புதன், ஜனவரி 21, 2004

மெல்லினம்

(பா ராகவன் 'கல்கி'யில் எழுதிய தொடர்கதை 'மெல்லின'த்திற்கு ஒரு வாசகனின் எண்ணங்கள்).

"ஒரு பன்னிரண்டு வயதுக் குழந்தையின் சிந்திக்கும் திறன் எம்மட்டில் இருக்கும் என்று சுலபத்தில் யூகித்து விட முடியாது போலிருக்கிறது. பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். பழகிக் கொண்டேதான் இருக்கிறோம்" என்று ஆரம்பிக்கும் கடைசி அத்தியாயம்தான் கதையின் அடிநாதம். பன்னிரெண்டு வயதில், என்ன மனநிலையில் இருந்தேன் என்பதை அன்றும் இன்றும் அறியாத எனக்கு, சிறுவர்களின் உலகத்தில் உள்நுழைந்து அலசி ஆராய்ந்து செல்கிறது 'மெல்லினம்'.

நான் ஏழாவது படிக்கும் போது ஒரு விஷயம் தெரிந்த நண்பன் எல்.பி.டபிள்யூ என்றால் என்ன என்று தெரியுமா என்று பேச்சுவாக்கில் கேட்கிறான். நானும் கர்ம் சிரத்தையாக பந்து ஸ்டம்பை தகர்த்து விடும் என்று அம்பையர் தீர்மானித்து கொடுக்கும் அவுட்தானே என்று விளக்கினேன். 'லவ் பி·போர் வெட்டிங்' என்று கிசுகிசுத்து அவன் பறந்து விட்டான். மனதிற்குள் ஒரு இனம் புரியாத திருட்டுதனம். இன்று மாதிரியே ஏதாவது புதியதாக அறிந்து கொண்டால், அது பயனுள்ளதாக இருக்கிறதோ, இல்லையோ, தகவல்களைத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவல்.

அடுத்த நாள் புலம்பிக் கொண்டிருக்கும் சரித்திர ஆசிரியரின் பிண்ணனியில் எனது புதிய ஞானத்தை பென்ச் சகாக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கிளுகிளுவென்று சிரித்தவர்கள் வேறு முக்கிய விஷயங்களுக்குத் தாவி விட்டோம். பள்ளியில் எங்கும் எனக்கு நல்ல பெயர். "கெட்டிக்காரன். புத்திசாலி. கற்பூர புத்தி. சாது. நல்லவன். அன்பானவன். சமத்து." என்று 'மெல்லினம்' ஜக்கு போல் அமைதியானவன்.

எங்கிருந்துத் தோன்றியதோ தெரியவில்லை. டிவி செய்திகளுக்கு முன் நேரம் காட்டும்போது வருகின்ற, ஐந்து விநாடித் துண்டு விளம்பரம் போல் நான் சொன்ன தம்மாத்துண்டு மேட்டரை வைத்துக் கொண்டு மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். என்னுடைய கட்டி காத்த நல்ல பேர், எக்ஸ்ட்ரா மார்க் வாங்கிக் கொள்ளும் சாம்ர்த்தியம் எல்லாம் கப்பலேறிப் போகும் அபாயம். பேந்தப் பேந்த விழித்து, அசடு வழிந்து, சோக மயமாகி, வாழ்க்கையே வெறுத்து, நண்பர்களுடன் பேசாமல், ·பேவரிட் ஆசிரியர்களின் பாடத்தை கவனிக்காமல் பயந்து பயந்தே வாழ்க்கை சென்றது.

டீச்சர்களிடம் பாவ மன்னிப்பாக தர்ம சங்கடத்தில் ஆழ்வதற்கு பதில் 'வாயைத் திறக்கவே செய்யாமல் தன் மனத்திலிருப்பதை ஒரு பொட்டலமாகக் கட்டி எடுத்து அவர்கள் மனத்துக்குள் வைத்துவிட முடியுமானால் மிகவும் நன்றாக இருக்கும். முடிந்த நேரத்தில் அவர்கள் பிரித்து எடுத்துப் புரிந்து கொள்ளட்டும்' என்று மெல்லின நாயகனைப் போல் நினைத்தேன்.

'மெல்லின'த்தின் கதாநாயகன் மிஸ்டர் ஜகன்னாதனும் இவ்வாறு பல உணர்ச்சிகளுக்கு ஆளாகி வீட்டை விட்டே ஓடி விடுகிறான். உப்புப் பெறாத விஷயம் என்று வாழ்க்கையில் நான் இப்பொழுது எண்ணும் ஒரு சம்பவத்துக்கு, அந்த நாளில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன் என்று சிந்திக்கும் போது வேறொன்று விளங்குகிறது. இன்று அலுவலகம் இன்ன பிற வாழ்க்கையில் முக்கியம் என்று கருதுபவை, நாளை அர்த்தமிழந்து விடுகிறது. 'இருப்பியல் சங்கடங்கள். வெளியே பேசிவிட முடியாத, மிகவும் அந்தரங்கமான நெருடல்களைத் தரக் கூடியவை அவை' என்கிறது 'மெல்லினம்'.

"வியப்பு தீராதவரை மட்டுமே ரசிக்கக் கூடிய அவனது மந்திர வித்தைகள்" என்னும் போது வாழ்வியலின் சூட்சுமம் விளங்குகிறது. எல்லாருக்கும் எல்லாமும் செய்யக் கூடியவை ஆகிவிட்டால் ஆச்சரியங்கள் போய்விடும்.

அரசாங்க ஊழியருக்கு 'துடைக்கும் விதமகவே தூசிகள் இருந்தாலும் அவையும் இருக்கப் பணிக்கப் பட்டவை', மாலை தினசரிக்கு 'ரேஸ் டிப்ஸையும் ஷேர் உலகையும் வரி விளம்பரங்களையும் நம்பி இயங்குவது', பழைய டைரிகளை மீண்டும் படிப்பதை 'தன்னைத் தனக்கு மறு அறிமுகம் செய்து கொள்வது', பதற்றம் இல்லாததற்கு 'ஒரு டாகுமெண்டரி படத்தின் வருணனையாளர் தொனியில்' என்று உவமிப்பது மனதின் ஆழங்களில் உட்காரும்.

குழந்தை வளர்ப்பு, அவர்களின் நியாயமான ஆனால் நம்மால் பதில் சொல்ல முடியாத கேள்விகள் என்று அலசி நம்மை நிறையக் கேள்வி கேட்டுக் கொள்ள வைக்கிறார். பெரியவர்களுக்காகவும் 'அனைவரும் நிறைய சம்பாதிப்பதற்காக, மத்த எல்லா படிப்பையும் நிறுத்திட்டு, இஞ்சினீயரிங் படிப்பை மட்டுமே ஏன் கவமெண்ட் வெச்சிக்கக் கூடாது?' என்று சிறியவர்களை விட்டு கேள்வி கேட்க வைக்கிறார். தாத்தா பாட்டிகளைத் தெரியாமல் வளரும் பேரன் பேத்திகள், பெற்றோர் இல்லாத தனிமையான வீட்டிற்கு வரும் குழந்தைகள் என இந்தக் கால டபுள் இன்கம் குடும்பங்களையும் காட்டுகிறார்.

'மாமியாரும் மருமகளும் பேசிக் கொள்ள மேலதிக விஷயங்கள் இல்லாத தருணங்களில் ஸ்லோகங்கள் கைகொடுக்கும்', 'குழந்தைகளின் பெயரில் பெரியவர்கள் அனுபவிக்கவும் சில சங்கதிகள் இருக்கின்றன' போன்ற வரிகளால் அன்றாட வாழ்வு தெரிகிறது.

மனக் குரங்காக விக்கி என்னும் காரெக்டர் திடீரென்று முளைத்து கால் கை வைத்துக் கொண்டு ஜகனை தடுத்தாட் கொள்வதைப் பார்க்கலாம். சின்ன மூளையின் பெரிய கற்பனையாக, அப்பாவின் இளமைக் காதலை 'ghosts of the past' என்பது போல் ஆவி, இரத்த காட்டேறி என்று மாற்றி சொல்லும் குழந்தைகளின் கதைகளை அசை போடலாம். டைரிகளில் எழுதுபவை கற்பனையா என்பதை அறிய, ஊரு விட்டு ஊரு வந்து ஊர்ஜிதபடுத்தும் பனிரெண்டுகளின் தைரியத்தை வியக்கலாம். சிறார்களின் கனவுகளாக சொல்பவை, நமக்கு இன்றும் தோன்றி பயமுறுத்தலாம். வதந்திகளின் வள்ர்ச்சி பற்றியும் ஆராயலாம்.

'உள்ளம் எப்போதும் மாற்றங்களையும் வளர்ச்சிகளையுமே எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறது', 'உலகின் ஒவ்வொரு அசைவையும் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் தன் வாழ்வின் அங்கதமாக நோக்கும் பக்குவம் மிகப் பெரிது' என்று கதையின் ஓட்டத்தோடு சொல்லும்போது நமது பெட்டகத்தின் குறிப்பிடத்தக்க வரிகளில் ஒன்றை சேர்த்துக் கொள்கிறோம்.

வட அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் ஒரே நாடு போன்ற பொருட் குற்றங்களைப் புத்தகமாக வெளியிடும்போது திருத்திக் கொள்ளலாம். எனக்கு இப்போது அடிக்கடி தோன்றும் 'உதவக் கூடியதெனப் பாடதிட்டங்களில் மேலதிகம் ஏதுமிருப்பதில்லை', 'தமிழும் வரலாறும் புவியியலும் வாழ்க்கைக்கு உதவுமா?' போன்ற வினாக்களுக்கு பதிலை யோசியுங்கள். (அலகில்லா விளையாட்டில் பல இடங்களில் இந்தக் கேள்விகளுக்கு இன்னும் விலாவாரியாக அலசல் கொடுக்கிறார்).

"தர்டீன் என்பது அன்லக்கி நம்பர் மேற்கு உலகத்தில்.
"தர்டீன் என்பது லக்கி நம்பர் எந்தன் விஷயத்தில்!"
என்று வைரமுத்துவின் பாடல் வரிகள் மாதிரி முக்கியமான வயதின் நிகழ்வுகளை காட் ப்ராமிஸ், குட் கேர்ள், டூ விடுவது, என்று குழந்தையாகவே மாறி பெரியவர்களுக்காக எழுதப்பட்ட சுவையான நாவல். படித்து முடித்தவுடன் ஒரு விஷயத்தை மறப்பதா தீர்ப்பதா என்ற தெளிவு ஏற்படும்.

போன வருடக் கல்கிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் படிக்கலாம். அல்லது தமிழ் மின்புத்தகமாகும் (தமிழ்ப்புத்தாண்டு) வரை காத்திருங்கள்.

அடுத்த பக்கத்துக்குப் போகுமுன் கதையில் இருந்து...

'எத்தனை முயற்சி செய்தாலும் தன் மனம் வேறெதிலும் ஈடுபட மறுப்பதை ஜக்கு மிகவும் உணர்ந்திருந்தான். கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் மாதிரி தான் ஆகிவிட்டோமா என்று அவனுக்கே அச்சமாக இருந்தது. எதை பார்த்தாலும் அதே ஞாபகம். எதை கேட்டாலும் அதே நினைவு. எதிலும் அதே சிந்தனை.' (இணையத்தின் பிடியில் மாட்டிக் கொண்டு இவ்வாறு விழித்து இருக்கிறேன். நீங்கள்?)

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு