ஞாயிறு, பிப்ரவரி 08, 2004

சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்... எனக்கு கணினி பற்றி ஏதும் தெரியாது. இன்னமும் என் கட்டுரைகளை நான் காகிதத்தில் தான் எழுதி வருகிறேன். மிகச் சமீபத்தில் தான் webcam என்பது கூட தெரியும். இன்னமும் கணினியின் மைக் வழியே மற்றொருவருடன் எனக்குப் பேசத் தெரியாது.

ஸீரோ டிகிரி மின் நாவலாக வெளிவர என் உதவியாளர்களே பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்திய மொழிகளிலேயே முதல் மின் நாவல் என்று ஸீரோ டிகிரியைப் பற்றி விளம்பரப்படுத்தியது அவர்களுடைய தவறு. அவர்கள் எனக்கு விஷயத்தைச் சொன்ன பிறகு நான் வேறு வேலைகளில் மூழ்கி விட்டேன்; பயணங்கள் வேறு.

அதற்குள் ஒருவர் ஏதோ கொலைக் குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டதைப் போல் தனது இணைய தளத்தில் கூப்பாடு போட்டிருக்கிறார். என் உதவியாளர் செய்த பிழைக்காக "சாரு பொய் சொல்லுகிறார்' என்று அலறும் இவர் யார் தெரியுமா? பொய் சொல்லுவதையே தனது தொழிலாகக் கொண்டவர். அந்தக் கீழ்மையான தொழிலுக்குக் கூலி: சில பல லட்சங்கள். தொழிலில் ஒப்பாரி வைப்பதும் உப தொழில்.
கூலிக்கு ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டிருக்கிறீர்கள் தானே? அதுபோல் இவர் சமீபத்தில் வைத்த ஒப்பாரி என்ன தெரியுமா?

ஒரு அரசியல் தலைவரின் மரணத்தின் போது தழுதழுத்த குரலில் (பொய்யான தழுதழுப்பு என்று வெளிப் படையாகவே தெரிந்தது.) "ஒரு சகாப்தமே இங்கு உறங்கிக் கொண்டிருக்கிறது' என்று கூறியது. இப்படிச் சொல்வதற்கு உங்கள் தன்மானத்தை நீங்கள் விற்க வேண்டும். விலையாக சில பல லட்சங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இப்படி கூலிக்கு மாரடிப்பவர்கள் தான் விளிம்பு நிலையில் நின்று, பட்டினி கிடந்து, உலக இலக்கியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களைப் பார்த்து குற்றம் சாட்டுகிறார்கள்.

இவர்களால் எனது படைப்பை எதிர்கொள்ள முடியாது. அதற்கு வேண்டிய இலக்கிய அறிவு இவர்களிடம் இல்லை. இவர்களிடம் இருப்பது பண பலம், அதிகார பலம். இதையெல்லாம் காண்பித்து ஒரு கலைஞனை பயமுறுத்த நினைப்பது கோழைத்தனம்.

நேற்று எம்.எஃப்.ஹுசேனின் ஓவியங்களை சில அரசியல் ரவுடிகள் நாசப்படுத்திய போது அவர் கூறினார்: "இது mediocrityயின் காலம். நீங்கள் உங்களுடைய தலையை உயர்த்த முடியாது. உயர்த்தினால், உங்கள் தலை நசுக்கப்படும்... ஆனால், இவர்கள் கோழைகள். கலாச்சாரம் பற்றி ஏதுமறியாத கூலிப்படையை வைத்து இவர்கள் நம்மைத் தாக்குகிறார்கள். ஆனால், இது நீடிக்காது. காலம் இவர்களைக் காணாமல் அடித்துவிடும்...'

இலக்கிய உலகில் புகுந்து இலக்கியவாதிகளை மிரட்டும் அரசியல் தரகர்களுக்கும் என்னுடைய பதில் இதே தான்!

-சாரு நிவேதிதா

நன்றி: கோணல் பக்கங்கள்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு