ஞாயிறு, மே 21, 2006

Sundara Ramasamy

நான் கண்ட நாய்கள் - சுந்தர ராமசாமி

சில நாய்கள்
வேளைகெட்ட வேளைகளில் உறங்கும்.

சில நாய்கள்
'ப்ளூக்'கெனக் கக்கி
அக் கக்கலை
அதி சுவாரஸ்யமாய் நக்கித் தின்னும்.

சில நாய்கள்
புட்டிப் புண் ஈக்கள் லபக்காக்க
முக்கி முதுகு வளைத்தும்
வாய்க்கு எட்டாது நகர்ந்தோடும்
புட்டியின் ஜாலம் புரியாது சரியும்.

சில நாய்கள்
இருந்த இருப்பில்
கத்தத் தொடங்கி
நிறுத்தத் தெரியாமல்
அக்கத்தலில் மாட்டிக்கொண்டு சுழலும்.

கொடும் வெயிலில்
சில நாய்கள்
பெண் துவாரம் தேடி அலைந்து
ஏமாந்து
பள்ளிச் சிறுமிகளை விரட்டும்.

இவ்வாறு
இவ்வாறு
இவ்வுலகில்
நான் கண்ட நாய்களின் சீலங்கள்
வாலுக்கு ஒரு விதம்.

என்றாலும்
உண்ணும் உணவில் குறுக்கிட்டால்
பட்டெனப் பிடுங்குவதில்
இவையெல்லாம்
நாய்கள்.

நன்றி: ஞானரதம் டிசம்பர் 1973, சுந்தர ராமசாமி

வாரயிறுதி தொலைபேசி உரையாடலில் இந்தக் கவிதையைப் பகிர்ந்து கொண்ட நண்பர் பிகே சிவக்குமாருக்கு நன்றி.| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு