ஞாயிறு, மார்ச் 14, 2004

அங்கம்மாளின் கவலை - ஞானக்கூத்தன் (1981)

பலகைக் கதவில் நான்காவதனைக்
கஷ்டப்பட்டு விலக்கி எடுக்கையில்
அங்கம்மாளின் கண்ணில் நாராயணன்
வருவது தெரிந்ததும் அலுத்துக் கொண்டாள்

ஊதுவத்தியில் இரண்டைக் கொளுத்திப்
பூ கிடைக்காத சாமிப் படத்துக்கும்
கல்லாப் பெட்டிக்கும் காட்டிவிட்டு
இடத்தில் அமர்ந்தாள் அங்கம்மாள்.

கடைக்கு நாராயணன் வந்து சேர்ந்தான்
சங்கடமான சிரிப்பொன்று காட்டினான்.
பார்க்காதவள் போல் அவளிருந்தாள்
சுருட்டுக்காக அவன் வந்திருந்தான்
முதல் வியாபாரத்தில் கடனைச் சொல்ல
கூச்சப்பட்டு ஓரமாய் நின்றான்
என்ன வென்று அவள் கேட்கவில்லை
என்ன வென்று அறிந்திருந்ததால்

சைகிளில் வந்தான் சுப்பிரமணியன்
அவனைக் கண்டதும் அவள் வியர்த்தாள்
காலைப் பொழுதில் இரண்டாயிற்று
இன்றைக் கெப்படி ஆகப் போகுதோ?

"என்னடா நாணி? ஆரம்பிக்கலையா?"
"உன்னைத்தான் பார்த்தேன் நீ ஆரம்பி."
அங்கம்மாள் இந்தப் பேச்சை கேட்டு
உள்ளுக்குள்ளே எரியத் தொடங்கினாள்.

"நாணிக்கிரண்டு எனக்கிரண்டு
நடக்கட்டும் வியாபாரம் இன்றைக்கென்று
சுப்பிரமணியன் வண்டியை விட்டுக்
கடைக்குப் பக்கமாய் நெருங்கி வந்தான்
ஒன்றும் சொல்லாமல் அவள் இருந்தாள்
வேகம் குறையாத நடை பயின்று
கோபாலன் வந்தான் சேர்ந்து கொண்டான்
கேட்பதைத் தனக்கும் சேர்த்துக் கேளென்றான்
அங்கம்மாள் அவனை ஒருகணம் முறைத்தாள்
"என்ன முறைக்குது அங்கம்மா?" என்றான்
எல்லா முறைப்பும் சரியாப் போய்விடும்
வருகிறான் அங்கே ரத்தினம்" என்றான்
அந்தப் பெயரை கேட்டதும் அங்கம்மா
கொஞ்சம் பதறி நிலைமைக்கு வந்தாள்

'என்னடா அங்கே காலை வேளையில்
கிண்டல் கலாட்டா நமது கடையில்?
ரத்தினம் குறும்புடன் சிரித்துக் கூறினான்

"வாடா இன்னும் மத்தவனெல்லாம்
வரலியா?" என்றாள் அங்கம்மா
"என்னடா ரத்தினம் பெண்டாட்டி வாயில்
அடாபுடா? வெட்கம்" என்றான் கோபாலன்

சீற்றத்தோடு அங்கம்மாள் எழுந்து
நாயென்றும் கழுதையென்றும் அவர்களைத்
திட்டினாள்
"கணவன் மனைவி உறவில் இதெல்லாம்
சகஜம்" என்று ரத்தினம் சொன்னான்.

"நீங்களெல்லாம் படித்தவர்கள் தானா?
உங்களுக்கு எந்த மூடன் கொடுத்தான்
பட்டங்கள்?" என்று பொரிந்தாள் அங்கம்மா.
'அவரும் ஒருவேளை உன்னிடம் வருவார்
சுருட்டுக் கேட்டெ'ன்று நாராயணன் சொன்னான்

"அவரைப் பிடித்துக் கொண்டு அப்புறம் என்னை
விட்டு விடாதே"யென்று ரத்தினம் கெஞ்சினான்
அந்தச் சமயம் வேணுவும் வந்தான்
சுருட்டை எடுக்கக் கடைக்குள் நீண்ட
வேணுவின் கையை அவள் மடக்கினாள்
சுகமோ சுகமென்று வேணு பாடினான்

ரத்தினம் அவனது தலையில் தட்டி
அத்து மீறினால் உதை என்று சொல்லி என்
பெண்டாட்டி என்பது மறந்ததா என்றான்

மன்னிக்கச் சொல்லி வேணு சிரித்தான்
வேணுவின் கையை மடக்கிய வேகத்தில்
சேலை நகர்ந்து சிறிது வெளிப்பட
நல்லதாய்ப் பெயரை உங்கப்பன் வைத்தான்
என்றான் ரத்தினம் அங்கம்மாளுக்குக்
கோபம் பொரிய உங்கம்மாவைப்
பார்த்துச் சொல்லென்று உரக்கக் கூவினாள்

இடையில் சிறுவன் மிட்டாய்க்கு வந்தான்
எடுத்துக் கொடுத்து அனுப்பிய பின்பு
சீயக்காய்க்குக் கிழவி ஒருத்தியும்
வெற்றிலைக்குக் கோனார் ஒருவரும்
ஊறுகாய்க் கென்று பிச்சைக் காரியும்
வந்து போனதும் கோபாலன் மெல்ல
முதல் வியாபாரம் நடந்த பிற்பாடு
தாமதம் ஏனென்று கையை நீட்டினான்

நீட்டிய கையைத் தட்டி நீக்கினாள்
தட்டிய கையைத் தீண்டிய தன் கையை
முத்தம் கொடுத்து பிறர்க்கு நீட்டினான்
அந்தக் கைக்கு முத்தம் கொடுத்தனர்

கௌரவமான தகப்பன் தாய்க்குப்
பிறக்காத பிறவிகள் நீங்களென்று
ஒட்டு மொத்தமாய் அங்கம்மாள் திட்டினாள்
உன்னைப் பார்த்தோம் உன்னைத் தொட்டோம்
முத்தம் கூடக் கிடைத்துவிட்டது
சுருட்டைக் கொடுத்து எங்களை அனுப்பென்று
வேணு நயமாய் எடுத்துக் கூறினான்.

அவளுக்குக் கோபம் எல்லை தாண்டிற்று
அவர்கள் சிரிப்பும் எல்லை தாண்டிற்று
அடுத்த வீடுகள் எதிர்த்த வீடுகள்
இன்னும் தெருவில் போவோர் வருவோர்
அனைவரும் இதனைப் பார்த்து ரசிக்க ஒரு
சுருட்டுப் பெட்டியைத் தெருவில் எறிந்தாள்

ஆளுக் கொன்று பற்ற வைத்துத்
தங்கள் பாக்கியை ஒன்றாய்த் திரட்டி
அங்கம்மாளை ஆங்கிலப் படத்துக்குக்
கூட்டிக் கொண்டு போகலாமென்று
ரத்தினம் சொல்ல அனைவரும் சிரித்தனர்

ஒன்பதுக் கப்புறம் இரவில் பார்ப்பதாய்
வேணு சொன்னதும் அனைவரும் கலைந்தனர்.

அங்கம்மாள் இருக்கையில் அமர்ந்தாள்
அருகில் இருந்த ஒருவரைக் கேட்டாள்.
'என்ன சாமி எனக்கும் வயது
நாளை வந்தால் ஐம்பதாகிறது
இந்தப் பிள்ளைகள் என்னைத் தாயாய்
நினைக்காமல் போகக் காரணம் என்ன?'

----
ஞானக்கூத்தன் கவிதைகள் - விருட்சம் - ரூ. 80.00
virutcham@mailcity.com

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு