மனவியல்... உளவியல்... உளறல்: தென்றல்
'சொல்ல மறந்த கதை'யை விட 'தென்றல்' தெம்பான படம். தத்து
எடுக்கப்படும் சிறுவர்களின் மனவியல் மாற்றங்களை மெலிதாக
சொல்லியிருக்கும் பகுதி குறிப்பிடத்தக்கது. புது வீட்டுக்கு
வந்தவுடன் பார்த்திபனுடனேயே ஒட்டி உறவாட விரும்புவது,
அவர் இடும் வார்த்தைகளுக்கு மட்டும் மதிப்பு கொடுப்பது,
காலம் செல்ல செல்ல உரிமை எடுத்துக் கொள்வது, கொஞ்ச நாட்களுக்குப்
பின் முரண்டு பிடித்து தான் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க
ஆணையிடுவது, கழிவிறக்கத்தில் அன்பைத் தேடி ஒடுங்குவது
என்று பல பரிமாணங்களை அந்த பாதுகாவலன் டு நண்பன் டு
அப்பா வளர்ச்சியில் சொல்லியிருந்த விதத்திற்காகவே படத்தை
பார்க்க வேண்டும்.
தாமரை (உமா) தன் தந்தையை சிறிய வயதிலேயே இழந்ததினால்,
நலங்கிள்ளியை அப்பா ஸ்தானத்தில் வைப்பதா அல்லது இனக்கவர்ச்சியா
அல்லது ஹீரோ வழிபாடா என்று பன்முக ஆராதனை செய்வதை விதவிதமாக
காட்டுவதும் அழகு. 'வானமதி'யில் பொம்மையாக வந்து போன ஸ்வாதி
பெயர் மாற்றி 'ஸ்வாதிகா'வாக பின்னியிருப்பதை விகடன் கூட கண்டு
கொள்ளவில்லை. உண்மை சம்பவங்களை ஆங்காங்கே கதையோடு
கோர்த்தது, உப்புமா கவிஞரைக் கிண்டல் செய்யும் நகைச்சுவை,
படைப்பாளியின் மனக்குழப்பங்களும் எழுதுவதற்கான மனநிலை,
கலையை அனைத்து வடிவங்களிலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம்,
புத்தகத்தின் மேல் தமரை கொண்டுள்ள ஈடுபாட்டின் காரணங்கள்,
மூட் சமாசாரம் என்று பல விஷயங்களை தெளிவாக காட்டுகிறார்.
இளைய தலைமுறையை சென்றடையாதபடி சோகம் அப்பியிருப்பது மட்டுமே
வருத்தம் தரும் விஷயம். 'சாமி'யில் கூட நாயகன்/நாயகி துன்புறும் காட்சிகள்
இருந்தன; நம்மை வருத்தப்பட வைத்தன; ஆனால், நிறைய மசாலா தூவி
தொடர்ந்த காட்சிகள் போல மசாலா ஆக்காவிட்டாலும், இந்தக் காலத்திற்கு ஏற்ற
மாதிரி 'இனிப்பான' நிகழ்வுகளை சரியான விகிதத்தில் தூவவில்லை. இந்த
மாதிரி வரவேறகத்தகுந்த படங்கள் 'லாபம்' ஈட்ட வேண்டும் என்ற கவலையில்,
மகிழ்ச்சி/காதல்/சுவையான காட்சிகள் ஆங்காங்கே இன்னும் கொஞ்சம்
இருந்திருக்க வேண்டும்!
தென்றல் குறித்து மரத்தடியில்....
தென்றல் - ஒரு பார்வை: கஜன் ஷண்முகரத்னம்
தென்றலும் தெருப்பொறுக்கியும்: 'ஸ்வஸ்திக்' சுரேஷ்
கருத்துரையிடுக