிறான். சாராயம் குடிக்கிறான். ஆனால், மாமிசம் வாயில் பட்டுவிடக் கூடாது என்பதை நிச்சயமாக கடைபிடிக்கிறான்.

தூக்கிலிட சொன்னால் 'கொலை செய்யமாட்டான் பிராமணன்' என்று ஒதுங்குகிறான். போர்களத்தின் முண்ணணியில் எதிரிகளைக் கொல்வதை கணக்கில் சேர்த்துக் கொள்ளமாட்டேன் என்கிறான்.

இயக்குநர் முரண்களை பட்டியலிடுகிறார். தாக்கம் ஏற்படுத்தாத புதுக்கவிதை போல் பட்டியல் அளவிலேயே இவை நின்று விடுகிறது. 'எனக்கு எவ்வளவு விஷயம் தெரியும் பார்' என்னும் பிரமிப்புதான் வெளிப்படுகிறது. லகான் போல ஏதாவதொரு பிரச்சினையை தீவிரப்படுத்தி, மாறுபாடுகளையும் சுயமறுப்புகளையும் ஆழமாக காட்சிப்படுத்தியிருக்கலாம்.

·பரூக் தோண்டி (Farrukh Dhondy)யின் வசனங்கள் படத்தைக் காப்பாற்றுகிறது. தளையற்ற சந்தை (Free Market) தத்துவத்தை எளிதாக புரிய வைக்கிறார். நகைச்சுவையாக 'நீ நாய் என்று சொல்லிக்கொள்' என்று வில்லன் மிரட்டும்போது, 'நீ நாய்' என்று எகத்தாளமாய் பதிலிறுக்கிறார்.

நினைவில் நின்ற சில வசனங்கள்.

  • 'உனக்கு உட்பொருள் புரியாத எதிலும் உன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதே'

  • 'உப்பு எளிதாகக் கிடைப்பதுதான். அது இல்லாவிட்டால் சமையல் ருசிக்காது. ஆனால், உப்பை விட விசேஷேமானவைகள் நிறைந்த உலகம் இது.'

  • 'கிளர்ச்சிகளுக்கு தலைவர்கள் தேவையில்லை. ரத்தம் சிந்துவதால்தான் போராட்டங்கள் தொடங்கப்படுகிறது.'

    இவ்வளவு அருமையான உரையாடல்களுக்கு இடையூறாக ஓம் பூரி வந்து 'ஒரேயொரு ஊரிலே... முன்னுமொரு காலத்திலே' என்று லெக்சர் கொடுக்கிறார். படத்தில் எப்பொழுதெல்லாம் ஆங்கில வசனம் வருகிறதோ, அசரீரியாக ஓம் பூரியின் ஹிந்தி ஆஜராகிறது. சன் டிவி சீரியல் போடுகிறது; நாமும் போடுவோம் என்பதாக எல்லோரும் படுத்துவதைப் போல், அமிதாப் பச்சனை குரலொலிக்க விடாதது மட்டும்தான் நிம்மதி. மற்றபடி பரூக்கின் உயிரோட்டமுள்ள ஆங்கில வசனங்களையும் கேட்க விட்டிருந்தால் படத்திற்கு மெருகூட்டியிருக்கும்.

    வரலாற்று 'நாயகனி'ன் கதையை மூன்று மணி நேரத்தில் சுவாரசியமாக அடக்குவது கஷ்டமான காரியம். 'தென்பாண்டிச் சீமையிலே' மூன்று முறை இடம்பெற்றது போல் 'மங்கள்... மங்கள்... ஹோ'வும் மூன்று முறை வருகிறது. கதையை முன்னெடுத்துச் செல்வதற்கு பயன்படாமல் சீட்டில் நெளிய வைத்து, தம் போடாதவர்களைக் கூட சிகரெட் பிடிக்கப் போகவைக்கும் காட்சியாக்கம். கிறக்கமான 'ரஸியா' பாடலுக்கு நல்ல ஆட்டம் போடவைத்தாலும், தாதா படத்திலும் அயிட்டம் பாடலுக்கு மினுக்கிட்டு உழைக்கும் ராம்கோபால் வர்மாக்களின் காட்சியாக்கங்களில் பத்து சதவீத ஈடுபாடு மட்டுமே வெளிப்படுகிறது. ஜாவெத் ஜ·ப்ரியின் 'உலகமென்னும் சந்தையில் எல்லாமே விற்பனைகளில் வருகிறது' என்பது போன்ற வைரவரிகளுக்கு, எண்பதுகளில் வரும் 'சாமிகளே... சாமிகளே' விஜயகாந்த் போல படமாக்கியிருக்கிறார்கள்.

    கொளுத்தப்பட்ட கிராமத்தில் சடலங்களின் மேல் ஊர்ந்து சென்று தன்னுடைய பாம்பாட்டியைத் தேடும் பாம்பு போன்ற குறியீடுகள் பல அதிர்வுகளைக் கொடுக்கிறது. நிராயுதபாணியாக வந்து, மங்களைத் தனியே அறிவுறுத்த அழைக்கும் கேப்டனை எல்லோர் முன்னிலையிலுமே பேச அதட்டி விட்டு, இரண்டாவது பார்வையிலேயே, அமைதியாக பின்னே செல்வது போன்ற அமர்க்களமான காட்சியாக்கங்கள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது.

    விலைமாது 'ஹீரா'வாக ராணி முகர்ஜியும் வந்து போகிறார். ராணி லஷ்மி பாய் என்னும் icon-ஐ ஐந்து விநாடி காட்சிப்படுத்தலின் மூலம் நகைப்புக்குள்ளாக்குகிறார்கள். அதே போல், 'இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில்' திடீரென்று ராணி முகர்ஜியும் ஈடுபடுவதாக பதின்மூன்று விநாடிகள் க்ளைமாக்ஸில் காட்டும் இடத்தில், உணர்ச்சிவயப்படாமல், தியேட்டரே சிரிப்பலையில் மூழ்குகிறது. இது ஹீரோக்களின் கதை. அவர்களுக்கே உயிரூட்டம் இல்லாதபோது, ஏலத்தில் விற்கப்படும் பாரத மாதா படிமத்தைக் கொண்ட 'ஹீரா'க்களுக்கு இரண்டரை மணி நேரத்தில் இடமே இல்லை.

    அடக்கி வாசிக்கத் தெரிந்த நடிகர்கள், உறுத்தாத ஒளிப்பதிவு, சிந்தையைக் கிளறும் வசனங்கள், பெரிய பட்ஜெட் மிரட்டல் காட்டாத காட்சியமைப்புகள், உருக்கும் பிண்ணணி இசையமைப்பு, இயல்பு நவிற்சியான கலை, இயற்கைச் சூழல் கிராமப்பிடிப்பு எல்லாம் 'ஓ' போடவைக்கிறது.

    ஆனால், படம் பார்த்த பிறகு எமிலி என்ன ஆனார், எதற்கு வந்தார்; இங்கிலீஷ் மேம்சாபின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் 'கமலா' (மோனா அம்பேகாவோன்கர்) ஏன் வீணடிக்கப்பட்டார் போன்ற குழப்பங்கள் எழுவதைத் தவிர்க்க இயலாது.

    காத்திரமான மன அதிர்வுகளை எதிர்பார்த்து செல்பவர்களுக்கு இது நாலைந்து சிப்பாய்களின் கலகம். நாலு பாட்டு, இரண்டு சண்டை, கொஞ்சம் பலான காட்சிகள், ஒரு அயிட்டம் பாட்டு, என்று நேரங்கழிக்க செல்பவர்களுக்கு இது சுதந்திர இந்தியாவின் எழுச்சி வித்து.

    - பாலாஜி


    | |

  • 0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு