புதன், ஜனவரி 21, 2004

'அமெரிக்க கோயில் உலா'

இந்தியக் கோவில்களுக்கும் அமெரிக்காவின் கோவில்களுக்கும் ஆறு வித்தியாசத்துக்கு மேலேயே இருக்கும்.

சென்னையில் பெரிய மனிதர் வந்தால் மட்டுமே முழு சதத்தையும் அடிக்கும் நாமாவளி, அமெரிக்காவில் ஒவ்வொரு சாமானியருக்கும் கர்ம சிரத்தையாக அர்ச்சனை நடக்கும். அர்ச்சகரின் ஈடுபாடைக் கண்டு தட்டில் போடப்படும் வெள்ளிகளும் கோவில் உண்டியலையே அடையும்.

சிவா-விஷ்ணு கோவில் என்று தியாகராய நகரில் மட்டுமே பார்த்ததாக நினைவு. அமெரிக்காவில் இரண்டு பேரும் ஒருங்கே இல்லாத இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கோவில் திருவிழா என்றாலே அடிதடி, பெருங்கூட்டம் என்பது எல்லாம் இல்லை. சாதாரண வாரயிறுதிகளை விட புத்தாண்டு, பொங்கல் போன்றவற்றில் கொஞ்சம் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், அப்பொழுதும் தள்ளுமுள்ளு, காலணி காணாமல் போகுதல் என்ற அசௌகரியங்கள் கிடையாது.

திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழு மலை ஏறுவது, ஐயப்பனை பார்க்க விரதமிருந்து சபரி மலைக்கு செறுப்பில்லாமல் ஏறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பிட்ஸ்பர்க் மலை மேல் இருப்பது மாதிரி தென்பட்டாலும், கோவில் வாசலில் வண்டியை நிறுத்தி, லி·ப்டில் மேல் சென்று, (கால் முடியாவிட்டால்) சேரில் உட்கார்ந்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம்.

அதே லி·ப்டை பிடித்து கீழே இறங்கி வந்தால் அவசரப் பசிகளுக்கு அப்பிடைசர்களாக இரண்டு இட்லி சாப்பிட்டுக் கொண்டே, என்ன தமிழ் படம் வந்திருக்கிறது, யார் நடன அரங்கேற்றம் செய்கிறார்கள், ஒய்.ஜி எப்பொழுது டிராமா போடுகிறார் போன்றவற்றை 'அறிவிப்பு பலகை'யில் அறியலாம். நீண்ட காலம் கழித்து சந்திக்கும் நண்பர்கள், தெரிந்த முகங்கள், புதிய அறிமுகங்கள் என அனைவரிடமும் வேலை தேடுவதை அல்லது கஷ்டப்பட்டு வேலை செய்வதை அங்கலாய்த்துக் கொண்டே அரட்டை அடிக்கலாம்.

கோவில் பாலிடிக்ஸ், அர்ச்சகர் அரசியல் எல்லாம் பெரிய விஷயம். ஆந்திராகாருக்களுக்கு தனிக் கோவில், தமிழர்களின் கோவில், வட இந்திய பாணி, குஜராத்திய அமைப்பு என்று இங்கு சிறுபான்மையினராக இருந்தும் சிதறுண்டு வருகிறார்கள்.

சைட் அடிக்க கோவில் செல்வது, பரிட்சையில் பாஸ் பண்ண நூறு சுத்துவது, பிரதோஷத்திற்காக அட்டெண்டன்ஸ் கொடுப்பது என்று வருகிறவர்கள் கம்மிதான். நைட் க்ளப் சென்று எதிர் பாலாரைக் கவ்வுவது எளிது. வாரயிறுதியில் பிரதோஷம் வந்தால் மட்டுமே கோவில் வரமுடியும் போன்ற நிர்ப்பந்தங்களில் அமெரிக்க இந்தியர்கள் உள்ளார்கள்.

சென்னையில் கோவில் பக்கமே தலை காட்டாத என்னுடைய நண்பர்கள், அமெரிக்கா வந்த பிறகு வாரம் தவறாமல் ஆஜர். குழந்தைகளுக்கு இந்திய முகங்களை காட்டவும், கலாசாரங்களை சொல்லவும் கோவில் உதவுகிறது. சிறுவர்களுக்கு தாய் மொழி வகுப்பு, பெரியவர்களுக்கு வேத வகுப்பு, விளக்கங்கள் என்று தங்களைத் தங்களுக்கே அறிமுகப் படுத்திக் கொள்ளவும் பயனுள்ளதாக விளங்குகிறது.

என்னுடைய அலுவலகத்தில் கூட இருக்கும் இந்திய முஸ்லீம்களும், வெள்ளிக்கிழமை தொழுகைகளை தவற விடுவதில்லை. இந்தியாவில் அவர்கள் போன்ற சிலருடன் வேலை பார்த்தபோது கூட அவர்கள் சென்றதை நான் கவனித்தது இல்லை. ஆனால் அமெரிக்காவில் ஒரு மணி நேரம் தள்ளி உள்ள மசூதிக்கு வண்டி ஓட்டிச் சென்று, வணங்கிவிட்டு, தொடரும் மதிய உணவையும் முடித்து விட்டு வருவதைக் கடமையாக செய்கிறார்கள்.

தனது கலாசாரத்தை விட்டு விலகி இருக்கும் போதுதான், அதன் மேல் பற்றுதல் அதிகரிக்கிறது. குற்ற உணர்ச்சி கொஞ்சம் சேர்த்து ஆட்டுவிக்கும் போது, தனது கடமையை செய்து முடித்து விட்டதாக உலக்குக்கு அறிவிக்க கோவில்கள் தேவையாய உள்ளன.

தாத்தா, பாட்டி அருகில் இல்லையா... வாரா வாரம் தொலை பேசு. தாய்மொழியில் பேசவில்லையா... எழுதப் படிக்க மட்டும் கற்றுக் கொடு. ஏற்றி விட்ட இந்தியாவை விட்டு விட்டோமா... கோவிலுக்கு செல்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு