சனி, ஜூன் 24, 2006

Chitti PG Sundarrajan - Memoir

சிரிக்க வைக்கிறார் சிட்டி - திருப்பூர் கிருஷ்ணன்

விஷமம், நையாண்டி, கிண்டல், கேலி, நகைச்சுவை ஆகிய எல்லா அர்த்தங்களையும் புலப்படுத்துகிற மாதிரி தமிழில் ஒரே சொல் உண்டா? உண்டு.

அந்த சொல்தான் 'சிட்டி!' தி.ஜா.வின் நெருங்கிய நண்பராயிருந்த எழுத்தாளர் சிட்டி பி.ஜி. சுந்தரராஜன்.

வெறும் 94 வயது ம்ட்டுமே ஆன குறும்புக்கார இளைஞர்! அவருடன் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு மினி பேட்டி:

கே: நீங்கள் எழுதிய முதல் படைப்பு என்ன? எந்த வயதில் எழுதினீர்கள்?

ப: என் ஐந்து வயதிலேயே அதை எழுதி விட்டேன். அதன் சிறப்பு காரணமாக, எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு, இன்றுகூட ஏராளமான தமிழர்கள் அந்தப் படைப்பை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். அனா, ஆவன்னா ஆகிய உயிரெழுத்துகள் தான் அந்தப் படைப்பு!

கே: முதல் கதையை எழுதியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

ப: ஒருவேளை என் கதைக்கு நோபல் பரிசு கிடைத்து விட்டால், பரிசை எந்த வாக்கியங்களால் நிராகரிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்!


இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார் சிட்டி. சிடுமூஞ்சிச் சிகாமணிகள் முகத்தில் கூட, ஒரு சின்னப் புன்னகைக் கீற்றையாவது மலரச் செய்கிற சாமர்த்தியம் அவருக்கு உண்டு.

சிட்டி, தி.ஜா.வின் 'அம்மா வந்தாள்' நாவல் பற்றி என்னிடம் ஒரு கமெண்ட் அடித்தார். அதன் கதாநாயகியான அலங்காரத்தம்மாள் கள்ளக் காதலனுடன் உறவாடுபவள். அவள் தன் பாவத்தைத் தொலைக்க, கடைசியில் தன்னந்தனியே காசிக்குப் போக நினைப்பதாய் நாவல் முடியும்.

'காசிக்குப் போகும்போது தன் கள்ளக் காதலனையும் கூட்டிக் கொண்டு போவதாகத்தான் அவர் நாவலை முடித்திருக்க வேண்டும். அலங்காரத்தம்மாளுக்கு அந்த அளவுக்குக் கொழுப்பு ஜாஸ்தி!' என்றார் சிட்டி. இதை தி.ஜா.விடம் சொன்னேன். அவர் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்.சிட்டியின் தனி சிறப்பு, பேசும்போதே சடாரென்று அழகழகான ஆனால் விஷமம் நிறைந்த குட்டிக் கதைகளை உண்டு பண்ணிச் சொல்வது. கும்பகோணத்திலிருந்து ஓர் எழுத்தாளர் வந்தார். சிட்டியைப் பார்க்க விரும்பினார். அழைத்துச் சென்றேன்.

சிட்டி என்னிடம் 'உனக்கு ராமாயணம் தெரியுமோ?' என்று ஆரம்பித்தார். எனக்கு ஜாக்கிரதை அதிகம். ஏதோ கொஞ்சம் தெரியும் என்று தயக்கத்தோடு சொல்லி வைத்தேன். சிட்டி தன் ராமாயணத்தை ஆரம்பித்தார்.

"ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் காட்டில் போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென லட்சுமணன் "அண்ணா, நான் ஏன் உன்னுடன் வர வேண்டும்? உன்னைத்தானே அப்பா காட்டுக்குப் போகச் சொன்னார்? நீ மனைவியோடு வந்திருக்கிறாய். நான் ஊர்மிளையை விட்டு வந்துவிட்டேன். சே!" என்று சலித்துக் கொண்டு திரும்பி நடந்தான்.

சீதை "பிராணநாதா! நான் இதுவரை படித்த எந்த ராமாயணத்திலும் இது போன்ற சம்பவம் வந்ததில்லையே!" என்றாள்.

"கொஞ்சம் பொறு. புரியும்" என்றார் ராமர். சற்று நேரம் சென்றது. லட்சுமணன் ஓடோடி வந்தான்.

"அண்ணா, நான் ஏன் அப்படிப் பேசினேன் என்று எனக்கே தெரியவில்லையே! நானே விரும்பித்தானே உன்னுடன் வந்தேன். உன்னைப் பிரிந்து என்னால் எப்படி இருக்க முடியும்!" என மன்னிப்புக் கேட்டுக் கொண்டு உடன் நடந்தான்.

ராமன் சீதையிடம் "புரிந்ததா?" என்று கேட்டார்.

"புரியவில்லையே!" என்றாள் சீதை.

"நாம் இதுவரை நடந்து வந்த பூமி கலியுகத்தில் கும்பகோணம் என்று ஷேத்திரமாகப் போகிறது. அது தன் சுபாவத்தை இப்போதே காட்ட ஆரம்பித்து விட்டது!" என்றார் ராமர்!"

(வந்த் எழுத்தாளர் வெகு நேரம் சிரித்து அவர் கண்ணில் நீர் கட்டிக் கொண்டது. இந்தக் கதையில் கும்பகோணம் என்ற ஊர், வரும் எழுத்தாளரைப் பொறுத்து திருநெல்வேலி, மதுரை என்று வித்விதமாகப் பெயர் மாற்றம் கொள்ளும்!)


சத்தியவான் சாவித்திரியை நினைவுபடுத்தும் வகையில் 'காரடையான் நோன்பு' என்று ஒரு பண்டிகை. பெண்கள் வெல்ல அடை தட்டி அந்தப் பலகாரத்திக் கடவுளுக்குப் படைப்பர்கள். பின் மங்கலச் சரடைக் கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். அந்த அடை சிட்டிக்குப் பிடிக்காது. அதை எதிர்த்து அவர் 'நவீன சாவித்திரி' என்று ஒரு கதை உண்டு பண்ணியிருக்கிறார்!

கணவன் உயிரைத் தருமாறு எமனிடம் வேண்டினாள் சாவித்திரி. எமன் தரமுடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டான். வேறு வழியில்லாத அவள், ஒரு யுக்தி செய்தாள். பலகாரம் சாப்பிட்டுச் செல்லுமாறு எமனை உபசரித்து இந்த் அடையைச் செய்து போட்டாள். சாப்பிட்டான் எமன். உலகில் இப்படியும் ஒரு பலகாரமா என்று தாளாத துக்கத்தில் எமன் உயிரை விட்டுவிட்டான். அதனால் பிழைத்தான் சத்தியவான்!

(பெண்கள் கௌத்தில் கட்டிக் கொள்ளும் சரடு ஒருபுறமிருக்க, இந்தக் கதையைக் கேட்பவர்கள் சிட்டி விடும் சரடை எண்ணிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்!)


சிட்டி பரமாச்சாரியாளின் பக்தர். இலக்கியத்தில் பழங்கால இரட்டைப் புலவர்கள் போல், இரட்டையரில் ஒருவராக இயங்குவஹிலேயே மகிழ்ச்சி காண்பவர்.

 • கு.ப.ரா.வுடன் 'கண்ணன் என் கவி'
 • தி.ஜா.வுடன் 'நடந்தாய் வாழி காவ்ரி
 • சிவபாத சுந்தரத்துடன் நாவல், சிறுகதை வரலாறுகள்
 • பெ.சு. மணியுடன் வ.ரா. வரலாறு

  எனச் சிட்டி இணைந்து படைத்த நூல் ஒவ்வொன்றும் பெரும் சாதனை.

  பி.ஜி. உட்ஹவுஸ் தனிப்பட்ட முறையில் சிட்டிக்கு எழுதிய கடிதம் ஒன்று சிட்டியிடம் உண்டு. வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ். சுவாமிநாதனின் மாமியாரான எழுத்தாளர் கிருத்திகாவும் சிட்டியும் பைண்டிங் நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொண்ட மிக நீண்ட கடிதங்கள் இலக்கிய வரலாறாய்த் திகழ்பவை. எழுத்தாளர் நரசய்யா எழுதிய, 'சாதாரண் மனிதன்' என்ற சிட்டியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் அவர் பெருமையைப் பேசுகிறது.

  தில்லி, பாண்டிச்சேரி போன்ற சில இடங்களில் சில கூட்டங்களுகு நானும் சிட்டியும் ஒன்றாகப் போயிருக்கிறோம். அப்போது அவருடன் த்ங்கிக் கழித்த நாட்கள் நான் மலர்ச்சியுடன் சிரித்துச் சிரித்து வாழ்ந்த பொன்னானா நாட்கள். அறிவாளிகள் என்றால், நகைச்சுவை உணர்வற்று சீரியஸ் ஆகத்தான் இருப்பார்கள் என்ற பொதுவிதிக்குச் சிட்டி விதிவிலக்கு. எந்த சோக்த்தாலும் பாதிக்கப்படாத அவரது அபாரமான நகைச்சுவை உணர்வுக்கு இயற்கை தந்த் அன்புப் ப்ரிசுதா அவருடைய முதிய வயது.

  டிசம்பர் 2003
  சுவடுகள் - திருப்பூர் கிருஷ்ணன்
  வெளியீடு: திருப்பூர் குமரன் பதிப்பகம்


  அஞ்சலிக் குறிப்புகள்: பத்ரி | நா கண்ணன்  | |

 • 0 கருத்துகள்:

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு