வெள்ளி, பிப்ரவரி 13, 2004

யுகபாரதியின் 'மனப்பத்தாயம்'

மரத்தடியில் எஸ். பாபு கொடுத்த முன்னுரையை
பார்த்தவுடன் யுகபாரதியின் 'மனப்பத்தாயம்' தொகுப்பில் இருந்து....




'மூன்று குறிப்புகள்' என்று தலைப்பிட்ட கவிதையில் கவிஞனின்
தொழில் (கலை) அவஸ்தையைக் குறிப்பிடுகிறார் யுகபாரதி.

குறிப்பதற்குக்
காகிதம் தேடும்
சந்தர்ப்பத்தில் கூட
சிலவரிகளைத்
தொலைத்து விடுகிறேன்.

என்று ஒரு பகுதி மிக நுட்பமான அழகான கவனிப்பு.

(ஞானக்கூத்தன்)



"மூத்திர வாடை நிரம்பி வழியும் பேருந்து நிலையத்தில் முழம்போட்டு
விற்கும் பூக்காரி, அறிந்த கழிப்பறைகள் அத்தனையிலும் உடைந்தே
கிடக்கும் நீரள்ளும் குவளைகள்" என பல்வேறு காட்சிகளைப் பதிவு
செய்கின்றன.

"சோறுடைத்த சோழ வளநாடு காவிரி வறண்டதால் பக்கத்து ஊர் பனியன்
கம்பெனிகளில்", "அம்மண சிலைகள் நிரம்பிய ஆலயங்களில் பிரும்மச்சரிய
கட்டுப்பாடுகள்", "வராத முகூர்த்தம் மழையோடாவது வந்து தொலயட்டுமென
அரிசியை அதக்கும் முப்பத்தாறு வயது முருகேஸ்வரி", "தலை நனைய
ஊற்றுகிற நீரிலும் ஒளிந்திருக்கும் குளியலின் சூட்சுமம்", "பண்ணை
வீட்டு வயக்காடுகளில் இன்னுமிருக்கும் அடிபடாத எலிகள்", "அழுகி
விழுகிற வாழைத்தாராய் எழவு செய்திகள்" கேட்டு உடைந்த மனசை
நம்மூருக்கும் ஈழத்திற்கும் எட்டுமைல்தாம்ல" என்கிறவர்கள் கவிஞனின்
சமூக அக்கறையை வெளிப்படுத்துகின்றன.

(இராஜேந்திர சோழன்)



கல்லெறிதல் - யுகபாரதி


சாலையைச்
செப்பனிடுவதற்காக
கொட்டப்பட்ட
மணலில்தான்
கோயில் கட்டி
விளையாடுவோம்.

கலசத்திற்கு
பதிலாக
ஒரு கொத்து
காட்டாமினுக்கை
நட்டு வைப்போம்.

நடுவிலொரு
குழி பிரித்து
உருண்டையாய்
களிமண்ணை
பிடித்து
கர்ப்பக் கிரகம்
அமைப்போம்.

காகிதப் பூவால்
அலங்கரித்து
கன்னத்தில்
போட்டுக் கொள்வோம்
சப்புக் கொட்டி.

எதன் பொருட்டாவது
கலைய நேரிடும்
மீண்டும் வந்து
பார்க்க

கலசத்தில்
பட்டிருக்கும்
நீரபிஷேகத்தில்
சற்றே
கரைந்திருக்கும்
அதன் உரு.
சோகத் தூவானமாய்
கண்கள் அரும்பும்.

கோயிலை சிதைத்த
நாயின் மீது
கல்விட்டெறிவர்
ஹமீதும், பீட்டரும்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு