ஞாயிறு, ஜனவரி 18, 2004

இலக்கியம் எளிமையை இழக்க வேண்டும் - திலீப்குமார்

Interview with Dilip Kumar: "ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான தகுதிகள் பல என்னிடம் இல்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன் என்றாலும் சக மனிதர்கள் மீது உண்மையான பரிவு, தமிழ் வாழ்க்கையின் அன்றைய யதார்த்தங்கள் பற்றிய புரிதல், மனித இயல்பின் வினோதங்கள் குறித்த ஏற்புடைமை, நகைச்சுவை உணர்வு இவற்றின் கலவையான ஒரு பண்பு என்னிடம் இருந்தது. இதைக் கொண்டே நான் என் இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டேன்.

ஒரு உரைநடைப் படைப்பாளியான எனக்கு கவிதைகளின் நுணுக்கங்கள் குறித்து ஆழ்ந்த பரிச்சயம் இல்லை. ஆரம்பத்தில் நானும் சில கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்றாலும், என்னைப் பொறுத்தவரை 'கவிதை' ஒரு மிகை வடிவம்தான். அதில் வாழ்பனுவங்கள் மற்றும் எதார்த்தத்தின் பல்வேறு கூறுகள் உள்ளடங்கியதாக இருக்கும் போது கவிதை என்ற வடிவத்தின் ஆதார மிகைத் தன்மை இனம் காணக்கூடியதாகவே இருக்கிறது.

இன்றைய தமிழ்க்கவிதையின் உட்பொருள் தெரிவும், வார்ப்பும் தற்காலக் கவிதையின் பெரும்பாலான நியதிகளை நிறைவேற்றுவதாகவே உள்ளன. ஒரு சில கவிஞர்களைத் தவிர, பெரும்பாலான கவிஞர்களின் கவிதைகள் அந்தரங்கமான அனுபவத்தின் துல்லியமான விளக்கமாகவே நின்று விடுகின்றன. இதற்கப்பால் இவை நீட்சி பெறுவதில்லை. செம்மையான சொற்கள், படிமங்கள் இவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் கவிதை, தன் ஆதார அனுபவத்தை வாசக மனத்தைத் தடுமாறச் செய்வதிலும் அதைத் தொடர்ந்து உணர்வுபூர்வமான வாசிப்பை ஏற்படுத்துவதிலும் வெற்றியடைய வேண்டும்.

ஒரு படைப்பாளியின் அக உலகின் அலாதியான கூறுகளுக்கெல்லாம் இடமளிக்கும் வடிவமாக கவிதை இருந்தாலும் கூடவே அது பல சிக்கலான சவால்களையும் முன் வைக்கக் கூடியது. கவிதை என்பது அதன் உருவாக்கத்தில் எல்லா நிலைகளிலும் கடுமையான மன உழைப்பை வேண்டி நிற்கும் ஒரு வடிவம்.

கவிதையின் ஆரம்ப உந்துதல் வாழ்பனுவத்தின் மிக அற்பமானதொரு துணுக்கிலிருந்து கூட வர முடியும். ஆனால் அத் துணுக்கைப் பற்றிச் சென்று கவிதையாக்க முனையும் போதுதான் தன் போதாமை பற்றிய நிதர்சனம் படைப்பாளிக்குத் தெரிய வரும். இப் போதாமை மொழி சார்ந்தவையாகவோ உள்ளீடு சார்ந்தவையாகவோ எப்படியும் இருக்கலாம். இவற்றில் பல போதாமைகள் நிர்ணயிக்கப்பட்டவை. வேறு பல கடந்து செல்லக் கூடியவை. நிர்ணயிக்கப்பட்ட போதாமைகள் குறித்து கவிஞன் செய்வதற்கு அதிகம் ஒன்றும் இல்லை. ஆனால், கடந்து செல்லக் கூடியவற்றை அவன் எதிர்கொண்டேயாக வேண்டும். இதற்குத் திறந்த மனதும் எல்லையற்ற பணிவும் அவசியம்.

தமிழ்நாட்டில் 70 களுக்குப் பின் நிறைய முற்போக்குக் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், இவற்றின் உள்ளார்ந்த குறைபாடுகளைப் படைப்பாக்கத் தளத்தில் நின்று ஈழத்துக் கவிதைகள் தான் அம்பலப்படுத்தின. ஈழத்துக் கவிதைகளின் இந்த வீச்சு தமிழகத்தின் வெற்று முற்போக்குக் கவிஞர்களைத் தம் சுய நினைவுக்குக் கொண்டு வந்ததோடு 'முற்போக்கு அல்லாத' கவிஞர்களிடையே கூட அரசியல் சார்ந்த கவிதைகளிலும் நுட்பமும் தரிசனமும் சாத்தியம் என்பதையும் நிரூபித்துக் காட்டின. வ.ஐ.ச.ஜெயபாலன், சு. வில்வரத்தினம், சேரன், அரவிந்தன், செல்வி, சிவரமணி, என்று பல பெயர்கள் என் நினைவுக்கு வருகின்றன. கழிவிரக்கத்தின் பள்ளத்துக்குள் விழுந்துவிடாமலும், அரசியல் நெருக்கடிகளின் தீவிரத்தில் ஆவேசம் கொண்டு விடாமலும் இவர்களது கவிதைகள் நிரந்தரமான இலக்கிய அனுபவத்தை உள்ளடக்கிக் கொண்டவையாகத் திகழ்கின்றன.''

இன்று ஒரு வாசகன் படைப்பை விடவும் அப் படைப்புக்குப் புறம்பான சர்ச்சைகளிலேயே பெரிதும் ஈடுபட ஆசைப்படுகிறான்.

ரசிகர்களை விடவும் வாங்குபவர்கள் தான் முக்கியமானவர்கள் என்ற நிலை வந்துவிட்டது."

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு