செவ்வாய், ஜனவரி 15, 2008

சிறில் அலெக்ஸ் எழுதிய 'முட்டம்' - புத்தக அறிமுகம்

தேன் - தோணித்துறைகளும் மதுக்கிண்ணங்களும்

நன்றி: தமிழோவியம்

தேன் என்பது சிறில் அலெக்ஸ் வைத்திருக்கும் வலைப்பதிவின் பெயர். கணிப்பொறியில் கிடைக்கும். அதே போல் அரிதான இன்னொரு அமிர்தம் புட்டியில் கிடைக்கிறது. அந்த வஸ்துவின் பெயர் அப்சிந்த் (Absinthe).

'செய்ய முடியாது. பருக இயலாது' என்று தடா போட்ட அமெரிக்காவில் நேற்றுதான் புழங்க ஆரம்பித்திருக்கிறது இந்த அப்சிந்த். வழக்கமான சரக்குதான். அப்சிந்த்தில் கொஞ்சம் கிக் ஜாஸ்தி. மற்ற சரக்குகளில் எல்லாம் அதிகபட்சமாய் நாற்பது சதவீதம் ஆல்கஹால் கலந்தால், அப்சிந்த்தில் மூன்றில் இரண்டு பங்குக்கு மதுவை தூக்கி நிறுத்தி, உடனடியாக பரவசம் அடைய ஏதுவாக்கி இருக்கிறார்கள். இது போதாது என்று ஜவ்வாது, குங்குமப்பூ போன்ற மூலிகைகளும் லாகிரிகளும் சரியான விகிதாசாரங்களில் அப்சிந்த்தின் சுருதியை ஏற்றி களியாட்டம் போட வைக்கிறது.

சிறிலின் பதிவுகளும் இந்த அப்சிந்த்தை ஒத்து இருக்கிறது.

'நனவோடை, நினைவலைகள் எல்லாம் வயசானப் பெருசுதான் எழுதணும்; சொந்த ஊர் புராணம் எல்லாம் புகழ்பெற்றவர் எழுதினால்தான் எடுபடும்' போன்ற பொடாக்களை உடைத்தெறிந்திருக்கிறார்.

புனைவுகளில் சுருக்கமாக கதையின் ஓட்டத்தோடு களமும் கிராமந்தரங்களும் வந்து போகும். இங்கே நடுநாயகமாக தீர்க்கமாக முழு வீச்சுடன் முட்டம் ஹீரோவாகிறது. மனிதப் பிரளயமாய் கதாபாத்திரங்களை கற்பனையாக்காமல், சனங்களை அன்னியோன்யமாய் தெரியவைக்கிறார். வீரியம் அதிகமானாலும் வீச்சு குறையாமல் நெருங்கி அரவணைக்கிறது.

அப்சிந்த் போன்ற சரக்குகளுக்கு மக்களிடம் அறிமுகம் அதிகம் இல்லை. அதற்கென்று தனித்துவ வாசம் உண்டு. திருட்டுத்தனமாக கடத்திய காலம் முதல் அரிதாக தென்படும் இன்றைய நிலை வரை கள்ளின் ருசியறிந்து ஆகர்ஷிப்பவர்களை குஷிப்படுத்தி நிறைவாக்கும் பண்டம்.

களிப்பதற்கென்று எழுதாமல் கருத்தில் வந்ததை எழுதும் இடம் வலைப்பதிவுகள். அதை சரியாக பிரயோகித்திருக்கிறார் சிறில். வெகுசன ஊடகங்களில், நிழலில் விழாத இடத்தில் பதிந்ததை, பொதுமக்களிடம் கொண்டு செல்லும் சாதனமாக இந்த புத்தகம் அமைகிறது.

புகழ்பெற்ற ஓவியர்களான பிகாஸொ, வான்கோ தொடங்கி எழுத்தாளர்கள் ஹெமிங்வே தொட்டு தற்கால ஆஸ்கார் நடிகர்கள் ஜானி டெப் உட்பட அனைவருக்கும் அப்சிந்த் ஆதர்சம்.

வலைக்குறிப்புகளுக்கும் அப்சிந்த் போன்ற கொண்டாட்ட நிலை. எண்ணிக்கை குறித்து அஞ்சாமல் எண்ணங்களை பதிந்து வைக்கும் தடம்.

English360.com மேற்கொண்ட ஆய்வை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். பீங்கான் சாமன்களை செய்வது எப்படி என்று கற்றுக் கொடுக்கும் வகுப்பை இரண்டாகப் பிரித்தார் ஆசிரியர். முதல் பாதியிடம் 'உங்கள் பீங்கன் பாத்திரத்தின் தரமும் தன்மையும்தான் முக்கியம்' என்கிறார். மீதி பாதியிடம் 'தரத்தைக் குறித்து அஞ்ச வேண்டாம்; நீங்கள் தயாரிக்கும் எண்ணிகையை அளந்தே மதிப்பிடுவேன்' என்கிறார்.

இரண்டு குழுவில் எந்தக் குழு உயர்தரமான பீங்கான் பொருள்களைத் தயாரித்திருக்கும்? இரண்டாவது குழுதான் வெற்றி பெற்றது.

புத்தகம் எழுதும்போது பக்க அளவு வைத்திருப்போம். பத்திரிகைகளுக்கு என்றால் நாற்பது வரிகள் அல்லது நானூறு வார்த்தை என்று ஏதோ லிமிட் கத்திரி இருக்கும். இங்கே க்வான்டிடி பற்றி கவலைப்படாமல் எழுதுவதால் சிறில் சரக்கு க்வாலிடியாக இருக்கிறது.

சிறிலுக்கு பக்க எண்ணிக்கை லட்சியங்கள் கிடையாது. அனுபவித்த ஒவ்வொன்றையும் உருவாக்கும் எண்ணம் மட்டுமே கொண்டு வலைப்பதிவுகளில் அன்றாடம் யதார்த்த மொழியில் தன்னுடைய வாழ்க்கையை இளமைப் பிராயத்தை தங்கு தடையின்றி எழுதியிருக்கிறார். அது தரத்திலும் மிளிர்கிறது.

துறைமுகங்களுக்கு அருகில் தோணித்துறைகள் இருக்கும். பெருங்கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி துறைமுகங்களை ஆக்கிரமித்திருக்கும். தோணித்துறைகளில் அந்த கப்பல்களில் வந்த பெட்டிகள் ரகவாரியாக பிரிக்கப்படும். தண்ணீரோடு துண்டிக்கப்பட்ட உறவை கோர்க்கும் பாலமாக செயல்படும். சாலைவழியோடு இணைக்கும். சரக்கு ரயில்களில் ஏற்றிச் செல்ல வழிவகுக்கும். ஆசுவாசப்படுத்தி இயல்பாக்கும்.

செயற்கை துறைமுகத்தில் கப்பல்களாக அணுக முடியாத இலக்கியமாக இல்லாமல் எளிமையான உறவை கொடுக்கும் தோணித்துறையாக இந்த முட்டம் அமைந்திருக்கிறது.

கடைசியாக அப்சிந்த்தைக் குடிப்பதற்கு என்று மெக்சிகோ டெக்கீலாவைப் போலவே சாஸ்திரோப்தங்கள் உண்டு. இரண்டு இன்ச் குழியுள்ள தேக்கரண்டியில் சக்கரைக் கட்டிகளை இட வேண்டும். இப்பொழுது இங் ஃபில்லரால் மூன்று சொட்டு அப்சிந்த்தை அதன் மேல் தெளிக்கவும். உடனடியாக வத்திப்பெட்டி உதவியுடன் திரவத்தை பற்ற வைக்கவும். கொஞ்சூண்டு சர்க்கரை மீதம் இருக்கும். அதன் மேல் குளிர்ந்த அக்வாஃபினாவோ தாஸனியோ சுத்த தண்ணீரை ஊற்றவும். இப்பொழுது கோப்பை மேக மூட்டம் கொண்டிருக்கும்.

அப்சிந்த் என்பது சிறிலின் பதிவுகள். அதற்கு அஸ்கா கட்டிகளாக அந்தப் பதிவுக்கு வரும் மறுமொழி பதில்கள். இந்த வாசகர் கேள்விகளும் பின்னூட்டங்களும் சில துளிகளை தெளிக்க, எல்லாமும் கலந்துருகும் கலயமாக இந்த புத்தகக் கோப்பை.

மகிழ்ச்சியுடன் சிந்தை முட்ட முட்ட அமிர்தம் குடிக்க வாழ்த்துகள்.

1. பிறர் எழுதிய அணிந்துரைகளை வாசிக்க: முட்டம் புத்தகம் பதிவர்கள் பார்வையில்
2. புத்தகம் குறித்த அறிமுகம்: முதன் முதலாக வலைப்பதிவு புத்தகமாகிறது
3. விருபா: 2008 புத்தகத்திருவிழா - ஆழி

6 கருத்துகள்:

நல்லாக் குடிச்சு இருக்கீங்க போல!
(அதாவது தேனை அள்ளிக் குடிச்சு இருக்கீங்க போல!)

இப்போ மொதல்ல அவரு புஸ்தகத்தை வாங்கிப் படிக்கிறதா இல்லை நீங்க சொன்னதை வாங்கிப் பருகுவதான்னு தெரியலையே...

மதுரையில் எங்கு கிடைக்கும்...நேற்று தேடினேன். கிடைக்கவில்லை!

கொத்ஸ் :)

பாராட்டுவது என்று முடிவாயிடுச்சு... அதே ரீதியில்: 'பூனை நக்கி நக்கி கடலை காய்ந்து போக செய்ய முடியுமா? அதே போல் அள்ளி அள்ளிக் குடிக்க பெருகும் பிரவாகம் :)

தருமி,
அது சிற்றின்பம்; புத்தகம் பேரின்பம் :)

பிரபு,
ஆழி பதிப்பகத்தின் செ. ச. செந்தில் நாதன் -இடம் கேட்டால் தெரியலாம்

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு