புதன், ஜனவரி 04, 2006

தமிழோவியத்தின் பிறந்தநாள்

ஞாயிறு மதியம் இரண்டு மணி இருக்கும். உண்ட களைப்பு. கொஞ்சம் 'சியஸ்டா'வாக சின்னத்திரை ஓடினாலும், கண்மூடும் நேரம். செல்பேசி பாட ஆரம்பித்தது. 'எவண்டா இவன்... இந்த நேரத்தில...' என்னும் சோம்பேறித்தனத்துடன் எடுத்தால் 'தமிழோவியம்' கணேஷ் சந்திரா. கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடமாக சனி, ஞாயிறுகளில் என் தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தாலே தமிழோவியமாகத்தான் இருக்கணும் என்று எண்ண வைக்குமளவு, விடாது பங்களிக்க வைக்கிறார்.

அவர் என்னை படுத்துவதால், நானும் அவரை நிறையவே வைவதுண்டு.

பொறுமையாக நான் சொல்லும் புலம்பல்களைக் கேட்டுக் கொள்வார். என்னுடைய நூற்றியெட்டு அட்வைஸ்களை பதின்மூன்றாவது தடவையாக காதில் போட்டுக் கொள்வார். புதிய தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டால், அந்த டெக்னாலஜி, தமிழோவியத்தில் எப்படிக் கொண்டு வரலாம் என்று யோசிப்பார். மதிக்காமல், மிஸ்ட் கால் ஆக்கினாலும், விடாக்கண்டராக பிடித்து விடுவார்.

விளம்பரங்களின் ஆயுள்காலமாக நூறு தடவை பார்வையில் படுவதை சொல்வோம். வலையகத்தின் டெம்ப்ளேட்டிற்கு ஆறு மாதம். இந்த மாதிரி மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு உண்டான 'பெஸ்ட் ப்ராக்டிஸசை' தமிழோவியம் தொடர்ந்து செயலில் காட்டுகிறது. வார்ப்புருவை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது கண்ணுக்குக் குளிர்ச்சியாக மாற்றி வருகிறது. பழைய பக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றி வைத்திருக்கிறது.

எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதுடன் நிற்காமல், அதன்மேல் சென்று தொடர்ச்சியாக அவர்களின் படைப்புகளைத் தொடர ஊக்குவிக்கிறது. நான்கு வருடங்களாக அசராமல் செயல்படுகிறது.

தொடர்ச்சியாக இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் வலைப்பதிவு நடத்துகிறேன். பல சமயங்களில் 'மயக்கமா கலக்கமா' என்று உணர்ந்ததுண்டு. போற்றுவார் போற்றும்போது மனது றெக்கை கட்டிப் பறந்தாலும், தூற்றுவார் நாக்கின் மேல் பல் அருவாள் போட்டு குத்தும்போது 'I have got better things to worry about' என்று ஏறக்கட்டிவிட்டு, பெப்ஸி... சாரி 'ஆச்சி உங்கள் சாய்ஸ்' உமாவின் தொலைபேசியை முயற்சிக்கவும், குடும்பத்துடன் நியு ஜெர்ஸியின் உள்ளரங்கு விளையாட்டு பார்க் செல்லவும், நெட்·ப்ளிக்ஸின் ஆதிகால ஹாலிவுட் படங்களும் இக்கால ஸ்பானிஷ், இத்தாலிய, ப்ரென்ச் படங்கள் பார்த்தும் நேரம் கழிக்க மனம் எண்ணும்.

அவ்வாறு எல்லாம், மனம் கலங்காமல், தொடர்ச்சியாக வடிவிலும், உள்ளடகத்திலும், பல்சுவையிலும் மேம்படுத்தலுடன் தமிழோவியம் செயல்பட்டு வருகிறது. அவ்வாறே தொடர்ச்சியாக மேலும் வளரவேண்டும்.

'கஜினி'யில் சஞ்ஜய் ராமசாமி சொல்வது போல் 'தமிழோவியம் சிறப்பாக பெரிய அளவில் பேசப்படும் என்று சொன்னால் தன்னம்பிக்கை; அது என்னால் மட்டும்தான் முடியும்னு சொன்னா தலைக்கனம்'. எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறு மதியமும் என்னுடைய தொலைபேசி சிணுங்காமல் இருப்பதும், தமிழில் இணைய எழுத்துக்கள் பேசப்படுவதும், வலையில் தமிழ்நுட்பம்தான் சிறந்த தொழில்நுட்பம் என்று கருதப்படுவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

தமிழோவியத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

- பாஸ்டன் பாலாஜி




|

3 கருத்துகள்:

அப்படியா? எங்களோட வாழ்த்துக்களையும் தமிழோவியத்துக்குச் சொல்லிடுங்க.

நல்லா வளரட்டும்.

அவசியம் சொல்லி விடுகிறேன் துளசி!

தமிழிணையத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் ஒன்றாய் வளரும் தமிழோவியத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்.

எம்.கே.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு