வியாழன், பிப்ரவரி 19, 2004

வலைப்பூ வைரஸ்

கோழி சுரம், சார்ஸ் போன்று இணையத்தில் மட்டும் தோன்றியிருக்கும் நோய் உங்களைத் தாக்கிவிட்டதா?

10. கணினி திரை ஒளிர ஆரம்பிப்பதற்கு முன்பே வலைப்பதிவுகள், உங்கள் கண்களுக்குத் தெரியும்.
9. ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவது போல், நான்கு தடவையாவது வலைப் பதிவீர்கள்.
8. உங்களுக்கென மூன்று வலைப்பதிவாவது இருக்கும்.
7. கேட்கும் பாடல், boss சொல்லும் வணக்கம், காலையில் ட்ரெயின் தவறவிட்டது என எதைப்பற்றியும் வலைக்குறிக்க விருப்பம்.
6. புதிதாக யாராவது இலவசமாக வலைப் பதிக்க வாய்ப்பளித்தால், பயனராகப் பதிந்து விடுவீர்கள்.
5. பத்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி பின்னூட்டம் பகுதியை நோட்டம் விடுவீர்கள். அரை மணிக்குள் பதில் எதுவும் வராவிட்டால், பதில் வராத சோகத்தையே வலைப்பதிய வேண்டும்.
4. தினசரி நூறு வலைப்பதிவுகளையாவது மேய்ந்து, மறுமொழி வாயும் வைத்து விடுவீர்கள். பதில் பெரிதாகத் தோன்றினால், அதை அப்படியே உங்கள் பதிவுக்கு புதிய கருவாக்கி விடுவீர்கள்.
3. வார்ப்புருவை வாரத்துக்கு ஒருமுறையும், பின்னூட்ட சேவகரை மாதத்துக்கு ஒரு முறையும், வண்ணக்கலவைகளை பத்து நாளுக்கு ஒரு தடவையும், வடிவமைப்பை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாற்றுவீர்கள்.
2. இன்று புதிதாக பார்த்த ஸ்மைலிகளையும், புதிய சின்னங்களையும் பின்னூட்டப் பெட்டிகளில் கொடுக்க வேண்டும்.
1. எட்டு விதமான வருகைப் பதிவேடோடு, அரட்டை பெட்டி, அறிவிப்புப் பலகை, செய்தியோடை, விருந்தினர் கணக்கெடுப்பு இத்யாதி வைத்துக் கொண்டிருப்பீர்கள்.

கொசுறு: அரசியல் சின்னமாக எங்கவது விளம்பரம் கொடுக்க வாய்ப்பு கிடைத்தால், வலைப்பதிவின் முகவரியை சுவரொட்டுவீர்கள்.

மூன்றுக்குக் கீழே ஆம் சொன்னால் - நீங்கள் கூகிள் மூலமாக இங்கு தடுக்கி விழுந்திருப்பீர்கள்.
மூன்று-ஐந்து கேள்விக்கு ஆம் என்றால் - வலைப்பூ மயக்கத்தில் உள்ளீர்கள்.
ஆறு கேள்விக்கு மேல் ஆம் என்றால் - வலைப்பூவிற்கு அடிமையாகி விட்டீர்கள்...

நன்றி: பவித்ரா அரசி

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு