வியாழன், மார்ச் 11, 2004

வலைப்பூக்கள் நுகர்தல்

1. ஆட்டோகிரா·ப் விமர்சனத்தை அனுபவித்து எழுதியிருக்கிறார் மீனாக்ஸ். மூன்று, நான்கு பதிவுகளை எப்படி மேய்க்கிறார், தமிழை விட ஆங்கிலப் பதிவின் மேல் அதிகப் பரிவு ஏன் என்பதை இன்னொரு நாள் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், படத்தின் குறைகளை, விகடன் போல் இவரும் கண்டுகொள்ளவில்லை. நாலு கேமிராமான் எல்லாம் சாமானியனாகிய என் கண்களுக்குப் புலப்படவில்லை. எங்கோ படித்து, 'ஆஹா... நான்கு விதமான பதிவு கிடைக்கிறதே' என்று எல்லாம் படத்தை மறுமுறை பார்த்தபிறகும் பாராட்ட முடியவில்லை.

சேரன் என்னும் கதாசிரியர் நிறைய இடங்களில் சறுக்கியிருந்தார். நல்ல பல தமிழ்ப் படங்களில் இருந்து சுவாரசியமான பிண்ணனிகள் கடன் வாங்கப் பட்டதை விட்டு விடுகிறேன். (கடன் வாங்கியே ஓட்டும் ப்ளா·கில், அவர் 'இதய'த்தைத் தழுவினார், 'கிளிஞ்சல்கள்' சாயல், 'புது வசந்த'த்தின் தாக்கம் என்று சொன்னால், என்னுடைய காரின் டயரை நானே ப்ங்க்ச்சர் செய்தது போலாகிவிடும்). ஆனால், சேரனிடம் கேடக விரும்பும் ஒரு கேள்வி:

'ஏன் சார்... உங்களைக் காதலிக்க வில்லையென்றால் அவர்கள் நன்றாக இருக்க மாட்டார்களா?'

பள்ளிக் காதலி சௌகரியமாக இருக்கிறாள். 'பெப்ஸி உங்கள் சாய்ஸில்' பலர் சொல்வது போல் இல்லத்தரசி. மூன்று குழந்தைகளுக்குத் தாய். (மாமியார் கூட வீட்டில் மிஸ்ஸிங்). பாந்தமான கணவன். பசி, பட்டினி, ஏழ்மையில் ஒன்றும் இல்லை. ஆனாலும், கதாநாயகன் அவளைப் பல வருடங்கள் கழித்து முதன்முறையாக சந்தித்தவுடன் கேட்கிறான், 'ஏன் இப்படி கஷ்டப்படறே?'

மலையாளக் காதலி பணக்கார சமஸ்தானத்தில் வாக்கப்படுகிறாள். கணவனை வெட்டு குத்தில் இழந்து விடுவதாகக் காண்பிக்கப்படுகிறது. விதவையும் சோக உருவாக தம்பூராவை மீட்டிக் கொண்டு வெறுமனே காலம் தள்ளுவதாக சொல்லப்படுகிறது.

முறுவலரசி ஸ்னேஹாவை கிட்டத்தட்ட கன்னிகாஸ்திரியாகவே ஆக்கிவிட்டார்.

'ஏன் சார்... உங்களைக் காதலிக்க வில்லையென்றால் அவர்கள் சந்தோஷமாக இருக்க மாட்டார்களா?'

மலையாளத்தில் மட்டுமே சம்சரிக்கும் லத்திகா, காதல் கைகூடாதபின் திருமணத்திற்குப் பிறகு தமிழில் கதைப்பது, சரஸ்வதியாக/மீராவாகத் தெளிவாக உருவகப்படுத்திய பின்பும் காணபவர்களுக்குப் புரியாதோ என்று வெளிப்படையாகக் காட்சியமைப்பது என்று ஓரிரண்டு கடுப்புகளை கண்டுக்காமல் படத்தோடு நிச்சயம் லயிக்கலாம்.

2. கருணாஸ் மட்டுமே அறிந்த தமிழ் சினிமா பார்க்கும் நல்லுலகில், கருணா குழப்பத்தை உண்டு செய்திருக்கிறார். கிழட்டு நாடோடி மூலம் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டாலும் அவருடைய சிங்கள செய்திகள் சேகரிப்பு இப்பொழுது நல்ல பயனைத் தருகிறது. சொந்தக் கருத்துக்களை இன்னும் கொஞ்சம் விரிவாகவும் (?!) பத்தி பிரித்தும் வெளியிட்டால் என்னுடைய குழம்பிய குட்டைத் தெளியும்.

நன்றி: Aging Wanderer's Raging Rambles

"இந்தியா எப்போதோ கருணாவினைக் கொண்டு பிளக்கத் திட்டமிட்டுவிட்டது என்பது ஒருவரின் புத்திக்கூமையைப் பகிடி பண்ணுவதுபோல. தன்னைக் கொல்ல ஆட்கள் அனுப்பியிருக்கின்றார்கள், பிரபாகரன் போரைத் தொடங்க இருந்தார் என்ற இருகூற்றுகளும் கருணா சொன்னதிலிருந்து மிகவும் (அவரவர் தேவைக்காகத்) திரிக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன (ரோய்ட்டர் இந்தியாவுக்குத் தலைமையகத்தினைக் கொண்டுவந்ததின் கெடுதல் இப்போதுதான் தெரிகின்றது).

பிரபாகரனா, கருணாவா என்பது எனது ஈடுபாடில்லை. இருவரிலும் பிழையும் இருக்கின்றது; இருவரும் ஈழத்தமிழர் நலனுக்கு அவசியமாகவே இருந்திருக்கின்றனர். நேற்றைக்குவரை கேர்ணல் கருணாவாக இருந்தவர் இன்றைக்குத் துரோகி கருணாவாக வன்னித்தமிழ்ப்புலிகள் சார்ந்த செய்தித்தாபனங்களிலே சொல்லப்படுவதும் உருக்காட்டப்படுவதும் நேற்றைக்கு வரை பயங்கரவாதி கருணாவாக இருந்தவர் இன்று பிரபாகரனின் கொடுங்கோன்மையை வெளிச்சொல்லும் பாதிக்கப்பட்ட கிழக்குத்தமிழர்களின் விடுதலைவீரராக இலங்கை இந்தியச்செய்தித்தாபனங்களினாலே உருவகிக்கப்படுவதும் ஈழத்தமிழன் என்றளவிலே எனக்கு ஈடுபாடானதில்லை. "

3. தமிழ்-வலைப்பூப் பிதாமகர் மாலனின் 'எது வலைப்பூ' என்னும் கடிதம் பலருடைய பதிலையும் விவாதத்தையும் தந்திருக்கிறது. என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று யோசிக்கலாமா என்று யோசித்தபொழுது ஷார்ப்ரீடர் மூலம் பரியின் பதிவை பார்த்த பிறகு, 'கலங்காமல் (இது செம்புலப் பெயநீர் கலங்கல்...) சொல்லியிருக்கிறார்' என்று தோன்றியது.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு