State nine things (weird or otherwise) about yourself
ரொம்ப நாள் முன்னாடி ப்ரேமலதா, அழைப்பு விடுத்திருந்தார்கள். (Tagging me :: The normal self)
என்னைக் குறித்த ஒன்பது விநோதமான குணாதிசயங்களை சொல்லச் சொன்னார்கள். வலைப்பதிவில் சொந்த வாழ்க்கைக்கும் தாராளமாக இடம் கொடுப்பதாலும், ஒவ்வொரு கருத்துக்கு ஒவ்வொரு அவதாரம் போடாததாலும், இந்தப் பதிவில் புதிதாக புதிர் எதையும் பறைசாற்றப் போவதில்லை.
என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, கூவியதற்காக, நவரசங்கள்:
1. ப்ரியம்: இனிப்புகளின் மேல் எனக்கு பெருங்காதல் உண்டு. வயிறு முட்ட சாப்பிட்ட பின் டிராமிஸு, ரச மலாய், பக்லாவா, காசி அல்வா, சம்-சம், குட் டே, ஓரியோ, ஹாகன் டாஸ், ஃபெரோ ராஷர் என்று ஏதாவது மெல்லுவது எங்கள் குடும்பத்துப் பழக்கம். சர்க்கரை வியாதி வா வா, கொழுப்பு போ போ என்று மிரட்டினாலும் அஸ்கா பதார்த்தங்களைக் கண்டால் ஜொள்ளுக்குக் குறைவொன்றுமில்லை.
2. நகைச்சுவை: என்னுடைய மறதிதான் பல சமயங்களில் பலரை சிரிக்க வைத்து, என்னை நகைப்புள்ளாக்கி இருக்கிறது. பெயர் நினைவில் இருக்காது. முகம் நன்கு பதிந்திருக்கும். 'எங்கேயோ பார்த்திருக்கேன்!' என்று அழகான பெண்களிடம் வழிய ஆரம்பிப்பது போல், அறிமுகமானவரிடம் கஜினியாக தலை சொறிவேன்.
3. வருத்தம்: உருப்படியாய் உழைத்துக் கொட்டி, நாளொரு .NETடும் பொழுதொரு Perl-மாய் மதி வளர்த்து சம்பளம் வாங்குமிடத்தில் மதிப்பை வளர்க்காமல், நேரத்தை மதியாது, அவ்வப்போது இணையத்தில் வீழ்ந்து மயக்கமுற்று கிடப்பது.
4. கோபம்: காரணமில்லாமல் பொய் சொல்வது, செல்லிடத்து சினம் காவாமல் இருத்தல் என்று எழுத நினைக்கிறேன். ஆனால், கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் கூட அடங்கிப் போவதுதான் எனக்கு கோபத்தை வரவழைக்கிறது.
5. வீரம்: முகந்தெரியாத விற்பனாவாதிகளிடம் என்னுடைய சாகசம் பலித்திருக்கிறது. குழைந்து குழைந்து தங்கள் பொருள்களை சந்தைப்படுத்துபவர்களிடம் என்னுடைய வீரதீரம் வெளிப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் 'பாலாஜி இருக்கிறாரா?' என்று வினவுபவனிடம் தெனாவட்டாக 'இல்லை!' என்று தூய தமிழில் செல்பேசியிருக்கிறேன். 'சாப்ட்டுண்டு இருக்கோமில்ல... வேற எப்பவாது கூப்பிடு.' என்று கறாராக கண்டித்திருக்கிறேன்.
6. அச்சம்: தொலைபேசியில் அளவளாவலை எவ்வாறு முடிப்பது என்பதுதான் என்னுடைய நீண்டகால பயம். 'வேறென்ன விஷயம்?' என்று கேட்டால், தொய்ந்து போன 'ஒன்றுமில்லை' வருத்தமாக வருவது போல் இருக்கும். நானாகவே ரொம்ப நேரம் கதையளந்தால், 'எனக்கு இன்னொரு ஃபோன் வருது', அல்லது 'பாஸ் / மனைவி / குழந்தை / நாய் / கடுவன் / பக்கத்து வீட்டுக்காரி / டிவி / கடவுள் கூப்பிடறார்... கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடட்டுமா?' என்னும் முடிவுரை விழுந்து, ரம்பம் போட்டதை நினைவுறுத்துமோ என்றும் எச்சரிக்கை உணர்வு வந்து தொலைக்கும்.
7. வெறுப்பு: ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமாக (தொடர்புள்ள சுட்டி: Stockholm Syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும்) சன் டிவியிடமுள்ள மையல். நெடுந்தொடர் எதுவுமே காலரைக்கால் விநாடி கூட நோடுவதில்லை. சனி, ஞாயிறு இரவுப் படங்களையும் தவிர்க்கிறேன். அதிகாலை ஆறரை மணிக்கு வேலைக்குப் புறப்படுவதால் 'வணக்கம் தமிழகம்' வசதிப்படாது. 'காமெடி டைம்'மாக வரும் சன் நியூஸ் மட்டும் நையாண்டி தர்பாராக சிரிக்க வைக்கிறது.
8. அமைதி: துளி சத்தம் கூட எழாமல் பல மணி நேரம் வலையை மேய்வதுதான் மௌனமான வேளை. நண்பர்களின் பதிவுகள், செய்தித்தளங்கள், வலையகங்கள், தாளிகைக் கட்டுரைகள், நுட்ப சங்கதிகள் நடுநடுவே ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ, அரட்டை அஞ்சல்கள் என்று நேரம் போவது தெரியாமல் இணையத்தில் சறுக்காட்டம்.
9. வியப்பு: 'எங்காவது பெட்டியைப் பார்த்தால் ஏன்ப்பா டைப் அடிக்கறே?' என்று என் மகள் வினவிய போதுதான் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எங்காவது டெக்ஸ்ட் பாக்ஸ், மறுமொழிப் பெட்டி, எடிட் பாக்ஸ், அஞ்சல் டப்பா என்று கொடுத்தால் போதுமானது. படிப்பவர் மூர்ச்சையாகுமளவு மெகாபைட் எழுதித் தள்ளுவது.
இப்போது சிலரை அழைக்கும் நேரம். அவர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்காமல், ஏற்கனவே நான் விரும்பிப் படித்த சில நல்ல பகிர்வுகள். (இவர்களே மீண்டும் இன்னொரு சிறப்பான பதிவைப் இட்டால் மகிழ்வேன் : )
- கப்பி பய: பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்
- தேன் துளி: பத்மா அர்விந்த் - Every little things that you do Baby I am amazed by you
- வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: வெட்டிப்பயல் - ஆட்டோகிராப் - 3!!!
- எண்ணங்களை எழுதுகிறேன் - மா சிவகுமார்
- மழை: பிரதீப் - அமேரிக்கா - II
- காற்றுவெளி: மதுமிதா - எப்ப இருந்து?
- எழுத்தென்னும் தவம்: மீனாக்ஸ் - லுங்கி, ஷார்ட்ஸ், முக்கா பேண்ட் & an anecdote
- என் மனம், அலை பாயுதே...: கடல் கணேசன் - பார்த்திபனிடம் நான் காட்டிய திமிர்
- மகரந்தம்: ஜி ராகவன் - மாட்டுத்தாவணி மகாத்மியம்
- இதர எண்ணங்கள்: :ரங்கா - காப்பி
Tag | Personal | Navarasam
பாபா,
சூப்பரா எழுதியிருக்கீங்க...
இதுல பாதி நமக்கும் இருக்கு...
இனிப்புதான் முதல் ;)
//அச்சம்: தொலைபேசியில் அளவளாவலை எவ்வாறு முடிப்பது என்பதுதான் என்னுடைய நீண்டகால பயம். 'வேறென்ன விஷயம்?' என்று கேட்டால், தொய்ந்து போன 'ஒன்றுமில்லை' வருத்தமாக வருவது போல் இருக்கும்//
இது ரெண்டாவது ;)
இன்னைக்கு வரைக்கும் எப்படி முடிக்கறதுனே தெரியாது...
இந்தியாக்கு பேசினாலும் இப்படித்தான் ஆகுது :-(
நீங்க கூப்பிட்டு போடாம இருக்க முடியுமா? நெல்லிக்காய முடிச்சிட்டு வரேன் ;)
சொன்னது… 11/16/2006 05:00:00 PM
பாபா, இப்படி ஞாபகப் படுத்திட்டீங்களே. பிரேமலதாவுக்கு இப்ப நான்
என்ன பதில் சொல்றது?
இன்னும் பொருத்தமான நேரம் கிடைக்கலை, ஆத்மதரிசனம் செய்யன்னுதான்
சொல்லிக்கணும்(-:
சொன்னது… 11/16/2006 05:26:00 PM
3, 4, 5 - சரி (I mean I could say I agree with your own assessment)
சொன்னது… 11/16/2006 07:14:00 PM
அய்யோ நான் கூட ஒண்ணு போட்டாவணுமே? ப்ரேமலதா... தோ வரேன்
சொன்னது… 11/16/2006 07:21:00 PM
எழுத மறந்தது. மூன்றுதான் சரி என்று சொன்னதற்கு வருந்த வேண்டாம். வலைப்பதிவில் அவரவர் முழுபூசணிக்காயை சோற்றில் மறைத்து முகத்துக்கொரு கொள்கையுடன் வலம் வருகிறார்கள். (you also said it :-) )அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் மனசாட்சியை அடகுவைத்துவிட்டு இந்த அற்பங்களுக்குத் தார்மீக ஆதரவும் அளிக்கிறார்கள். இப்படிப்பட்ட இடத்தில் உங்களிடம் இருக்கிறது என்று நானும் நினைக்கிற மூன்று முக்கிய குறைகளை நீங்கள் தயங்காமல் ஒத்துக் கொண்டது என்னைப் பொருத்தவரையில் பெரிய விஷயம். பாராட்டுகள். - பி.கே. சிவகுமார்
சொன்னது… 11/16/2006 08:10:00 PM
// 'எங்காவது பெட்டியைப் பார்த்தால் ஏன்ப்பா டைப் அடிக்கறே?' //
:)
ஒன்பதும் ரசிக்க வைக்கும் ஒப்புதல் வாக்குமூலங்கள்..
ஒன்பது ஓரிலக்க எண்ணாக இருந்தாலும்....ஒன்பதா? :D
சொன்னது… 11/17/2006 09:15:00 AM
வியப்பு: 'எங்காவது பெட்டியைப் பார்த்தால் ஏன்ப்பா டைப் அடிக்கறே?' என்று என் மகள் வினவிய போதுதான் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எங்காவது டெக்ஸ்ட் பாக்ஸ், மறுமொழிப் பெட்டி, எடிட் பாக்ஸ், அஞ்சல் டப்பா என்று கொடுத்தால் போதுமானது. படிப்பவர் மூர்ச்சையாகுமளவு மெகாபைட் எழுதித் தள்ளுவது.
Thanks for letting
know nine things about you.
Perhaps you are too comfortable
with filling up forms - on-line
or off-line:). I hate filling forms, particularly the visa related forms.One gets the impression that you are suffering
from net addiction.One good solution is a slower connection
to internet, another is trying to
get addicted to something else
so that this addiction becones
less addictive :)
Have you read about Johari
window.
சொன்னது… 11/17/2006 10:03:00 AM
வலைப்பதிவு விமரிசகரிடம் இருந்து பாராட்டும் விளம்பரமும் கிடைத்தற்கு நன்றி.
என் அலுவலகத்தில் சில அரசாங்க தளங்கள் தவிர வேறெங்கும் பயனிக்க முடியாது. அதேபோல் சொந்த காரணங்களுக்காக தொலைபேசியும் உபயோகிக்க முடியாது (உபயோகிக்கலாம், அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும்) சில சமயம் கடினமாக இருந்தாலும் நல்லதே என்று தோன்றுகிறது.
கச்சிதமாக எழுதி இருக்கிறீர்கள்.
சொன்னது… 11/17/2006 11:13:00 AM
நன்றி.
ஏற்கனவே தெரிந்த விசயங்கள் போல் இருப்பதால் அதிக ஆச்சரியம் தரவில்லை.
லின்க்களுக்கும் நன்றி. "ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்" ஜனரஞ்சகமா சன் டிவிக்கு refer பண்ணியிருப்பதப் பார்த்தா சந்தோசமா இருக்கு எனக்கு.
thank you again.
Cheers
Premalatha
சொன்னது… 11/18/2006 02:47:00 AM
//ப்ரேமலதா... தோ வரேன்//
no probs. :)
சொன்னது… 11/18/2006 02:50:00 AM
என் அலுவலகத்தில் சில அரசாங்க தளங்கள் தவிர வேறெங்கும் பயனிக்க முடியாது
If all offices and business firms have this policy of
restricting access to some sites only then there will be less noise and heat in Tamil blogs.
பெயரில்லா சொன்னது… 11/18/2006 09:29:00 AM
ரொம்ப சுவாரசியமான பதிவு, பாலா. தொலைபேசி அளவளாவல் Seinfeld-ஐ நினைவுபடுத்தியது.
பெயரில்லா சொன்னது… 11/18/2006 12:13:00 PM
நன்றி பாலா. நானும் எழுத முயற்சிக்கிறேன்.
அப்புறம், மதுமிதா வலைப்பதிவை முழுமையாக review செய்தது போல், திரை விமர்சனம் வலைப்பதிவில் ஐம்பது விமர்சனங்கள் எட்டும் போது ஒரு review எழுதித் தரச் சொல்லி உமது நேரத்துக்கு இப்பொழுதே கர்ச்சீஃப் போட்டு வைக்கிறேன்.
சொன்னது… 11/21/2006 02:17:00 AM
http://thavam.blogspot.com/2006/11/blog-post_21.html
எழுதி விட்டேன்.
சொன்னது… 11/21/2006 04:51:00 AM
@வி.பி.
---இனிப்புதான் முதல---
விட்டுடுன்ங்க! திராட்சை, பைனாப்பிள் என்று மாறி விடுவோம் ; )
பெங்களூர் உணவகத்தில் சாப்பிட்டு முடித்தவுடன் வாழைப்பழம் கொடுப்பார்கள்.
---இந்தியாக்கு பேசினாலும் இப்படித்தான் ஆகுது---
இப்பொழுதே அலுத்துக்காதீர்கள். அடுத்து, மணமுடிப்புக்கு முந்தைய காலகட்டத்தில் 'அவ்வளவுதானா? என் கூட பேச மாட்டியா?' என்று ம்னைவியாக வரப் போகிறவர் கேட்கும்போது தொலைபேசி பில் எகிறும்போது 'எப்படி பேச்சு வார்த்தையை முடிக்கிறீர்கள்' என்று கேட்கிறேன் ; )
சொன்னது… 11/27/2006 11:44:00 AM
@துளசி
---பிரேமலதாவுக்கு இப்ப நான் என்ன பதில் சொல்றது?---
இன்னும் சொல்லவில்லை போலிருக்கிறதே!? சீக்கிரம் சொல்லிடுங்க : )
சொன்னது… 11/27/2006 11:45:00 AM
@ஐகாரஸ்
---அய்யோ நான் கூட ஒண்ணு போட்டாவணுமே?---
குட் ஒன் ஐகாரஸ்! Prakash's Chronicle: 9 weird things about prakash
சொன்னது… 11/27/2006 11:46:00 AM
@பிகேயெஸ்
---நானும் நினைக்கிற மூன்று முக்கிய குறைகளை நீங்கள் தயங்காமல் ஒத்துக் கொண்டது---
நன்றி : ) நீங்களும் ஒன்று இட்டால், நானும் இந்த மாதிரி பின்னூட்டம் இட முடியும் ; )
சொன்னது… 11/27/2006 11:51:00 AM
@கப்பி
---ஒன்பதும் ரசிக்க வைக்கும் ஒப்புதல் வாக்குமூலங்கள்---
நன்றி... மாலைமலர் தலைப்பாக யோசித்தால்...
அப்ரூவராக மாறினாரா பாலாஜி!?
வலைப்பதிவில் சாட்சி சொன்ன விவரங்கள்!
: )
சொன்னது… 11/27/2006 11:54:00 AM
@ரவி
---I hate filling forms, particularly the visa related forms.---
விரலுக்கு வந்ததை நிரப்பினால், பிரச்சினையே இல்லை. அடுத்த முறை விசா படிவத்தை நிரப்பும்போது,
'பெயர்: ஜானி வாக்கர்;
வயது: 22;
பால்: பெண்;
ஏன் எங்கள் ஊருக்கு வருகிறாய்: வேலை தேடி நாலு காசு சம்பாதிக்க'
என்று ஜாலியாக (நான் இணையப் படிவத்தில் நிரப்புவது போல்) எழுதவும் ; )
---Have you read about Johari window.---
நண்பர்களே... உதவுங்கள்!
The next step is to ask several of your friends and colleagues to say which words they associate with you. You can do this by directing them to the following URLs:-
1. http://kevan.org/johari?name=sbala124
2. http://kevan.org/nohari?name=sbala124
சொன்னது… 11/27/2006 12:05:00 PM
@பத்மா __/\__
---என் அலுவலகத்தில் சில அரசாங்க தளங்கள் தவிர வேறெங்கும் பயனிக்க முடியாது.---
ரவி... ---One gets the impression that you are suffering from net addiction.One good solution is ---
இதுதான் தீர்வு!
சொன்னது… 11/27/2006 12:12:00 PM
@ப்ரேமலதா
---ஏற்கனவே தெரிந்த விசயங்கள் போல் இருப்பதால் அதிக ஆச்சரியம் தரவில்லை.---
ஹ்ம்ம்... வற்றக்குழம்பு சாதத்துக்கு தயிர் வைத்துக் கொண்டு சாப்பிடுவது போல் எல்லாமே பழகிய விஷயங்களாக அமைந்திருக்கிறது போல.
'எனக்கு இன்னொரு பெயர் இருக்கு' என்று பேச, நாம மாணிக் 'பாட்சா'வா என்ன : P
சொன்னது… 11/27/2006 12:15:00 PM
@ஆனந்த் __/\__
சொன்னது… 11/27/2006 12:17:00 PM
@மீனாக்ஸ் __/\__
நன்றி! எழுத்தென்னும் தவம்: என்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்
---விமர்சனம் வலைப்பதிவில் ஐம்பது விமர்சனங்கள் எட்டும் போது ஒரு review---
அதற்கென்ன... கோல்டன் ஜூபிளி கொண்டாடிரலாம் ; )
சொன்னது… 11/27/2006 12:20:00 PM
http://madhumithaa.blogspot.com/2006/12/blog-post.html
பாபா தாமதமானாலும் கொடுத்தாச்சு.
நன்றி பாபா.
சொன்னது… 12/06/2006 05:44:00 AM
கருத்துரையிடுக