வெள்ளி, பிப்ரவரி 13, 2004

ஜானட் ஜாக்ஸன் போனார்... கெர்ரிகேட் அவல் வருகிறது

ட்ரட்ஜ் ரிபோர்ட் வலைப்பக்கங்கள் இன்னொரு சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் முதல் சிகாகோ சன் டைம்ஸ் வரை ஆராய ஒரு புது திரியை உலவ விட்டிருக்கிறார்கள். சுதந்திர கட்சி என்றாலே காதல் மன்னன் கென்னடியும், காதல் இளவரசர் கிளிண்டனும் நினைவில் வருவார்கள். அவர்கள் ஜனாதிபதியானது போலவே, கெர்ரியையும் ஆக்க முயற்சி செய்கிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களில் ஜான் கெர்ரி முண்ணனியில் உள்ளார். சுதந்திர கட்சி சார்பாக பதினான்கு மாகாணங்களில் நடந்த தேர்தல்களில் பன்னிரெண்டை கைப்பற்றி விட்டார். மார்ச் 2-க்குப் பிறகுதான் சண்டியர் புஷ்ஷை யார் எதிர்ப்பவர் என்று தெரியும் என்றாலும், அனேகமாக கெர்ரிதான் என்று பரவலாக பேச வைத்துள்ளார். முதல்கட்டத்தைத் தாண்ட வேண்டும் என்பதற்காக பாஸ்டனில் பெரிதாக அடிபடும் ஓரினக் கல்யாணங்கள் சர்ச்சையிலும் வழவழா கொழ கொழா பதிலகள் கொடுப்பது, புஷ்ஷை வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளவராக காண்பித்துக் கொள்வது என்று காய்கள் நன்றாகவே நகர்த்தப்பட்டு வருகின்றன.

தற்போதைய பணக்கார மனைவி தெரஸா ஹெய்ன்ஸை 1995-இல் மணமுடிக்குமுன், 1988-இல் முதல் மனைவியுடன் விவகரத்தானது. இடைப்பட்ட சொர்க்க காலமான ஏழு வருடத்தில் பல பெண்பார்க்கும் படலம் நிறைவேறியது சகஜம். அப்பொழுது சந்தித்த அஸோசியேடட் ப்ரெஸ் நிருபர் ஒருவருக்குக் குழந்தையும் கொடுத்து, அவளை நாடு கடத்தியதும்தான் இப்பொழுதைய சர்ச்சை.

தேர்தல் சமயத்தில் விவகாரங்களை பிரபலபடுத்துவது சாதாரணமான விஷயம். வாக் தி டா·க் திரைப்படம் முதல் என்.பி.சி.யின் வெஸ்ட் விங் வரை எல்.கே.ஜி. சொல்லிக் கொடுப்பது போல் அமெரிக்க அரசியல் அல்வாக்களை செய்முறை விளக்கியுள்ளார்கள்.

பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம்தான்... கெர்ரியே இப்படி செய்தி உண்டு செய்தாரா? அல்லது தேர்தலில் பரபரப்பக பேசப்பட்டு, அப்புறம் ஊளையிட்டு, இப்பொழுது மூலையில் தள்ளப்பட்டு தமிழகத்தின் உழவர் உழைப்பாளர் கட்சி போல் தள்ளாடும் ஹோவார்ட் டீன் விதைத்த செய்தியா?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு