ஞாயிறு, டிசம்பர் 21, 2003

தமிழ்நாட்டில் பிறந்ததுதான் தவறு

சன் தொலைக்காட்சியின் சனி, ஞாயிறு மதியப் படங்கள்
எவ்வளவோ தேவலாம்; இரவுப் படங்களை விட.

சனி - புதிய வானம்; காதலுக்கு மரியாதை
ஞாயிறு - அரிச்சந்திரா; பொட்டு அம்மன்

காதலுக்கு மரியாதையை அமெரிக்காவின் வெள்ளித் திரையில்
தூங்கிக் கொண்டே லயித்தபோது, 'டேய்... டேய்ய்' குரல்கள்
எழுப்பின. வழக்கம் போல் ஒரு ஏமாந்த அமெரிக்க மாப்பிள்ளையை
ஷாலினிக்கு வரன் பார்த்திருப்பார்கள். அப்பொழுது எல்லாம்,
அமெரிக்காவில் வேலை என்றால் மதிப்பிருந்தது.

'புதிய வானத்தில்' உதவி இயக்குனராக இருந்த 'செய்யாறு இரவி',
'அரிச்சந்திரா'வின் நெறியாளகையைத் தனியாக கலக்கி இருக்கிறார்.
வெற்றிப் படம் கொடுத்த பிறகும் காணவில்லையே. மீண்டும்,
துணை இயக்குநராகி விட்டாரோ. ஆனந்த விகடனில் இவருடைய
பெயரை படித்த ஞாபகம். 'ஜெமினி'/'ஜே...ஜே' சரணும் கூட.

'ஸ்டார் ஷோ' என்று ஸ்னேஹா பின்னிரவில் திடீர் தரிசனம்
தந்தார். வழக்கமான கேள்விகள்; புளித்துப் போன பதில்கள்.
'பெப்ஸி' உமாவின் 'பிடித்த ஆண் யார்' என்னும் கேள்விக்கு
பதில் சொல்லவில்லை. ஸ்னேஹாவை விட உமா நிறையப்
பேசினார். சினிமா மக்களை நேர்முகம் காண்பதை ரசிக்கும்படி
செய்து வந்தவர் டிடி மெட்ரோவின் மாலா மணியன். அளவாக
சிரித்து, அறிவோடு கேள்வி கேட்டு, யாரையும் புண்படுத்தாமல்
தொகுத்தவர்.

'பெப்ஸி' உமாவுக்கு நிறைய பிஜேபித்தனம் வந்துவிட்டது.
'மனமத ராசா' விரும்பி கேட்கும் குழந்தையை கண்டிப்பது,
'வீட்டை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டவர்கள் மணம்
புண்படும்படி பேசுவது, என 'பெப்ஸி.. உங்கள் சாய்ஸில்',
தொலைபேசியிலேயே இலவச அறிவுரைகள் வழங்குகிறார்.
அவர் தொகுக்கும் நிகழ்ச்சி என்ன 'வணக்கம் தமிழகமா' அல்லது
'அரட்டை அரங்கமா'. 'கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்
போலாமா'வும், 'மே மாசம் 98-இல் மேஜர் ஆனேனே' போன்ற
பாடலகளை அனைவரின் பேராதரவைப் பெற்ற பாடலாக சொல்லும்
பண்பாடுகளற்ற நிகழ்ச்சிதானே.

தலைப்புக்கு வருவோம். இணையத்தில் ஏற்கனவே படித்த, கமலுக்குக்
கடிவாளம் என்று பேசினார் பாலச்சந்தர். தமிழகத்தில் பிறந்ததனாலேயே
ஆங்கில விருதுகள் தட்டிப் போகிறதாம். பல புதுமுகங்களை பார்ப்பதும்,
முடிந்தவரை சுத்த தமிழிலேயும், ஒரு நல்ல படைப்பு என்ற கர்வமும்,
மதுரையின் கிராமியக் கலைகளை மெட்ராஸ் தமிழனுக்குக் கொடுப்பதும்,
மரண தண்டனையை சிந்திக்க வைப்பதும் என்னை எட்டு டாலர் கொடுக்க
வைக்கும்.

ஆனால், கவிதாலாயவின் 'திருமலை' அளவாவது வெற்றிபெற, இவ்வளவு
எதிர்பார்க்கவைத்தல் கூடவே கூடாது. ஆளவந்தானில் தாணுவுக்குப்
பாடம் புகட்டினார். அன்பே சிவத்தில் பட்டுக் கொண்டார். இன்னும்
திருந்தவில்லை.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு