Pagirvu Meet Details
நவீன கலை இலக்கிய பரிமாற்றம் - பகிர்வு
நீங்கள் அனுபவித்து உணர்கின்ற எதுவுமே வேறு யாரோ ஒருவரால் ஏற்கனவே அனுபவித்து உணரப்பட்டு விட்டது. 'ஆகா, நான் ஒரு பேரின்ப நிலையிலே இருக்கிறேன்' என்று நீங்கள் சொல்லிக் கொள்வதன் பொருள், உங்களுக்கு முன்னதாக வேறு ஒருவர் அதை அனுபவித்து அதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறாரென்பதுதான். நீங்கள் அதை எந்த ஊடகத்தின் வழியாக அனுபவித்தபோதிலும், அது இரண்டாவது முறையாக, மூன்றாவது முறையாக மற்றும் இறுதியாக ஏற்படும் ஒரு அனுபவம் மட்டுமே. அது உங்களுடையது அல்ல. உங்கள் சொந்த அனுபவம் என்று எதுவுமே கிடையாது. அத்தகைய அனுபவங்கள், எத்துணை அசாதாரணமைவையாக இருப்பினும், அவை ஒரு மதிப்பும் அற்றவை.
-யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி
இலக்கிய சந்திப்புகள் என்றால் இணையத்தில் அறிமுகமான நண்பர்களை சந்திப்பதுதான் என்னுடைய பழக்கம். பாஸ்டன் பக்கம் வருகை தருபவர்களை வீட்டீல் வைத்து உரையாடுவது; ட்ரைவ்-இன் வுட்லண்ட்ஸில் காபி சாப்பிட்டுக் கொண்டே நண்பர்களுடன் பேசுவது என்ற மட்டில் சென்னை விஸிட்கள் முடிவடைந்து விடும்.
யாஹூ தூதுவனில் திலகபாமாவுடன் தட்டச்சும்போது அரட்டைவாக்கில் 'வாரயிறுதியில் சென்னை வருகிறேன்; தங்களையும் நண்பரகளையும் சந்திக்க இயலுமா?' என்று கேள்வி எழுப்பியவுடன் பன்முக சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, அழைப்பிதழ் கொடுத்து, வலையெங்கும் அறிவித்து நிறைய பிரமிப்பையும் கொஞ்சம் நாணத்தையும் ஏற்படுத்திவிட்டார்.
கடைசியாக எழும்பூர் பக்கம் உலாவியது 'தளபதி'க்காக. தீபாவளிக்கு வந்திருந்த திரைப்படத்தை முன்பதிவு செய்ய ஆல்பட் திரையரங்கு பக்கம் சென்றிருந்தது மலரும் வைபவம். 'ராக்கம்மா கையைத் தட்டிய' பரவசங்கள் நிறைந்த நினைவுகளுடன் மூன்று மணியளவில் அபிராமி ஹோட்டலை நானும் என்னுடைய அண்ணன் ஹரிஹரனும் சென்றடைந்தோம். கூட ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்ளுவது நல்லதாகப் பட்டது. இலக்கிய சந்திப்பில் இணையத்தரமாய் ஏதாவது விவகாரம் கிளப்பி கைகலப்பானால் தர்ம அடியில் இருந்து காப்பாற்ற சகோதரனை பக்கபலமாக வைத்துக் கொண்டு வரவேற்பரையில் காத்திருக்க ஆரம்பித்தோம்.
எங்களுக்கு முன்பே இதழியலில் பணிபுரியும் சோமசுந்தரம் ஆஜர். அவருடைய கவிதையார்வத்தை தெரிந்து கொண்டிருக்கும்போதே, 'அபிராமி' உணவகம் மற்றும் குடிலகத்தின் உரிமையாளர் எஸ். விஜயன் எங்களுடன் இணைகிறார். தன்னுடைய 'மௌனம் பேசும்' துளிப்பா தொகுப்பைக் கையெழுத்திட்டு தந்தார்.
புரட்ட ஆரம்பித்ததில் எனைக் கவர்ந்த இரண்டு ஹைக்கூ:
1. ஓடிய நதிகள்
தவழ்ந்து செல்கின்றன
கோடைக்காலம்
2. அணிந்த ஆடையை
மாற்றுவதேயில்லை
வண்ணத்துப்பூச்சி
நல்ல முறையில் அச்சிடப்பட்டு, குறிப்பிடத்தக்க துளிப்பாக்களைக் கொண்ட தொகுப்பு.
அடுத்து வந்தவர் மரிய தெரஸா. பனிரெண்டு புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டவர். நிர்மலா சுரேஷின் படைப்புகளில் எம்.·பில். ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். தமிழகத்துச் சூழ்நிலையில் குடும்பத் தலைவியாகவும் இருந்து கொண்டு, ஹிந்தி ஆசிரியையாகவும் பணியாற்றிக் கொண்டு, படைப்பிலக்கியத்திலும் தீவிரமாக செயல்பட்டு வருவதை அறிய முடிகிறது. கவிதை, குறும்பா, திறனாய்வு, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளில் பங்காற்றுகிறார்.
நவீன நாடக நடிகர் விஜயேந்திரனுடன் சிறிது உரையாட வாய்ப்பு கிடைக்கிறது. ந. முத்துசாமி வழியில் எவ்வாறு சிவகாமி பெத்தச்சி அரங்கம் நிரம்பும் அளவு சென்னையில் நவீன நாடகங்கள் வேர் கொண்டிருக்கிறது என்பதை உள்ளார்ந்த ஆர்வத்துடன் விவரிக்கிறார்.
மூன்றரை மணிக்குத் 'சூழ்வெளிக் கவிஞர்' வைகைச் செல்வி, திலகபாமா, வில் விஜயன், தமிழ்மணவாளன், 'அமிர்தம்' சூர்யா என அனைவரும் வந்து சேர 'கல்வெட்டு பேசுகிறது' சொர்ணபாரதி வரவேற்கிறார்.
தமிழ் மணவாளனுக்கு சிரமமான பொறுப்பு. என்னை அறிமுகப்படுத்தும் வேலை. என்னுடைய திண்ணை, தமிழோவியம், வலைப்பதிவு எழுத்துக்களைப் படித்துவிட்டு அதன்மூலமாக தான் பெற்ற உருவகத்தைக் கொண்டு பேசினார். நியுயார்க் வேலைநிறுத்தம் தொடர்பான கட்டுரை, அமெரிக்கத் தேர்தல் என்று அவர் விரிவாக அலசலை முன்வைக்கிறார். பிட் நோட்டிஸ் போன்ற அறிமுகம்தானே கிடைக்கும் என்று நான் எண்ணியதை உடைத்து, வருகையாளர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியும் விட்டுவிட்டார்.
எனக்குத் தரப்பட்ட, நானே விரும்பி எடுத்துக்கொண்ட தலைப்பு 'எனது வாசிப்பனுபவம்'. வந்திருந்த சிற்றிதழ் படைப்பாளிகளையும், நவீன நாடக கர்த்தாக்காளையும், இலக்கிய அமைப்பு ஆர்வலர்களையும் கருத்தில் கொண்டு என்னுடைய இராஜேஷ்குமார் பாக்கெட் நாவல் தலைப்பு அனுபவங்களையும், ராஜேந்திரகுமார் பனியன் வாசக ரசனைகளையும் சொற்பொழியாமல் தவிர்த்துவிடுகிறேன்.
போதிய அளவு ரெ·ப்ரன்ஸ் எடுக்காதது முதல் காரணம். 'சுந்தர ராமசாமி நடிகர் விஜய்யை முன்னிறுத்துவதை ஜெயமோகன் வெளிக்கொணருவதும் - இளங்கோவடிகள் மாதவியை முன்னிறுத்துவதை கலைஞர் ரசிப்பதும்' போன்ற இலக்கியத்தரமான சிந்தனைகள் பாயாத 'ஜெட்-லாக்' கலையாத மயக்கத்தில் இருந்தது இரண்டாவது காரணம்.
என்னுடைய புத்தக வாசிப்பு குறித்த பதிவுகளை சுருக்கிக் கொண்டு இணையம் குறித்து பேச விரும்புவதையும் கேள்வி பதிலாக உரையாடுவதை விரும்புவதையும் சொன்னேன். வலையின் மூலம் 'கல்வெட்டு பேசுகிறது', 'அமிர்தம்' போன்ற சிற்றிதழ்கள் பரவலான கவனிப்பைப் பெறக்கூடிய சாத்தியக்கூறுகள்; துளிப்பா, கவிதைகளுக்குக் கிடைக்கும் உடனடி விமர்சனங்கள்; ஒத்த சிந்தனையுள்ளவர்களை எளிதாக சென்றடையக் கூடிய வாய்ப்புகள்; உங்களுக்கு அறிமுகமான வழக்கமான விஷயங்கள்தான்.
தலைப்பை ரசமாக வைப்பதன் முக்கியத்துவத்தை சொல்லத் தவரவில்லை. 'வைகோவைக் குறித்து த்ரிஷா என்ன சொன்னார்?' என்று தலைப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே, நீங்கள் எழுதிய கவிதை, கட்டுரை எல்லாம் கொடுங்கள். கடைசியாக 'பின் குறிப்பாக: ஒன்றுமே சொல்லவில்லை' என்று முடித்துக் கொள்ளுமாறு எனக்குத் தெரிந்த டிப்ஸ் கொடுக்கிறேன்.
புத்தகம் அச்சடிக்க ஆகும் செலவு, அன்றாட நிகழ்வுகளுக்கு உடனடி எதிர்வினை கருத்தாக்கம், சக படைப்பாளிகளுடன் எளிதாக ஊடாடுதல் ஆகியவற்றை மீண்டும் வலியுறுத்தி முடித்துக் கொண்டேன்.
நான் வலைப்பதிவதை போலவே அலைபாயும் பேச்சு. சென்ற முறை பிரபஞ்சனின் அமெரிக்க வருகைக்குப் பின்பு 'பகிர்வு' தன் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறது. மார்ச் 25 அன்று அடுத்த சந்திப்பு. பிரபஞ்சனின் பேச்சு சர்ச்சைக்குள்ளானது போலவே என்னுடைய பேச்சிலும் ஏதாவது விவகாரம் கிளப்பலாம் என்று ஒன்றிரண்டு axiom-களை முன்வைக்கிறேன்:
தேன்கூடு, தமிழ்மணம் போன்ற முக்கிய தளங்களின் முகவரிகளையும் (எழுத்துரு மற்றும் வலைப்பதிவு அமைக்க) என் மின்னஞ்சலையும் பகிர்ந்து கொண்டேன்.
தொடர்ந்து திலகபாமாவின் மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம் பேச்சு. கவின் கவி போன்றோரின் ஆழமான மாற்றுக் கருத்துக்களுடன் விவாதம் தொடர்ந்தது. சூரியாளின் கட்டுரை முழுதும் அவரின் வலைப்பதிவில் படிக்க கிடைக்கிறது.
'மரவண்டு' கணேஷ் கரெக்டாக டிபன் வருவதற்கு சில மணித்துளிகள் இருக்கும்போது நுழைகிறார். ஜிலேபி, இட்லி, வடை, விதவிதமான சட்னி என்று உள்ளே தள்ளினோம்.
வைகறை இலக்கிய வாசல் நிகழ்வை 'வில்' விஜயன் தன்னுடைய மிமிக்ரி மூலம் தொகுத்து வழங்கியது ஹைலைட். 'பாஸ்டன் பாலாஜி சென்னையை விட்டு பல்லாண்டுகள் ஆனாலும், இன்னும் சென்னைத் தமிழை மறக்காமல் இருக்கிறாரே' என்று ஜனகராஜாக மாறுகிறார். பெண்ணியத்தின் ரியாலிடியை கிருபானந்த வாரியாரைத் துணைக்கழைத்து சுட்டுகிறார். சிரித்து சிரித்து திலகபாமாவுக்கு விக்கலே எடுத்து விடுகிறது. இறுக்கமாகத் தொடர்ந்த களத்தை சுருக்கமாக நாலே வார்த்தையில் பல குரல் மன்னராக சொல்லி முடிக்கிறார். முழு நிகழ்ச்சியையும் கூர்ந்து கவனித்ததும், அவற்றில் கண்ட நுணுக்கமான அவதானிப்புகளை நகைச்சுவையாக பகிடி செய்ததும் அனைவராலும் வரவேற்கப்படுகிறது.
'பகிர்வு' என்னும் கூட்டத்தின் நோக்கத்திற்கேற்ப விழாவுக்கு வந்திருந்த படைப்பாளிகளையும், குறுகிய காலத்தில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த 'கல்வெட்டு பேசுகிறது' ஆசிரியர் சொர்ணபாரதியையும், எனக்கும் ஒரு விசிட்டிங் கார்ட் கொடுத்த தமிழ் மணவாளனையும் ஆர்வத்துடன் அனைவரையும் வரவழைத்த திலகபாமாவுக்கும் 'அமிர்தம்' ஆசிரியர் சூர்யா நன்று நவில்கிறார்.
ஜெயமோகனின் முன்னுரையுடன் கூடிய சிறுகதைத் தொகுப்பு, எம்.யுவனின் அணிந்துரை கொண்ட கவிதைத் தொகுப்பு, வெங்கட் சாமிநாதனின் மதிப்புரை தாங்கிய கலை விமர்சன கட்டுரைத் தொகுப்பு என்று தீவிர இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தாலும் படு எளிமையாகக் காணப்படும் அமிர்தம் சூர்யாவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. 'அதற்குத் தக' கவிதைத் தொகுப்பை தமிழ் மணவாளன் கையெழுத்துடன் பெற்றுக் கொள்கிறேன். 'கங்கா கௌரி' இதழ்கள் கிடைக்கிறது. சொர்ணபாரதியின் கவிதைகள் தாங்கிய 'மனவெளியளவு' கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.
அமெரிக்காவில் நண்பர்களுடன் பேசும்போது 'டாக்ஸ் ·பைல் பண்ணியாச்சா?' (இன்னும் இல்லை), 'நல்ல ப்ளம்பர் யாரு?' (வியட்நாமில் இருந்து வந்தவர்கள்) போன்ற உரையாடல்களே பகிரப்படும். சிவகாசி 'பாரதி இலக்கிய சங்க'மும் வைகறை இலக்கிய வாசலும் என் நெஞ்சாங்கூட்டில் என்றும் விலகாத தரமான சிந்தனையைக் கிளறும் பகிர்வை ஏற்படுத்திக் கொடுத்தது.
மற்ற மற்றும் பெரிய உரு புகைப்படங்கள்
Pagirvu | India Photos | தமிழ்ப்பதிவுகள்
ஊருக்குப் போனோமா வேலையப் பார்த்தோமா என இல்லாமல் ஒரு கலக்கல் 'பகிர்வு' செய்திருக்கீங்க. தமிழ் வலைப்பதிவுகள் பற்றி நிச்சயம் பெரிதும் பேசியிருப்பீர்கள்.
அந்துமணி போல போட்டோவிலும் பாஸ்டன் பாலா கறுப்பு வெள்ளை முத்திரைப் படம் இருக்கும் என நினைத்தேன். அரைக்கால் சட்டை வைத்தே கண்டுபிடிக்கமுடிகிறது.
வாழ்துக்கள்
சொன்னது… 4/07/2006 04:28:00 PM
ஃப்ளிக்கர் பக்கங்களில் அனைத்து புகைப்படங்களுக்கும் சிறுகுறிப்பு கொடுத்திருக்கிறேன் :-)
சிகாகோ எப்படி இருக்கிறது? இன்னும் குளிர்காலம்தானே!
சொன்னது… 4/07/2006 04:44:00 PM
பாலா,
சிகாகோ வந்து ஒரு வாரம் ஆகிறது. இடமாற்ற வேலைகளால் இந்த பக்கம் வரமுடியவில்லை. குளிர்காலம் முடிந்துவிட்டது, சில இரவுகள் கொஞ்சம் குளிராக உள்ளன.
சொன்னது… 4/16/2006 08:21:00 AM
கருத்துரையிடுக