செவ்வாய், மார்ச் 02, 2004

The Passion of the Christ & மொஹரம் ஸ்பெஷல் - பா.ராகவன்

சமீபத்தில் இறப்புக்குப் பிறகு மனிதன் என்ன ஆகிறான் என்பது குறித்துப் பேசும் ஏழெட்டு நூல்களை எடுத்துவைத்துக்கொண்டு ஒரு நாலைந்து நாள் அலசினேன். மனைவி டைவர்ஸ் அளவுக்கு போகப்போவதாக பயமுறுத்தியதும் மூடிவிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன். ரொம்ப வியப்பாக இருக்கிறது. அறிவியல் பூர்வமாகவும், முற்றிலும் ஆன்மீகம் சார்ந்தும், உள்ளுணர்வின் அடிச்சுவட்டின் படியும் பலர் பலமாதிரி இதுகுறித்து எழுதியிருக்கிறார்கள்.

மெக்ஸ் ட்ரூவிங் என்றொரு ஜெர்மானியர் எல்லாருக்கும் இரண்டு படி மேலே போய் மரணத்துக்குப் பிறகு மூன்று நிலைகள் இருப்பதாகச் சொல்கிறார். படுபாவியாக வாழ்ந்து செத்துப் போனால் உடனே மறுபிறப்பு. புழுவாக, ஆடாகவெல்லாம் இல்லை. அதே மனுஷ ஜென்மம் தானாம். செய்த பாவத்தைத் தீர்த்துக்கொள்ளும் வரை இதே பிறப்பு தொடருமாம். கஷ்டமும் அதிகரித்துக்கொண்டே இருக்குமாம்.

சுமாரான நல்லவனாக, கொஞ்சம் மனச்சாட்சியுடன் வாழ்ந்து மரித்தால் மறுபிறப்பில் கொஞ்சம் உயர் மனித உடல் சாத்தியமாகுமென்கிறார் இவர். அதாவது ஒரு அப்துல்கலாம் ரேஞ்சில் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது. உத்தமோத்தமனாக வாழ்ந்து மரித்தால் மறுபிறப்பில் சந்யாசி தானாம். சந்தேகமே இல்லை. ஒரு நல்ல சன்னியாசியாக வாழ்ந்து , இந்தப் பிறப்பில் இறைவனைக் குறித்து தவம் செய்து, யோகத்தின் உயர்நிலைகளையெல்லாம் தொட்டுவிட்டால் ?

நேரே சொர்க்கம் என்று தானே நினைக்கிறீர்கள்?

இல்லை. சூக்ஷ¤ம உலகம் என்றொரு கிரகம் இருக்கிறது என்று அநேகமாக் எல்லாருமே சொல்கிறார்கள். (உபநிஷத்திலும் இது குறித்த பேச்சு பல இடங்களில் உண்டு.) இந்த சூஷ¤ம உலகம் எப்படி இருக்கும்? சுவாமி யுக்தேஷ்வர் கிரி என்னும் வங்காளத்தைச் சேர்ந்த 18ம் நூற்றாண்டு யோகி அதை வருணிக்கிறார்:

1. சூஷ¤ம உலகம் பூமியை விடப் பெரியது.
2. அங்கே வசிக்க அருளப்பட்டவர்கள் தாம் விரும்பிய உருவத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் 90 வயதில் இறந்தாலும் 20 வயது உருவத்தை நிரந்தரமாகப் பெறலாம்.
3.சூஷ¤ம உலகில் நதிகள் பல வண்ணத்தில் இருக்கும். நீலம், பச்சை, மஞ்சள், வயலட் இன்னபிற. ஆனால் இதன் வண்ணத்தையெல்லாம் மை யாஹ¤ போல் மாற்றிக்கொண்டிருக்க முடியாது.
4.சூஷ¤ம உலகவாசிகள் மூக்கால் சாப்பிடலாம், வாயால் கேட்கலாம், காதால் பேசலாம், கையால் நடக்கலாம், காலால் வீணை வாசிக்கலாம். உடல் உறுப்புகளைத் தம் விருப்பப்படி உபயோகிக்க முடியும்.
5. அவர்கள் வாய்திறந்து அதிகம் பேசுவதில்லை. தாம் பரிமாற நினைக்கும் கருத்தை மனத்திலிருந்து மனத்துக்கு அப்லோட் செய்துவிட முடியும் அவர்களால்.
6. இடைவிடாத இறைசிந்தனை அவர்கள் அனைவருக்கும் இருக்கும்.
7. சூட்சும உலகிலும் கெட்டவர்கள் உண்டு. அவர்களைக்கொண்டு தான் மாந்திரீகம் போன்றவை செய்யப்படுகின்றன.
8. சூட்சும உலக வாசிகளை நம்மால் காண முடியாது. ஆனால் சிறு குழந்தைகளுக்கு தேவதைகள் தென்படுவார்கள். இரவில் குழந்தை தூக்கத்தில் சிரித்தால் யாரோ சூட்சும உலகத்து தேவதை விளையாட்டுக் காட்டுகிறதென்று அர்த்தம்.
9. அவர்கள் நினைத்தால் பூமிக்கு வந்து விருப்பப்பட்டவர்களுடன் பேசிச்செல்ல முடியும். அப்போது சாதா மனித ரூபத்தை (பழைய உருவத்தையே) மீண்டும் எடுத்துக்கொள்ளலாம்.
10. பூமியிலிருந்து நேரே சொர்க்கத்துக்குப் போக முடியாது. சூட்சும உலகிலிருந்து தான் அது சாத்தியம்.

மேற்சொன்ன விஷயங்கள் தவிரவும் அந்த சூட்சும உலகம் குறித்து நிறைய சமாசாரங்கள் இருக்கின்றன. ரொம்ப மேஜிக்கலாகத் தோன்றக்கூடியவற்றைத் தவிர்த்திருக்கிறேன்.

நிற்க. நாம் பேச ஆரம்பித்தது மரணத்துக்குப் பின் மனிதன் என்பது குறித்து.

ஒன்று மறுபிறவி, அல்லது சூட்சும தேகம். அவ்வளவு தானா என்றால் இல்லையாம்!

இரண்டு சாத்தியங்களும் இல்லாமல் (நோ வேகன்ஸி) அந்தரத்தில் ஆவியாகவே அலைந்துகொண்டிருப்பதும் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த ஆவிகளில் சிலவற்றைத் தான் சில்லறைச் சித்தர்கள் வாழைப்பழத்திலிருந்து பிள்ளையார் எடுக்கவும், வாயிலிருந்து லிங்கம் எடுக்கவும் பயன்படுத்துகிறார்கள். ஏவல் போன்ற விஷயங்களில் சேரும் இது. ஆனால் இந்த நிலையில் ஒருத்தர் எத்தனை காலம் இருக்க வேண்டியிருக்கும் என்று யாரும் உறுதியாக்ச் சொல்லவில்லை. பல ஆண்டுக்ளோ, சில நாட்களோ, சில வாரங்களோ, சில நிமிடங்களோ ஆகலாம்.

இறந்தவர் யாரும் இந்த ஆவி அலைச்சல் நிலையை அதிகம் விரும்புவதில்லை என்கிறார்கள். மனித வாசனை மிச்சங்களுடன் உடலை மட்டும் துறந்துவிட்டு அலைவதில் அவர்களுக்குப் பல எக்ஸிஸ்டென்ஷியல் பிரச்னைகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இத்தனை விவரம் கிடைக்கிறதே தவிர, அந்த சொர்க்கம் எது, அதன் வண்ணம் என்ன, வடிவம் என்ன என்பதுகுறித்து ஒரு தகவலும் இல்லை. உயர்ந்ததொரு மாளிகையில் ஒய்யாரமான சிம்மாசனத்தில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு எந்தக்கடவுளும் பித்தளை கிரீடங்கள் தாங்கி அமர்ந்திருக்கவில்லை என்று மட்டும் அனைவரும் அடித்துச் சொல்கிறார்கள்.

ரொம்ப குடைந்துபார்த்தால் 'அட போய்யா, அகம் பிரும்மாஸ்மி' என்றுவிடுகிறார்கள்.

அடக்கடவுளே, அகத்தை ஆராய்ந்து அறிய இந்த உலகிலிருந்து, ஆவி உலகுக்குப் போய், மீண்டும் பிறந்து, மீண்டும் இறந்து, மீண்டும் சூட்சும உலகுக்குப் போய் அங்கிருந்து நேரே டிக்கெட் வாங்கிக்கொண்டு சொர்க்கத்துக்குப் போனாலும் அங்கு சிம்மாசனம் ஏதுமில்லை என்று திரும்பி இங்கேயே வந்து 'அகம்' தேட வேண்டியது தானா?

சபரி மலைக்குப் போனவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி , கால்கள் நடுங்க மலை ஏறி, தாகம் வாட்டி, தள்ளாடி க்யூவில் நின்று, நகர்ந்து சந்நிதானத்துக்குள் நுழையும் போது மேலே பெரிதாக இந்த போர்டு தான் வைத்திருப்பார்கள். "அகம் ப்ரும்மாஸ்மி"

அரை அங்குல உயரத்தில் சுவாமி பாதிதான் கண்ணில் படுவார். அதற்குள் பிடித்துத் தள்ளிவிடுவார்கள். நிஜ ஸ்வாமி அந்த் போர்டு தான் என்று அவசியம் தோன்றும்; தோன்ற வேண்டும்.

கொஞ்சம் உற்றுப்பார்த்தால் எல்லா இந்திய தத்துவஞானிகளுக்குமே இந்தக் கேள்விதான் அல்டிமேட்டாக இருந்திருக்கிறது. இறப்புக்குப் பிறகு என்ன ஆகிறோம்?

பைபிளில்கூட இது குறித்து மிக விரிவான விசாரணைகள் இருக்கின்றன. குறிப்பாகப் பழைய ஏற்பாட்டில். ஆனால் அது கதை மாதிரி இருப்பதால் பலபேர் 'அப்புறம் காக்கா வடையைத் தவற விட்டுடுச்சா?' என்பதிலேயே நின்றுவிடுகிறார்கள். கதை முகமூடி தாண்டி உள்ளர்த்தம் தேடும்போது மிகப் பல சங்கதிகள் அகப்படுகின்ற்ன.

நானே வழியும் சத்தியமும் ஜீ£வனுமாயிருக்கிறேன் என்கிற ஒரு வரிக்குள் பகவத் கீதை முழுவதுமே அடங்கிவிடுவதைப் பார்க்கலாம். (அப்படியே தலைகீழாக மாற்றிப் படித்துப் பாருங்கள் - ஜீ£வன் சத்தியத்தின் அடியற்றி வாழ்ந்தால் வழி தானாகக் கிட்டும்.) நானே ஜீவனும் சத்தியமும் வழியும் என்பது பரம அத்வைதம். அத்வைதப்படியும் அனைத்துப் படியும் நோக்கினால் ஆன்மாவுக்கு மரணமே இல்லை. எனில் மேற்சொன்ன அந்த் உலகம், அடுத்த உலகம், கீழுலகம், மேலுலகப் பயணங்கள் , வாழ்வுகள் எல்லாம் இருப்பதை உறுதி செய்வதாகிறது.

ஆக, இறுதியில் குழப்பமென்னவோ நிச்சயம். அந்தப் பிறவா நிலை? சான்ஸே இல்லை போலிருக்கிறது.

பா.ராகவன்
07/02/2003

நன்றி: புத்தகப்புழு

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு