வெள்ளி, பிப்ரவரி 20, 2004

'நாவலும் யதார்த்தமும்' - சுந்தர ராமசாமி

1.
பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ் மேடைப் பேச்சுகளை உள்ளூர ஒரு அநாகரிகம் என்றுதான் என் மனம் மதிப்பிடுகிறது. தன் முன்னால் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து தான் விரும்பும் கருத்துக்களை பேச்சாளர் கூறுவது; அதற்கான நேரத்தையும் அவரே தீர்மானித்துக் கொள்வது; பேசி முடித்ததும் அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு தன் பேச்சைப் பற்றி என்ன அபிப்ராயம் என்பதை அறிய துளிகூட அக்கறை இல்லாமல் மற்றோரிடத்துக்குப் பேசப் போய்விடுவது. பேச்சாளர் என்ன நினைக்கிறார் என்பது கேட்பவர்கள் எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. ஆனால் பேச்சைக் கேட்டவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பேச்சாளருக்குத் தெரிவதேயில்லை. அவருக்கு அதற்கான அக்கறையும் இல்லை. சிந்தனை உலகத்தைச் சார்ந்த இந்த ஒருவழிப் போக்குவரத்தைத்தான் நான் அநாகரிகம் என்கிறேன்.

----
2.
எங்களுக்கு அந்தக் கவலை இல்லை என்று நீங்கள் சொன்னால் அதிகக் கவலை கொண்டிருக்கிறீர்களோ என்று நான் சந்தேகப்படத் தொடங்குவேன். ஏனென்றால் எந்த விஷயத்தைப் பற்றி நான் கவலை கொண்டிருக்கிறேனோ அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் யாராவது விசாரித்தால் எனக்கு அதுபற்றி கவலையில்லையே என்றுதான் சொல்வேன். தன்னைப் போல் பிறரையும் நினைப்பதுதானே மனித சுபாவம். மனிதர்களுக்குரிய அநேக சுவபாவங்கள் எனக்கும் உண்டு. என் பிம்பத்திற்கு அந்தச் சுபாவங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு உண்டு.

----
3.
ஒரு நாவலைப் படிக்கும்போது அது ஏதோ ஒரு விதத்தில் நம்மிடம் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உறவு சாதகமானதா? பாதகமானதா? நிறைவைத் தரக்கூடியதா? அல்லது குறையுணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதா என்பதையெல்லாம் இரண்டாவதாகப் பார்க்க வேண்டியது. நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை அடிக்கடி நினைத்துக் கொள்கிறோம். நமக்குக் கட்டோடு பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். நண்பர்களைவிட அதிகமாக அவர்களை நினைத்துக் கொள்கிறோம். எதற்குச் சொல்கிறேன் என்றால் நமக்குப் பிடிக்கும் நாவல்கள்தான் நம்மைப் பாதிக்கின்றன என்பது அல்ல. பிடிக்காத நாவல்களும் நம்மைப் பாதிக்கின்றன. எதிர்மறையாகப் பாதிக்கின்றன. எந்தப் பாதிப்பையும் நிகழ்த்தாத நாவல் மனதிலிருந்து உதிர்ந்து போய்விடுகிறது. நேற்றுப் படித்து முடித்த ஒரு நாவல் இன்று மனதிலிருந்து உதிர்ந்துபோய்விட்டது; 20 வருடங்களுக்கு முன்னர் படித்த நாவல் மனதுக்குள் இன்றும் ஜீவகளையுடன் இருக்கிறது. ஏன் ஒன்று உதிர்ந்துபோயிற்று? ஏன் மற்றொன்று உயிர்ப்புடன் வாழ்கிறது? படைப்புச் சம்பந்தப்பட்ட அடிப்படையான பிரச்சனையே இதுதான்.

----
(திருவண்ணாமலை, முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை - 16.8.1999)

http://www.thinnai.com/ar0815033.html

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு