சனி, ஆகஸ்ட் 12, 2006

Oru Kai Osai - Bhagyaraj

ஒரு கை ஓசை

'முந்தானை முடிச்சு'க்கு முந்தி வந்த படம் (என்று சின்ன வயது ஞாபகம் சொல்ல வைக்கிறது). பதினெட்டாவது வாரமோ, பத்தொன்பாவது வாரமோ அண்ணா சலை திரையரங்கொன்றில் ரசித்ததை மீண்டும் கே டிவி இட்டது.

'முந்தானை முடிச்சு' படத்தில் நாயகனுக்கு மணமுடித்து குழந்தை இருக்கும். அவரின் மீது ஒரு தலைக் காதலாய் ஊர்வசி. நடுவில் முக்கோணம் வராவிட்டாலும் தொட்டுக்கொள்ள தீபா. 'மௌன கீதங்கள்' முதற்கொண்டு எல்லா திரைக்கதையிலும் முக்கிய பங்கு வகிக்கும் சின்னஞ்சிறிய குழந்தை இங்கும் பல காட்சிகளில் ஹீரோவாக இருக்கிறது.

நாயகனுக்கு வாய்பேச வராது. மருத்துவக் கல்லூரி காதலில் கைக்குழந்தையுடன் நாயகி. காதலன் இருவுள் வாயில் விபத்தில் இறந்ததாக நினைக்க உச்சகட்டத்தில் வந்து தொலைக்கிறான். முடிவில் சுபம்.

'கல்லாப்பெட்டி' சிங்காரம் பெட்டிக்கடை முதலாளியாக நகைச்சுவையிலும் குணச்சித்திரத்திலும் உறுதுணையாக அசத்தியிருக்கிறார். இவருக்கும் கவுண்டமணி வயதுதானே ஆகியிருக்கும்? எங்கே போனீங்க சார்! யதார்த்தமான 'ஆண்பாவம்' ஸ்டைல் நக்கல் கட்சி:

'டேய் இந்த பாட்டிலை தொட்டுடுவியாடா?'
தொடுகிறான்.

'பயந்துண்டே தொடறான் பாரு... அடேய்... கையில எடுத்துடுவியாடா?'
எடுக்கிறான்.

'போடா... எடுத்தாப் போதுமா? ஓட முடியுமாடா உன்னால?'
ஓட்டமெடுத்து விடுகிறான்.

'விடுங்க தம்பீ... மொகத்த நல்லா பாத்து வச்சுகீட்டீங்களா? நாளைக்கு பஞ்சாயத்தில் அடையாளம் காட்டறதுக்கு ஞாபகம் வச்சுக்குங்க!'

'சங்கிலி' முருகனுக்கு முதல் படம் (தானே?!). மாடக்குளம் அழகர்சாமி & சிதம்பரநாதன் அமைத்த சிலம்பச் சண்டைக் காட்சிகளில் பிய்த்து உதறியிருக்கிறார். நாயகனுக்கு ஒரு ஃபைட் சீன் கூட கிடையாது. இருந்தாலும் பாக்யராஜ், பாக்யராஜ்தான் என்று சொல்ல வைத்த காலம்.

'நடந்தப்புறம் வருவது போலீஸ்; தப்பு நடக்கும்போது தட்டிக் கேட்பான் சங்கிலி' என்றவுடன் சமீபத்திய லண்டன் நிகழ்வில் முன்பே தடுத்தாட்கொண்ட இங்கிலாந்தின் துப்பறியும் நிறுவனம் ஸ்காட்லாண்ட் யார்டும், ஜேம்ஸ் பாண்டின் எம்.ஐ.6-ம் நிழலாடியது.

கவிஞர் முத்துலிங்கத்தின் 'முத்து தாரகை வானவீதி வர' கேட்பதற்கும், ரசிப்பதற்கும் இனிய பாடல். அம்பிகாவுக்கு டூப் போட்ட மாதிரி தோற்றத்துடன் அஸ்வினி. சேலை முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு வரும்போதெல்லாம் 'நண்டு' நினைவுக்கு வருகிறது.

'காக்காய், சம்பளம், தென்னம்புள்ள, வைப்பாட்டி என்று வயது வந்த இரட்டுற மொழிதலுடன் கூடிய சிதம்பரநாதனின் டைட்டில் பாடலில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை தெரிகிறது. எல்.ஆர். ஈஸ்வரிக்கும் வாய்ப்பு உண்டு.

அமிஞ்சியார் மடம், தெற்கே போனால் திங்களூர், வடக்கில் போனால் திருவள்ளூரு; ஆறு, குளம் வேண்டுமென்றால் வெள்ளாங்கோவில் என்கிறார். கோவைக்காரர்கள்தான் கரைபுரண்டோடும் ஆற்றின் பெயரை சொல்லவேண்டும். கிராம வாசனை நிறையவே நெடுக வருகிறது. 'கீரமுண்ட' என்று ஆரம்பிக்கும் குடுமிப்பிடி சண்டைகளும் உண்டு. கம்பஞ்சோறும் உண்டு.

'தூறல் நின்னு போச்சு' கும்பல் அப்படியே இடம்பெயர்ந்திருந்தது. 'கண்ணத் தொறக்கணும் சாமீ' இயக்கிய பழனிச்சாமி, 'மேரி ப்யாரி தில் கீ ராணி' பாடிய கோவிந்தராஜ் என்று நண்பர் குழாத்துடன் உலா வருகிறார்கள். 'காதலா காதலா'வில் கூர்க்கா வேடம் போடும் 'ரகுத்தாத்தா' ஹிந்தி பண்டிட், தூய தமிழில் நாய் வளர்க்கிறார்.

'தேவர் மகன்' போல் ஆற்றில் விஷம் கலப்பது; 'மூன்றாம் பிறை' போல் 'கலர் மாறிப் போச்சு' நாய்க்குட்டி; வேறு பல படங்களில் பார்த்த, பிடித்தவர்களின் பெயரை நெஞ்சில் பச்சைகுத்திக் கொள்வது; என்று சட்சட்டென்று அட போட வைத்த புத்திசாலி திரைக்கதை, பாக்யராஜின் ஐ.எஸ்.ஐ. முத்திரை.

முந்தானை முடிச்சில் கல்சோறு நிறைவேற்றுவார் ஊர்வசி. இதில் ஆணிசெருப்பு அணிந்து ஒன்பது சுற்று வலம் வருகிறார் நாயகன். அக்குபஞ்சர் சிகிச்சையை அந்த நாளிலேயே மெய்ஞானத்துடன் கலந்து விஞ்ஞானமாய் கிராமியப் பழக்கவழக்க நோன்புகள் கொண்டு வந்திருப்பதை நையாண்டி கலந்த பக்தியுடன் கொண்டு வந்திருக்கிறார்.

அதேபோல், வெளிச்சத்துக்கு வரவேண்டிய சமூக அவலங்களையும் மசாலாப் படத்தில் அன்றே கொணர்ந்திருக்கிறார். ஊர் காவலாளி வீரன் - 'சங்கிலி' முருகன் வெட்டியானாக இருப்பதால் 'இரட்டை டம்ளர்' முறைக்கு அடிபணிந்து வாழ்கிறார். க்ளைமாக்சில் வில்லன் கும்பலிடம் அடிவாங்கி மரிக்கும் தருணத்தில் 'தயவு செய்து திருந்துங்க... ஊருக்குள் எல்லாருக்கும் ஒரே டம்ளர் கொண்டு வாங்க' என்று வேண்டுகோள் விடுத்து இறக்கிறார்.

ரஜினியின் உற்ற தோழர், 'வள்ளி' பட இயக்குநர் நட்ராஜ், மைனராக வில்லத்தனம் செய்கிறார். கீழ்வெண்மணி கூலிப் பிரச்சினை போன்ற சித்தரிப்பு இங்கு இடம் பிடிக்கிறது. உள்ளுர் பிரச்சினைக்கு பக்கத்து ஊரில் இருந்து கூலிக்கு ஆட்களைக் கூட்டி வருவதும், அசலூர் ஆசாமிகளைத் தடுப்பவர்கள் கொலை செய்யப்படுவதும் இறுதியில் மேலோட்டமாக வருகிறது.

அதெல்லாம் இருக்கட்டும். இந்தப் படம் இரா முருகனுக்கு ஏன் ரொம்ப பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? (படிக்க: நான் அறியும் அசோகமித்திரன் (அல்லது அசோகமித்திரனை முன்வைத்துக் கொஞ்சம் நினைவலைகள்))




| |

6 கருத்துகள்:

பாக்யராஜ் படங்களில் மிகச்சிறந்த படம். நிறைய முறை பார்த்திருப்பேன். ஆனால் காட்சிகள் நினைவில் இல்லை.

<<'கல்லாப்பெட்டி' சிங்காரம் பெட்டிக்கடை முதலாளியாக நகைச்சுவையிலும் குணச்சித்திரத்திலும் உறுதுணையாக அசத்தியிருக்கிறார். இவருக்கும் கவுண்டமணி வயதுதானே ஆகியிருக்கும்? எங்கே போனீங்க சார்!>>

உயிருடன் இல்லை என்று எண்ணுகின்றேன்.

- சிமுலேஷன்

அந்த நேரத்தில் பாக்கியராஜின் ஒரு படத்தையும் நர்னும் கணவரும் விட்டு வைப்பதில்லை. மிகவும் ரசித்துப் பார்ப்பேன். ஒரு கை ஓசையின் பல காட்சிகள் மறந்து விட்டன. ஆனாலும் பாக்கியராஜ் தற்கொலை செய்வதற்காக முழங்கால் உயரத் தண்ணிக்குள்(கிணறு என நினைக்கிறேன்)குதித்து விட்டு அஸ்வினியின் முன் அசடு வழிவது ஞாபகமாக இருக்கிறது. கல்லாப்பெட்டி கூட வராத படங்குளும் குறைவு.

சுவரில்லாத சித்திரங்கள் கொஞ்சம் சோகப் படம். அதில்தான் தென்னை மரத்திலை தென்றல் அடிக்குது.. என்று சைக்களில் ரவுண்ட் காட்சி என்ற ஞாபகம்.

"ஒரு கையில் ஓசை எழுப்பியவன்!
சுவரில்லாமல் சித்திரம் வரைந்தவன்!
மவுனங்களில் கீதம் வாசித்தவன்!"

நண்பர்களுடனான பொங்கலின்போது எங்கப்பாரு பாக்கியராஜ் பற்றி சிலாகித்துச் சொல்வது... :)

----ஆனால் காட்சிகள் நினைவில் இல்லை----

தம்பி, பாக்யராஜ் வாய் பேச இயலாதவர். தற்கொலை முயற்சிகள் தோல்வியில் முடியும். சிரித்து மகிழ்ந்த படம் என்றுதான் நினைவில் இருந்தது. எண்பதுகளின் படத்திற்கு உரிய கூறுகளுடன் இருந்தாலும், ரசித்து அமைதியாய் பார்க்க முடிந்தது.


சிமுலேசன், நன்றி :-|

---பாக்கியராஜின் ஒரு படத்தையும் நானும் கணவரும் விட்டு வைப்பதில்லை.---

சந்திரவதனா, ஞானப்பழம் வரை நானும் கூட தவறாமல் பார்த்து வந்தேன். அதன் பின் ஏமாற்றங்களை தாங்க முடியாமல் நிறுத்தி விட்டேன்.

----சுவரில்லாத சித்திரங்கள் கொஞ்சம் சோகப் படம்.---

அப்பொழுது 'ஏ' என்பதால், இன்னும் பார்க்கவில்லை :-)
'விடியும் வரை காத்திரு' படமும் கேடிவியில் வருவதற்காக காத்திருக்கிறது.

----எங்கப்பாரு பாக்கியராஜ் பற்றி சிலாகித்துச் சொல்வது----

இளமைக்கால நினைவுகள் ;-)

பாக்கியராஜின் பழைய படங்களை மீண்டும் பார்க்கவேண்டும் என ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள்.

தேடல் துவங்கியதே...

சரி இம்சை பற்றி எப்ப விமர்சனம் போடப்போறீங்க?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு