செவ்வாய், ஏப்ரல் 11, 2006

France Labor Law Rescinded amidst French Riots

ஃப்ரான்சில் மாணவர் போராட்டம் - இந்த வாரத் தமிழோவியத்தில் வெளியானது

'சீட்டைத் தேய்க்கும் உத்யோகம்', 'விகடன், குமுதம் படிக்கும் அரசு அலுவலகம்', 'மேஜை மேல் கவுந்தடித்துத் தூங்கலாம்'
என்று பணி நீக்க பயமற்ற, சிரத்தையில்லாத இந்திய அரசுத்துறை ஊழியர்கள் மேல் துணுக்கு நகைச்சுவைகள் வெளிவருவது சாதாரணம். போராடுவதற்கு விஷயப் பற்றாக்குறையால் தவிக்கும் ஃப்ரென்ச் இளைஞர்களும் 'வேலைநீக்கம்' மேல் அச்சம் கொண்டு களமிறங்கி, தங்கள் பலத்தை யூனியன் தோழர்களுடன் கைகோர்த்து வெளிக்காட்டி, வாபஸ் பெற வைத்திருக்கிறார்கள்.

பிரான்ஸ் நாட்டின் பிரதம மந்திரி டாமினிக் வில்லேபின் (Dominique de Villepin) சி.பி.ஈ. (CPE, the “Contrat Premiere Embauche”) என்னும் "முதல் வேலைக்கான ஒப்பந்த"த்தை உள்ளடக்கிய தொழில்துறை மாற்றங்களை ஜனவரி 16-ஆம் தேதி அறிவித்தார். சர்சைக்குரிய அந்த இளைஞர்-தொழில் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதை ஒரு பெரிய வெற்றியாக அந்நாட்டு மாணவர்களும், தொழிற்சங்கங்களும் வரவேற்றுள்ளன.

ஃபெப்ரவரி ஏழாம் தேதி பேரணி ஆகட்டும்; ஏப்ரல் இரண்டாம் தேதி சட்டமாக்கப்பட்ட பின் நடந்த கிளர்ச்சிகள் ஆகட்டும்; பெரிய அளவிலான எதிர்ப்பைத் பறைசாற்றியது. ஏன்?

  • 26 வயதுக்கு உட்பட்டோரை மட்டுமே இந்த புதிய சட்டம் குறி வைக்கிறது.

  • வேலைக்கு சேர்ந்த இரண்டு வருடத்துக்குள், எந்தவிதக் காரணமும் காட்டாமல் இவர்களை வேலையை விட்டு தூக்கலாம்.

  • ஒரு மாதத்திற்கு மேல் வேலையில் வைத்துக் கொண்டால், இரு வார முன்னறிவிப்புத் தர வேண்டும்; ஆறு மாதங்களுக்கு மேல் வேலையில் இருந்திருந்தால், குறைந்தபட்சமாக ஒரு மாதத்திற்கு முன்பு வேலை போகப்போவதை தெரிவிக்க வேண்டும்.

  • இரண்டு வருடங்கள் வேலையில் இருந்து விட்டால் தற்போது நடைமுறையில் இருக்கும் ப்ரான்ஸ் நாட்டு ஒப்பந்தங்கள் இருபத்தாறு அகவைக்குள் இருப்போருக்கும் பொருந்தும்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் (2005) இதே மாதிரி சட்டம், சி.என்.ஈ (CNE, “Contrat Nouvelle Embauche”) நடைமுறைக்கு வந்தது. இருபது ஊழியர்களுக்குக் குறைவானவர்களே உள்ள நிறுவனங்களுக்காக அது இயற்றப்பட்டது. சிறு முதலாளிகளை, புதியவர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ள, ஊக்குவிக்க, அந்த சட்டம் பயன்பட்டது. தற்போது, அதே சட்டம் இருபது பேர்களுக்கு மேல் இருக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்துமாறு நீட்டிக்கப்பட்டதே, மாணவர்களின் எழுச்சிக்கு வித்திட்டது.

    சோஷலிஸத்துக்கும் மாறாமல், கேபிடலிஸத்தையும் விடாமல், திரிசங்கு சொர்க்கமாக ஃப்ரான்ஸ் தவிக்கும் காலம் இது. ஆர்செலோர் (Arcelor)-ஐக் கைப்பற்ற நினைக்கும் லஷ்மி மிட்டலைத் தட்டிக் கழித்து, அன்னியரை உள்ளே விடாமல் பாதுகாக்க நினைக்கிறது. உலகத்துக்கே முற்போக்காக வறுமையை ஒழிப்பதில் புத்தம் புதிய சிந்தனைகளை முன்வைப்பதோடு நில்லாமல், செயல்வீரராக, ஃப்ரான்ஸ் நாட்டுக்குள் நுழையும் விமான பயணிகளுக்கு வரி விதித்து (airline ticket levy - ATL) அறுநூறு மில்லியன் யூரோக்களை ஈட்டி, கொடையாக வழங்குவதற்கு வழிவகுத்திருக்கிறது.

    தங்கள் நாட்டின் அரதப்பழசான தொழில்துறை சட்டங்களை தூசு தட்ட நினைக்கும் அரசாங்கம். உலகமயமாக்கல் என்னும் அதிவேக ஜெட்டைத் தவறவிடக்கூடாது என்னும் தொலைநோக்குப் பார்வையுடன் புதிய வரைவுகளை முன்வைக்கின்றன.

    ஃப்ரென்ச் இளைய தலைமுறைக்கும் அதே பயங்கள்தான். பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் கூடிய வாழ்க்கைமுறை, வாரத்துக்கு 35 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கும் சொகுசு, அலுவலில் இருந்து வருடத்துக்குக் கிட்டத்தட்ட இரண்டு மாதகாலத்துக்கு உல்லாச விடுமுறை போன்றவை குறைந்து விடுமோ என்னும் பயங்கள்.

    அலுவலில் ஆள்குறைப்பு என்பது தனியார் துறைகளில் (இந்தியாவிலும், அமெரிக்காவிலும்) சாதாரணமாக நிகழ்வது. வயது வித்தியாசம், இன, மொழி பாகுபாடுகள் பாராமல் எவரும் வேலையில் ஜொலிக்காவிட்டால் அல்லது நிறுவனத்திற்கு கஷ்ட காலம் என்றால் நீக்கப்படுவார்கள். பிறிதொரு வளரும் நிறுவனம் இவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் பொருளாதார சுழற்சியின் கட்டாயம்.

    தீவிர இடதுசாரிகள் இந்த நிகழ்வை அமெரிக்க பொருள்முதல்வாதத்தின் பின்னடைவாகக் கருதுகிறார்கள். பாதுகாப்பான வேலையை ஏற்படுத்திக் கொடுக்காததன் மூலம் தொழிலாளிகளிடையே பயம் நிறைந்த சூழ்நிலையை முதலாளிகள் நிலவவிடுகிறார்கள். கடைநிலைத் தொழிலாளிகள் சம்பள உயர்வு, விடுமுறை கோருவதை நிறுத்தி விடுகிறார்கள். அதன் மூலம் கிடைத்த சேமிப்புகள், ஏற்கனவே பணம் பெருத்த மேலாளர்களின் ஊக்கத்தொகையாக அமைகிறது.

    கழிவிறக்கம், சுய பச்சாதபம் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டு உளவியல் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள் தொழிலாளிகள். 'ஆட்குறைப்பு' என்பது தேவையற்ற ஒன்று என்னும் கருத்தை இவர்கள் முன்வைக்கிறார்கள். நீக்குவதற்கு பதிலாக, அவர்களையே புதிய நுட்பங்களிலும், தேவையான மேலாளர் பயிற்சிகளிலும் ஈடுபடுத்தி, நிறுவனம் அவர்களின் நம்பிக்கையைக் கோருமாறு பரிந்துரைக்கிறார்கள்.

    ஃப்ரான்சின் வீதிகளில் இறங்கிப் போராடும் மாணவமணிகளும் இதே கருத்தாக்கத்தை அதிகார எதிர்ப்பாக நினைத்துக் கொண்டு முன்வைத்திருக்கிறார்கள். ஃப்ரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை பத்து சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இதே போல் வேலை கோருபவர்களின் சதவீதம் ஐந்துக்கும் குறைவாகவே உள்ளது. ஃப்ரான்சில் இளைய தலைமுறையினரில் இருபத்தி இரண்டு சதம் வேலையில்லாமல் இருக்கிறார்கள். கடந்த வருட இறுதியில் நிகழ்ந்த, கலவரம் மூண்ட பிறப்டுத்தப்பட்ட பகுதிகளில் இது 50% ஆக உள்ளது.

    இதற்கு என்ன காரணம்?

    ஃப்ரான்ஸ் அமெரிக்க ஸ்டைல் பொருள்முதல்வாதத்தை முன்னிறுத்துவதில்லை. தொழிலாளர்களுக்கு 'உறுதியான நிலையான நீடித்த வேலை' என்று நிறுவனங்களை அச்சுறுத்துவதால், புதியவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ள மேலாளர்கள் தயங்குகிறார்கள்.
    தேவையான போது தொழிலாளர்களைக் கூட்டவும், குறைக்கவும் அமெரிக்காவில் இருக்கும் சட்டங்கள் எளிதாக உள்ளன. ஆனால், ·ப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், இந்த வசதி இல்லாததால், நிறுவனங்களுக்கு கடும் மனத்தடை ஏற்படுகின்றன. பொருளாதாரம் வீழ்ந்தாலும் தொழிலாளர்களை நீக்க முடியாத நிலை. நீக்கினால், நஷ்ட ஈடாக பெரும்பணம் கொடுத்தனுப்பவேண்டிய மொகஞ்சதாரோ காலத்து சட்டதிட்டங்கள்.

    ஃப்ரான்சில் இவ்வகை பழமையான சட்டங்களை மாற்றுவதற்குத்தான் சிராக் (Jacques Chirac) முயல்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு கிடைக்காதது; தேர்தல்களில் தோற்பது என்று இறங்குமுகமாகவே இருந்தாலும் லே பென்னின் (Jean-Marie Le Pen) அதிரடி வலதுசாரிப் பிரச்சாரத்தினாலேயே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிராக். கட்டாய இராணுவப் பணியை நீக்கியதும், வேளாவேளைக்கு பாரிஸ் நகரக் குப்பைத்தொட்டிகள் நீக்கப்படுவதையும் தவிர இவர் எதையுமே சாதிக்கவில்லை என்று ஊடகங்கள் இவரைக் கிண்டல் செய்வதை அகற்றும் முயற்சியாகத்தான் 'முதல் வேலைக்கான ஒப்பந்த'த்தைத் தீட்டியிருந்தார்.

    இவ்வளவு பெரிய கிளர்ச்சியைக் கடைசியாக 1968-இல் ப்ரான்சு கண்டிருந்தது. கலகத்தைத் தூண்டும் பிரசுரங்களை அச்சிட்டதற்காக, பல்கலையில் இருந்து மாணவர்கள் நீக்கப்பட்டதை அடிநாதமாகக் கொண்டு, அன்று கலகம் மூண்டது. அடக்குமுறைக்கு எதிரான குரலாக, தொழிற்சங்கங்களும் அதில் இணைந்து கொண்டது. பொருளாதார முன்னேற்றம் கண்ட காலத்திலேயே, கிளர்ச்சி ஏற்பட்டது. சம்பள உயர்வு, குறைந்த பட்ச சம்பளவிகித அதிகரிப்பு என்று பேரங்கள் பேசப்பட்டு தொழிலாளிகளுக்கு வெற்றியும், கொள்கையளவில் நோக்கமும் கொண்ட போராட்டம் அது.

    இன்றைய சூழலும் பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டம்தான். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி போன்ற சக நாடுகளை விட அந்நிய முதலீடு, அதிக அளவில் ஃப்ரான்சை சென்றடைகிறது. உடல்நலத் திட்டத்தில், உலகிலேயே சிறந்து விளங்குவதாக உலக சுகாதார மையம் (World Health Organization) ஃப்ரான்சை அறிவித்திருக்கிறது. ஆனால், போராடத்தான் எதிரிகள் இல்லாமல், எதற்கு எதிராக கலக்கொடி தூக்கலாம் என்று குழம்பிய இளைய சமுதாயம்.

    தாற்காலிகமாக வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் போக்கை மாற்ற நினைத்தார் சிராக், CNE, New Recruitment Contract, CPE, CDD என்று சிண்டைப் பிய்த்துக் கொள்ளவைக்கும் சட்டச்சுழல்கள். நிரந்தரமாக வேலைக்கு அமர்த்திக் கொள்ள நேர்காணல்கள் பயன்படும் என்றாலும், இது போன்ற புதிய திட்டங்கள் நிறுவனங்களுக்கு சூழலை லகுவாக்குகிறது.

    அரசன், ராஜா போன்றவையாகவே ஃப்ரென்சு நிறுவனங்களையும், அடிமைக்கூலியாகத் தம்மையும் தொழிலாளிகள் கருதுகிறார்கள். அமெரிக்காவில் நிறுவனங்களை வேலை கொடுப்பவர்களாகவும், தொழிலாளிகளை வேலை தருபவர்களாகவும் நினைக்கிறார்கள். சந்தைப்படுத்திய குமுகாயத்தில் சில சமயம் வேலை வேண்டுபவர்கள் அதிகமாக இருக்கலாம்; சில சமயம் வேலை கொடுப்பவர்கள் அதிகமாக இருக்கலாம்.

    இல்லாத அடிமைத்தளைக்கு எதிராக தடியெடுத்து, இருதலைக்கொள்ளி அரசனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, தங்கள் தலையில் கொள்ளிக்கட்டை வைத்து போராட்டத்தை ஒலிக்க விடுகிறார்கள் மாணவர்கள்.

    இளைய தலைமுறைக்கு ஐம்பது வயதில், வேலையில் இருந்து ஓய்வூதியம்; குறைந்தபட்ச ஊதியமாக ஆயிரம் வராகன்கள் என்று செட்டிலாக நினைப்பு. உலகம் மாறுவதை தாம்ஸ் ஃப்ரீட்மான் 'The World Is Flat'ஐ ஃப்ரென்ச் மொழிக்கு மொழிபெயர்க்க சொன்னாரா என்று தெரியவில்லை.


    உதவிய, தொடர்புள்ள செய்தி ஊடகங்கள், புத்தகம்:

    1. போராடுபவர்களின் வலைப்பதிவு

    2. தி கார்டியன் நாளிதழ்

    3. பிபிசி

    4. ·ப்ரென்சு அமைச்சகம்

    5. The Disposable American : Layoffs and Their Consequences

    6. C-SPAN




    | |

  • புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு