செவ்வாய், ஜனவரி 27, 2004

பிடிக்காத பாடல்கள்

1. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - தூர்தர்ஷனில் சின்ன வயதில் அடிக்கடி
போட்டு படுத்துவார்கள். சோகம் கர்னாடகக் காவிரி போல் வழிந்தோடும்.
பாடல் வரிகள் எல்லாம் கவனிக்காமல், காட்சியமைப்பும் பிடிக்காமல்,
கண்ணை மூடி, பல்லைக் கடித்து, அடுத்த பாட்டுக்காக காத்திருக்கும்
காலங்கள் நரகம்.

2. ஆயிரம் தாமரை மொட்டுக்களே - இது விவிதபாரதியில் அடிக்கடி ஒலித்ததால்
அலுத்துப் போனது என நினைக்கிறேன். பாடலைப் பார்த்த பிறகு
வெறுப்பின் உச்சகட்டத்துக்கே சென்று விட்டேன். என் வயசுப் பயல்
கார்த்திக் செய்யும் அட்டகாசம் எங்கள் அனைவரின் வயிற்றெரிச்சலையும்
கொட்டிக் கொண்டது.

3. பசுமை நிறைந்த நினைவுகளே - பெருசுகளின் சிலாகிப்பு.
'முஸ்தபா..முஸ்த·பா' வந்ததோ, நான் பிழைத்தேன்.

4. பொன் மகள் வந்தாள் - ஏற்கனவே செயற்கைத்தனம் நிறைந்த காட்சியமைப்பு;
மறுபடி அதே பாட்டை உல்டா செய்ய என்னத்தைக் கண்டார்களோ?

5. அப்பனே...அப்பனே.. பிள்ளையாரப்பனே -
படத்தில் ரஜினி இருக்க,
பார்ப்பதற்கு ரசிகர்கள் நாங்கள் இருக்க,
யானையின் தயவு எதற்கு?

6. நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் -
அந்தக் கால கமலை விற்பதற்கு, மிருகங்கள் தேவைதான் என்றாலும்
மற்றுமொரு அறுவை பாடல்.

7. சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் -
சாகப் போறவன் ரொம்ப சிரிக்கிறான்.
சீக்கிரம் முடிங்கப்பா பாட்டை.

8. என்னவளே... அடி என்னவளே - 'காதலன்' வந்த சமயம், பரிட்சையில் கேட்கக்கூடிய
முக்கிய பகுதி போல் அடிக்கடி கேட்டு/பார்த்ததாலோ என்னவோ, பிறகு
மொத்தமாக வெறுத்து விட்டது.

9. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் - தலைவரை ஏமாற்றும் சரோஜா தேவியுடன்
கனவுலக டூயட் பாடுகிறாரே என்ற வருத்தம் இருந்தாலும், பாட்டு முழுக்க
சாரட் வண்டிதானே?

10. செண்பகமே... செண்பகமே - நாலு பேர், நாலு தடவை பாடறதுக்கு, அப்படி என்ன
இருக்குங்க இந்த பாட்டில்?

அடிக்க வருவதற்கு முன் நிறுத்திக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு