செவ்வாய், ஆகஸ்ட் 08, 2006

Cars, Dead Man's Chest - Siesta & Cerebral aneurysm

பொன்ஸ் பக்கங்கள் :: கார்ஸ் | Instant Kaapi: Cars - a boring ride to nowhere

படம் பார்த்துவிட்டு, வெளியில் வந்தால் பார்க்கும் ஒவ்வொரு காருக்கும் "ஏன் கண், வாய் இல்லை?" என்று யோசிக்கத் தோன்றியது. கார்கள், ட்ரக்குகள் எதுவுமே பேசாமல் இருப்பது ரொம்ப அசாதாரணமானது என்னும் உணர்வு விலக ஒரு அரை மணி ஆனது.

படம் பார்க்கும்போது தூக்கம் சொக்கி வழிவது இயக்குநருக்கு செய்யும் துரோகம். முதன் முதலாக நான் தூங்கியது 'காந்தி' திரையிட்ட ஈகா அரங்கில். ஓரத்து இருக்கை. ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் புலமைக்கு எட்டாத பரங்கியர்களின் உச்சரிப்பு. அப்பொழுது குறட்டை விடாதது எல்லோருக்கும் மகிழ்ச்சி தந்தது. மெட்ராஸ் (அப்பொழுது சென்னை கிடையாது) வெயிலுக்கு ஏற்ற குளிரூட்டலில், பென் கிங்ஸ்லி சட்டையைக் கழற்றி ஆற்றில் விட்டுக்கொண்டிருக்க, நான் உறங்கினேன்.

ஞாயிறு மதியம் தூக்கம் வராது. சாப்பிடவுடன் குடும்பத்தினர் (அட... உறவுகள்!) தாச்சிக் கொண்டிருக்க, நான் மட்டும் மத்திய அரசின் அவார்ட் படம் பார்க்கும் கூத்தாடிக் கோலமாய் சோபாவில் எத்தனித்தால், கிடந்த கோலமாக மாறும். மலையாளப் படத்தில் பசுவை விரட்டும் காட்சிகள் காணும் பாக்கியம் வாய்த்தால், மோன நிலையை எட்டும் ் வேகம் சித்திக்கும்.

கடைசியாக கொட்டாவி விடாமல் இருக்கையிலே தலையை சாய்த்தது மணி ரத்னத்தின் 'உயிரே'. பயணக் களைப்புடன் இந்தியா சென்றிருந்த நேரம். 'தில்ஸே'வை பாஸ்டனின் பெரிய திரையில் ஏற்கனவே கண்ணுற்றிருந்த ஜெட்லாக் அலுப்பு. ஈஞ்சம்பாக்கம் திறந்தவெளி ப்ரார்த்தனாவின் சுவர்க்கோழி அழைப்பு. ஜம்மென்று உறங்கினேன்.

'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' குறுந்தட்டுடன் விடாக்கண்டன் - கொடாக்கண்டனாக கண்விழிப்பு போராட்டங்கள் தொடர்கிறது. முதல் பாகத்தை முடிக்காமல், மற்ற இரண்டையும் பார்க்க கூடாது என்பதால் முதல் வட்டைப் போட்டு அரை மணி நேரத்தில் 'கொர்' என்று சயனித்து விடுகிறேன்.

மீண்டும் 'கார்ஸ்' படத்தில் கண்ணயர்ந்தேன். 'மான்ஸ்டர்ஸ் இன்க்', தி இன்க்ரெடிபிள்ஸ் என்று ஆசை ஆசையாய் எதிர்பார்ப்பு. முந்தைய பிக்ஸார் ஆக்கங்களுடன் ஒப்பிட முடியாத திராவை. இழு இழுவென்று நீட்டி முழக்கி, 'எப்பொழுது அப்பா படம் முடியும்?' என்று வினவ வைத்தார்கள்.

'லட்சியத்தை சிகரத்தை அடைவதை விட, செல்லும் பாதையை கருத்தில் கொள்' என்னும் அசத்தலான கருத்தை உப்புக் காரமில்லாமல் தந்திருந்தார்கள். ஆனால், படம் முடிந்து வெளியே வந்தவுடன் 'நம்ம கார் பேசுமா அப்பா?' என்று சேரியமாய் வினவ வைத்திருந்தார்கள்.

அதற்கு அடுத்த வாரம் பரிகாரம் தேட 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்: டெட் மேன்ஸ் செஸ்ட்' (விரிவான & உருப்படியான விமர்சனம்: Pirates of the Caribbean: Dead Man's Chest Movie Review - Pirates of the Caribbean: Dead Man's Chest Movie - The Boston Globe). பாஸ்டன் க்ளோப் 'போகாதே போகாதே பொன்னுரங்கம்... பொல்லாத படம் உன்னைக் கொன்று விடும்' என்று அறிவுரைத்ததைக் கேளாமல், திரையரங்கில் நித்திராதேவியின் அனுக்கிரஹம் கூட கிடைக்காதவாறு தலைவலி கொடுத்தார்கள்.

சூப்பர்மேன் அல்லது டெவில் வியர்ஸ் ப்ராதா சென்றிருக்கலாம்.




| |

4 கருத்துகள்:

சார் இதல்லாம் ஓவர்,

கார்டூன் படம் பார்த்திட்டு தூக்கம் வருதுன்னு சொல்லுறது.... நான் வேற அந்த படத்தை பார்க்கணுமினு ஆசைல இருக்கேன்... :-)))

பெங்களூர்'ல வெள்ளிகிழமைதான் ரிலிஸாம்...

ராம்,

காதலியுடன் செல்வதற்கு ஏற்ற படம். இரண்டு மணி நேரம் சூரியனில் இருந்து தப்பிப்பதற்கும் உகந்த படம். வீட்டில் இருந்தால் 'அதை செய்.. இதை முடிச்சுடு' என்று ஏவுகணைகள் இலக்குகளை குறிவைத்தால் ஓடி ஒளிய சாலச் சிறந்த படம். அதற்கு மேல்....

Instant Kaapi: Cars - a boring ride to nowhere: "Now, you may be thinking this is rant from a guy who was probably pissed off at something else and ended up blaming this innocent Movie. I did rethink from that perspective, but how about a four year-old who, for most part of the movie, kept asking, 'OK, can we now go to the water park?' (starting at minute 20). That sure is a bad sign."

//காதலியுடன் செல்வதற்கு ஏற்ற படம். இரண்டு மணி நேரம் சூரியனில் இருந்து தப்பிப்பதற்கும் உகந்த படம்.//

ரெண்டுமே இங்க இல்லை... :-(((

என்னோமே இங்கிலிபிஸ்ல போட்டு இருக்கிங்க... ஆனா அது கண்டிப்பா என்னை திட்டலைன்னு தெரியுது...:-)

----என்னோமே இங்கிலிபிஸ்ல போட்டு இருக்கிங்க... ----

நீங்க என்ன மாதிரியா... அப்படியென்றால், குறுந்தட்டில் 'துணையெழுத்து' (சப்-டைட்டில்)களுடன் பார்ப்பதுதான் பெஸ்ட் கண்ண பெஸ்ட்டு

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு