வியாழன், செப்டம்பர் 21, 2006

Chikungunya - Lots of Talk; Little Action; Zero Results

வெற்றிகரமான நூறாவது நாள் - சிக்குன் குன்யா

சிக்குன்-குனியாவால் அதிமுக பிரமுகர் ஆரம்பித்து என்னுடைய அம்மா, அண்ணன் வரை பலரும் அவதிப்பட்டு, சில பலர் (ஏறக்குறைய 150க்கும் மேற்பட்டோர்) உயிரையே இழந்திருக்கிறார்கள்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி 'ஆராய்ச்சி மையம்' ஆரம்பித்து வைத்திருக்கிறார். நாடு தழுவிய நோக்கில், பாதிக்கப்பட்டவர்களின் குணநலன்களை ஆராய்ந்து கூடிய சீக்கிரமே தடுப்பு நடவடிக்கைகளை துரிதப் படுத்துவார் என்று நம்புவோமாக.

தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலன் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், அஇஅதிமுக பிரமுகர்கள் விடும் அறிக்கைகளுக்கு மறுப்பு அறிக்கைகளை உடனுக்குடன் விட்டுக் கொண்டேயிருக்கிறார். மருத்துவ முகாம்களை திறந்து வைக்கிறார்.

சிக்கூன் குனியா தடுப்பை அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த தவறியிருக்கிறது.

கொசு மூலம் சிக்கன் - குனியா காய்ச்சல் பரவுவதால் பழைய தண்ணீரை தொட்டிகளில் வைத்துப் பயன்படுத்தக்கூடாது என்றும்; அதற்காக தொட்டிகளைக் கழுவி சுத்தம் செய்யவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு 'அறிவிப்புகள்' தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, அரசு பணத்தை அள்ளி விடுவதாகவே செய்திகள் உணர்த்துகிறது. இருந்தாலும் அது செயலாக மாறி பலன் தராமால், அதிகாரிகளின் விழலுக்கு இறைத்த நீராக மாயமாகி, சாதாரண பொதுமக்களின் மரணங்களாக மாறிக் கொண்டே இருக்கின்றன.

தமிழ்நாடு முழுக்க சீரான நடவடிக்கை, அதிகாரிகளை இறப்புகளுக்கு காரணமாகப் பார்த்து அவர்களிடம் பயம் கலந்த அக்கறையை வரவழைத்தல், கிராமவாசிகளிடம் துரித கவனிப்பு, அவசர கால நிலையாக கொசு ஒழிப்பு & தடுப்பு துரிதப்படுத்தல்கள் போன்றவை தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் கூட புதிய அரசிடம் இருந்து கிடைக்காமல் அலட்சியப்போக்கு தொடர்கிறது. பல வீடுகளில் சாவு செய்தி மூன்றாம் பக்க மூலையின் எட்டாம் பத்தியாகி புரட்ட வைத்து செல்கிறது.

இந்த அறிக்கைப் போர் படிக்க முடியாதவர்களுக்காகவும், நல ஒதுக்கீடுகளின் பலனை அனுபவிக்காமல் வாடுபவர்களின் நினைவாகவும், ஒருவர் சாவு என்று செய்தியாகி வாடி வதங்குபவர்களின் நினைவாக சில இணைய செய்தித் துளிகள்:


1. மா.கலை அரசன்
"சிக்கூன் குனியாவினால் பாதிக்கப்படுபவர்கள் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை கடுமையான ஜூரத்திற்கு உட்படுகின்றார்கள், கூடவே உடலில் உள்ள அத்தனை மூட்டுக்களிலும் தாங்க முடியாத வலி. இந்த மூட்டு வலி ஒரு வாரம் முதல் ஆறு மாதம் வரை தொடரலாம். நோய் வாய்ப்பட்டவர் காலைக்கடனை கழிக்கச்செல்ல மற்றவர் துணை தேவைப்படலாம் [இதில் தப்பிப்பிழைப்பவர் உண்மையில் புண்ணியம் தெய்தவராவார்]. பலருக்கு மூட்டு வீக்கமும் ஏற்படுகின்றது. கொஞ்சம் குண்டானவர்கள் பாடுதான் திண்டாட்டம்.

அரசின் கையாலாகாத்தனத்தாலும், நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் அரசு ஏற்படுத்த தவறியதாலும் மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய தவறான எண்ணமும் பய உணர்ச்சியுமே மேலோங்கி நிற்கிறது. இது மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய வேண்டாத பீதியையும் கலக்கத்தையுமே ஏற்படுத்துவதுடன் அரசு மீதும் மக்களுக்குள்ள நல்லெண்ணெத்தையும் சீர்குலைப்பதாகவே அமையும். எனவே அரசு இனியேனும் விரைந்து நடவடிக்கை எடுத்து சிக்கூன் குனியா பரவலாக உள்ளதை பெருந்தன்மையோடு ஒத்துக்கொண்டு, அந்நோய் பரவால் தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு, அந்நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியையும் மக்களிடம் ஏற்படுத்த முனைய வேண்டும்." (முழுவதும் படிக்க)



செப்டம்பர் 20, 2006 - தினமணி செய்திகள்
விழுப்புரம் அருகே சிக்குன்-குனியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் சிக்குன்-குனியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் செவ்வாய்க்கிழமை இறந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சிக்குன்-குனியாவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை பெறுகின்றனர். புதுக்கருவாட்சி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் கண்ணன்(50). இவர் கடந்த 10 நாள்களுக்கு முன் சிக்குன்-குனியாவால் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த இவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

இவரது உறவினர்கள் சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு வந்தனர்.

சென்னையில் வேகமாகப் பரவி வரும் சிக்-குன் குனியா காய்ச்சலைத் தடுக்கவும், பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கவும், மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் உள்ள 10 மண்டலங்களிலும் மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறது. தி.நகர் பஜனை கோயில் தெருவில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தி.நகர் பகுதியில் சிக்-குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும், மருந்துகளும் வழங்கப்பட்டன.

மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த, மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் பெ. குகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியது:

4,000 பேர் பாதிப்பு: கடந்த 4 மாதங்களில் மட்டும் சிக்-குன் குனியா காய்ச்சலால் 4,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 5 வயதுக்குக் குறைவான குழந்தைகள் 1,062 பேர். 3 லட்சத்துக்கும் மேலான வீடுகளில் மருத்துவ பரிசோதனையும், 211 இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற்றன. பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் வடசென்னையைச் சேர்ந்தவர்கள்.

தனியார் மருத்துவமனைகளுக்கு வேண்டுகோள்: சிக்-குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற வருபவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களை, தொடர்புடைய மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

அந்த முகவரிகளைப் பெற்றுக் கொள்ளும் மாநகராட்சி களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் செல்வர். அவர்களது வீடுகளில் கொசுக்களை ஒழிக்கும் மருந்து அடிக்கும் பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்றார் டாக்டர் குகானந்தம்.

குனியா காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு அதிமுக பிரமுகர் கே.வெங்கடாசலம் உயிரிழந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். வெங்கடாசலம் நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சி அதிமுக செயலாராக இருந்து வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

சிக்குன்-குனியா நோயைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அதிமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

அதன் பிறகு திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்நோயால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது வேதனைக்குரியது என்றார்.



'தீமதரிகிட' ஞானி :: செப்டம்பர் 2006

முதுமையில் சிலரைத் தாக்கக்கூடிய ஆர்த்திரைடிஸ் நோய்கூட உடலின் ஏதாவது ஒரு மூட்டுப் பகுதியை மட்டுமே பொதுவாகப் பாதிக்கிறது. ஆனால், சிக்குன் குனியா உடலில் உள்ள எல்லா மூட்டு இணைப்புகளிலும், அசைக்கவே அஞ்சும் அளவுக்கு வலி உண்டாக்குகிறது. உட்கார, எழுந்திருக்க, படுக்க, கை கால்களை அசைக்க விரும்பினால், ஒவ்வொரு அசைவையும் கடும் வலியுடன்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிரமப்பட்டு எழுந்து நடந்தால், ஏறத்தாழ குரங்கிலிருந்து உதயமான ஆதி மனிதனைப் போல சற்றே மடித்த காலும், கூனுமாக நடக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் இந்த நோயின் பெயரை ‘முடக்கிக் குறுக்கும் நோய்’ என்று ‘ப்ரிக்க ஸ்வாஹிலி’ மொழியில் சூட்டியிருக்கிறார்கள்.

கடுமையான காய்ச்சல், சுமார் 103 டிகிரி வரை முதல் மூன்று தினங்களுக்கு நீடிக்கிறது. காய்ச்சல் இறங்கிய பின்னரும் ஓரிரு வாரங்களுக்குக் குறையாமல் மூட்டு வலி தொடர்கிறது. சிகிச்சை என்பது காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளும், வலி நிவாரணிகளும் மட்டுமே! உடல் உழைப்பிலான தினக்கூலி வேலைகள் செய்யும் தொழிலாளர்கள் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டால், குடும்பமே மிகப் பெரும் துயரத்துக்கு உள்ளாகும். தற்போது தமிழகத்தில் சிக்குன் குனியா தாக்குதல் அடிமட்டத் தொழிலாளி முதல் ஐ.டி. துறை வரை பரவலாக இருக்கிறது. ஆவடி புறநகர் மருத்துவமனையில், ஒரே வேளையில் புற நோயாளிகளில் 500 பேர் சிக்குன் குனியா பாதிப்புடன் வந்திருக்கிறார்கள். கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில் ஒரு மருத்துவ முகாமுக்கு சிகிச்சைக்கு வந்த 90 பேரில் 62 பேருக்கு சிக்குன் குனியா! தமிழ்நாட்டிலும் இன்னும் சில மாநிலங்களிலுமாக பல லட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக அமைச்சர் அன்புமணி மக்களவையில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

சிக்குன் குனியாவுக்கு யார் பொறுப்பு? கொசுக்களைக் கட்டுப்படுத்தமுடியாத அரசாங்கங்கள்தான் பொறுப்பு. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சிக்குன் குனியா பாணி நோய்கள் வருவதில்லையே, ஏன்? பொது சுகாதாரத்தை அங்குள்ளஅரசுகள் ஒழுங்காகப் பேணுவதுதான் காரணம். கட்டமைப்பு என்ற பெயரில் பிரமாண்டமான சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பதில் செலவிடும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு நிகராக பொது சுகாதாரத்துக்கு நமது அரசுகள் நிதி ஒதுக்குவதில்லை.



தினமணி.காம் செய்தி :: ஜூன் 16, 2006:

சிக்குன் குனியா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த பேரணாம்பட்டில் உள்ள 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 1.85 லட்சம் வழங்கப்பட்டது. பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மிட்டாளம், மேல்பட்டி, மாச்சம்பட்டு, பல்லலகுப்பம், பத்தலபள்ளி, சாத்தம்பாக்கம், சி.டி. செருவு உள்ளிட்ட 18 கிராமங்களில் இந்நோயால் பெரும்பாலோனர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கிராமங்களில் நோயால் பாதிக்கப்பட்டவர்களை கடந்த வாரம் சந்தித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆறுதல் கூறினார். இங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ள ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்குமாறு பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனத்துக்கு உத்தரவிட்டார்.

அதன்படி ஒன்றியத்தில் உள்ள மேல்பட்டி, நரியம்பட்டு, மேல்சாணாங்குப்பம் ஆகிய 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஊசி, மருந்து, மாத்திரைகள், பிளீச்சிங் பவுடர் வாங்கிக்கொள்ள ரூ. 1.85 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.


சிக்குன் குனியா காய்ச்சல்: இறந்தவர்களின் பட்டியலை வெளியிட்டார் ஜெ.

பத்திரிகைகளைத் தினமும் படித்துவிடுவேன் எனக் கூறி வரும் முதல்வர் கருணாநிதி, சிக்குன் குனியா குறித்து பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படிக்கிறாரா இல்லையா?

முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் தமிழகத்தில் சிக்குன் குனியா இல்லை என்றும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனவும் சட்டப்பேரவையில் பதிவு செய்து விட்டார்கள்.

அதை நிலைநாட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்களே தவிர, காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் இல்லை; நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கவில்லை.


அரசியல் உள்நோக்கத்துடன் சிக்குன்-குனியா விவகாரத்தைப் பெரிதுபடுத்துகிறார் ஜெ.: சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். குற்றச்சாட்டு

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக அரசைப் பற்றி குறை கூற வேறு விஷயம் இல்லை. எனவே, அதிமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் சிக்குன் குனியா விவகாரத்தைப் பெரிதுபடுத்துகின்றன.



நன்றி: Chiken Kuniya


| |

7 கருத்துகள்:

//நோய் வாய்ப்பட்டவர் காலைக்கடனை கழிக்கச்செல்ல மற்றவர் துணை தேவைப்படலாம் [இதில் தப்பிப்பிழைப்பவர் உண்மையில் புண்ணியம் தெய்தவராவார்]. பலருக்கு மூட்டு வீக்கமும் ஏற்படுகின்றது//

உடம்பு சரியில்லைனா பரவாயில்ல... மேல சொல்லியிருக்கறத பாத்தா ரொம்ப கொடுமையா இருக்கும் போலிருக்கே :-(

எங்கள் பகுதியில் ஒருவர் விடாமல் காய்ச்சி எடுத்து விட்டது. நான் உட்பட யாரும் தப்பவில்லை. என் பாட்டிக்கு வந்து நினைவு தப்பிய நிலையில் இருந்து எப்படியோ உயிர் பிழைத்தார். நான் காய்ச்சல் வருமுன்பே (அறிகுறி தென்பட்டதும்) பாரசிட்டமால் உட்கொண்டதால் முதல் கட்ட தாக்குதல் சற்று குறைவாகவே இருந்தது. ஆனாலும் மூட்டு வலிகள் ஒரு மாதம் வரை இருந்தது. மனைவியால் சில தினங்கள் எழவே முடியவில்லை. குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பில்லை. காய்ச்சலோடு நின்று விட்டது. வலியைக்காட்டவில்லை. (அல்லது சொல்லத்தெரியவில்லை)

சிக்குன்குன்யாவால் யாரும் இறக்கவில்லை. அதேசமயம் வேறு நோய் இருந்தவர்கள் சிக்குன் குன்யா பாதிப்பால் நோய் அதிகமாகி இறந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்னும் ஆங்கில மருத்துவம் இதற்கு தீர்வு காணாத நிலையில் ஹோமியோபதி மருத்துவர்கள் தடுப்பு மருந்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சிக்குன்குன்யா மூட்டு வலிகளுக்கு ஒரு அருமையான நிவாரணம் கிராமங்களில் செய்து வருகிறார்கள்.

வேப்ப மரத்தின் வேர் அல்லது பட்டை எடுத்து, ஒரு வெற்றிலை, சில துளசி இலைகள், சுக்கு, மிளகு, பனைவெல்லம் சேர்த்து காப்பித்தூள் கலந்து கொதிக்க காய்ச்சி கடுங்காப்பியாக குடிப்பதில் வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கிறது. (நானும் குடித்தேன்)

வி.பி.
----ரொம்ப கொடுமையா இருக்கும் போலிருக்கே ----

மிக மிக... இதுவரை பாதிக்கப்பட்ட அனைவரும் மன உளைச்சலுக்கும் உடம்பு நோவுக்கும் உள்ளானதைக் கேட்கும்போதே வருத்தமாக இருக்கிறது.

வலைஞன்

விரிவான தகவல்களுக்கும் மாற்று உபாயங்களுக்கும் நன்றி வலைஞன்.

நாட்டுக்கு அதிமுக்கியமாக சுத்தமும் Infrastructure-ம் வேண்டும் என்று தலைப்பாடாய் பலபேர், பலமுறை சொல்லியாயிற்று! எப்போது அரசு இதை கவனிக்குமோ?

எங்க வீட்லயும், என் அம்மா திடீர் என்று கைகால் வரவில்லை என்று பயந்து அழுது, எங்களையும் பயமுறுத்திவிட்டார். பின்னர் அது இந்த காய்ச்சல் என்று சொன்னதில் பீதி தெளிந்தது.

Nice blog. Useful stuff

If time permits please visit mine
http://tamilamudhu.blogspot.com (Tamil)
http://leomohan.blogspot.com (English)

leomohan

நன்றி!

மெய்யாலுமே எல்லாரின் பதிவையும் படித்துவிட்டு 'நைஸ் ப்ளாக்' என்கிறீரா? அல்லது விளம்பரம் அளிப்பதற்கு முன் ஆறுதலாக நாலு வார்த்தை இடலாமே என்னும் எண்ணமா ;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு