செவ்வாய், மே 09, 2006

My Allergy to Rising Sun & Two Leaves

யாக்கை நிலையாமை

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.
- திருமூலர்
நான் வலைப்பதிவு ஆரம்பித்ததே இப்பொழுது எழுதும் இந்த மாதிரி டைரி குறிப்புகளுக்காகத்தான். கொஞ்ச மாதம் போன பின் வலைப்பதிவிற்காக வாசகர்களா, படித்து பாராட்டுபவர்களுக்காக பதிவா என்னும் தெளிவு பிறந்ததில் பின்னவரைத் தேர்ந்தெடுத்தேன். வேலையில் ஒரு கால், பதிவெழுதுவதில் ஒரு கால் என்று இரண்டும் குழம்பி குட்டையாகிப் போனது வேறு விஷயம்.

தொடக்கத்தில் சொல்ல நினைத்த மேட்டருக்கே மீண்டும் செல்கிறேன்.

எனக்கு உதயசூரியனையும் பிடிக்கவில்லை. இரட்டை இலைகளையும் பிடிக்கவில்லை. நான் கட்சி சின்னங்களை சொல்லவில்லை. வசந்தகால வருகையை சொல்கிறேன். இரண்டு வருடம் முன்பு வரை நானும் பெரும்பாலானவர்களைப் போல்தான் இயற்கையை ரசித்திருந்தேன்.

இலையுதிர் காலத்தில் ஷூ கால் சரசரக்க மிதிப்பதும், பனிக்காலத்தில் கார் சறுக்கலில் இடிபட்டும், வெயில் காலத்தில் பீச் தோறும் பிகினி தரிசித்தும், பூப்பூக்கும் காலத்தில் நிழற்படம் எடுத்துக் கொண்டும் துள்ளித் திரிந்த காலம் அது.

'ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவன் தான் மண்ணுக்குள்ள போன கதை உனக்குத் தெரியுமா' என்று மற்றவர் பொறாமையுடன் என்னைப் பார்த்து பாடினாலும் 'இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்' என்று முப்பதுகளிலும் சதிராட்டம் போட்டுக் கொண்டிருந்த நேரங்கள் அது.

எரிமலைக் கண்களுடன் எவராவது தென்பட்டால் 'Why are your eyes bloodshot?' என்று தெனாவட்டாகக் கேள்விக்கணை விடுத்து, நக்கலாக 'காலங்கார்த்தால தண்ணிய ஆரம்பிச்சாச்சா?' என்று எகத்தாளமாக வினாத் தொடுப்பேன்.

அவர்களும் சின்சியராக 'இதற்குப் பெயர் ஒவ்வாமை. மகரந்தச் சேர்க்கையை என் உடம்பு எதிர்ப்பதால் இது நிகழ்கிறது. இதைத் தவிர்க்க தினசரி மாத்திரைகள் உண்கிறேன். இருந்தாலும் காலையில் எழுந்தவுடன் மூன்று தும்மல், பல் தேய்த்தவுடன் நாலரை தும்மல், ஆடைகளுக்குள் புகுந்தவுடன் இரண்டு தும்மல் விழும். நாள் நெடுக மூக்கொழுகும். கண் சிவந்திருந்தால் பூப்பூக்கும் காலம் என்று அர்த்தம்' என்று விளக்கிக் கொண்டு செல்வார்கள்.

'உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. பச்சை பசேல் புல்லில் குப்புறத் தாச்சிக் கொண்டு புத்தகம் படிப்பதும், மரத்தில் மேல் ஏறி குரங்குகளுடன் ஓடிப் பிடித்து விளையாடவும், காடுகள் மலைகள் தேவன் கலைகளில் புரண்டு உருளவும் கொடுத்து வைக்காத வாழ்வும் வாழ வேண்டுமா?' என்று சிவந்த கண்களை மேலும் கொதிக்க விட்டு இருக்கைக்குத் திரும்பி, வாரயிறுதிக்கு எங்கு சுற்றுலா கிளம்பலாம் என்று நான் திட்டமிட்டிருப்பதை அவனுக்கு CC மின் மடலிட்டு மகிழ்வேன்.

'All good things were previously wicked things; every original sin has become an original virtue.' என்று நீட்சே சொன்னது பூமராங்காகத் திரும்பி, சென்ற வருடம் எனக்கும் மலர்சிதர் (pollen) ஒவ்வாமை (allergy) வந்து சேர்ந்தது. 'பூங்காற்றுப் புதிரானது... புது வாழ்வு சதிராடுது' என்று வாழ்க்கையேத் திருப்பிப் போடப்பட்டது.

இரவினில் ஆட்டம்; பகலிலே நாற்சுவருக்குள் அடக்கம். இதுவே என் வாழ்வின் முறையாகிப் போனது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் வசிப்பதால் எந்த கடற்கரைக்கு சென்று சூரியோதயத்தை ரசிக்கலாம் என்பது போய், சூரிய டிவி மட்டுமே வாடிக்கையாகப் போகியிருக்கிறது.

எந்த சினிமாப் பாட்டை கேட்டாலும் கண்ணெரிச்சல் நிழலாடுகிறது.

'கண்ணுக்குள் நூறு நிலவா? கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா?' என்றவுடன் 'கண்ணுக்குள் நூறு சூரியனா? கைகுட்டை கிளர் கண்ணீர் எழுப்பிய கதிரா?' என்று வைரமுத்துவாக்கிறது.

'ஏப்ரல், மேயிலே பசுமையே இல்ல' என்னும் பாடலின் முழு அர்த்தமும் இப்பொழுதுதான் புத்திக்கு உறைக்கிறது. 'ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயது; மாலை நேரம் வந்தால் பாட்டும் பாடும்...' என்னும் வரிகளில் உள்பொதிந்த கருத்துக்கள் வெண்குழல் விளக்காக ஒளிர்கிறது.

கொடி சுருட்டுப்பொதியை முதுகில் மாட்டிக் கொள்ளாத குறையாக இருந்த எனக்கு இன்று புல், பூண்டு, புன்னை மரம், புன்னாகவராளியால் ஒவ்வாமை குடியேறி பால் காய்ச்சி காலையில் இரு மாத்திரையும் இரவில் இரு மாத்திரையும் வசூலிக்கிறது. தமிழ்ப்பட வில்லனின் கே பாலச்சந்தர் ஸ்டைல் வசனம் போல் 'மலர் விட்டு மலர் தாவும் வண்டு நான்' என்று சொல்லிக் கொண்டிருந்தது போயே போயாச்சு.

ஆனால், எல்லாம் நன்மைக்கே என்பது போல், இதிலும் சில நன்மைகள் இல்லாமல் இல்லை. புல் வெட்டும்போது மீந்து போன மற்றும் தவறி விழுந்த வெடிகுண்டுகள், கொல்லைப்புறத்தில் கிடைப்பதில்லை.

க்ளோபல் வார்மிங், சுற்றுச்சூழல் மாசு எல்லாம் கப்ஸா என்று நினைத்த மனம் விநோத நிகழ்வுகளை முடிச்சுப் போட்டுப் பார்க்க துள்ளுகிறது.

உருப்படாத விஷயத்துக்கெல்லாம் கண்டுபிடிப்புகள் வெளியாகின்றதே... இந்த ஒவ்வா-மாயை நான் சுவாசிக்கும் காற்றின் அருகாமையில் இருந்து சமச்சீர் செய்ய கருவி வரும் காலம் எக்காலமோ!?

அக்காலம் வரை நான்கு சுவருக்குள் அடைந்து கிடக்க பணிக்கப்பட்ட, பின்தூங்கி முன் எழும், கண்களைக் கசக்கிக் கொண்டு நிற்கும்,
-இவண்


சில செய்திகளுக்கு சுட்டி காட்டியவர்: டேவ் பாரி.


| |

8 கருத்துகள்:

:-) உமக்காவது பரவாயில்லை, பத்து நாட்களாக எனக்கு ஜுரம், தலைவலி ஆகிய எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளுடனான அலர்ஜி இருந்து வருகிறது. வாஷிங்டன் பகுதி நாட்டில் அலர்ஜிக்கும் தலைநகராம்! கொடுமைடா சாமி!

So u r allergetic to pollen?? Since when u r getting this problem? I have the same problem like u. Hope pollen season in my place will be over in a week time. All the best.

பழையபடி ஃபார்முக்கு வந்ததற்கு வாழ்த்துகள்!

அப்புறம் ஒரு கேள்வி. தலைப்புகளை ஆங்கிலத்தில் வைப்பதன் மர்மமென்ன வாத்தியாரே???

---அலர்ஜிக்கும் தலைநகராம்---

கேள்விப்பட்டிருக்கிறேன்... ஃப்ளோரிடா பக்கம் ஏதாவது வேலை கிடைக்குதா என்று பார்க்க வேண்டும். சார்ஸ் வைரஸ் வந்தபோது மூக்கிற்கு பொருத்திக் கொண்டு செல்வது போல் ஏதாவது வாங்கி வைத்துக் கொண்டால் பிரச்சினை தீருமா என்று தெரியவில்லை.

---when u r getting this problem---

எல்லாம் சென்ற வருடத்தில் ஆரம்பித்தது... ரெண்டு வருஷம் முன்னாடி எவராவது, எனக்கு ஜோசியம் சொல்லியிருந்தால், வாய்விட்டு சிரித்திருப்பேன் :-)

---ஆங்கிலத்தில் வைப்பதன் மர்மமென்ன ---

டெக்னோரட்டி தேடலில் தமிழ் சொதப்புகிறது; சில சமயம் ப்ளாகர் (தமிழ் தலைப்புகளைக் கொண்ட) பதிவுகளை சாப்பிட்டு விடுகிறது; கூகிள் கூட ஆங்கில வார்த்தைகள் கொண்ட தளத்துக்குத்தான் நல்ல ராங்க் கொடுக்கிறது. பழைய பதிவுகளைத் தேடி சலித்ததில் straight forward ஆங்கிலத் தலைப்புகளைக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

(தமிழ்மணமும் முன்பு போல் கட் அண்ட் ரைட்டாக ஆங்கிலத்தை நிராகரிக்காமல், தூய தமிழில் இல்லாத பதிவுகளை அனுமதிப்பதும் ஒரு காரணம் :-D)

பா.பா, உங்களின் இந்தப் பதிவு அருமை. வலைப்பதிவுகளுக்காக வாசகர்கள் என்று கொண்டே நீங்கள் எழுதலாம் என்பது என் தனிக்கருத்து.

பல்லாண்டுகளாகவே எனக்கும் ஒவ்வாமைப் பிரச்சினை இருக்கிறது. ஒரு சில வருடங்கள் பெரும் பிரச்சினை இல்லை. இவ்வருடம் பொதுவாகவே எல்லா இடங்களிலும் அதிகம் போலும். பல்வித மாத்திரைகளை நானும் விழுங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். வேறு வழி இல்லை தான்.

செல்வராஜ் __/\__

இப்பதான் பார்த்தேன். மிக நன்று

I CAN'T TYPE IN TAMIL, EVENTHOUGH THE TAMIL FONT IS INSTALLED IN THE FONTS FOLDER OF CONTROL PANEL.
PL. HELP ME

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு