பாரதி சின்னப் பயல் - ஹரி கிருஷ்ணன்
பாரதியார் கவிதைகள்:
பாரதி என்ற பெயரைக் கேட்டாலே மனதில் மலர்ச்சி ஏற்படுகிறது. பாரதிக்குப் பராசக்திப் பித்து அதிகமா அல்லது கண்ணன் பித்து அதிகமா என்று கேட்டால் முன்னது என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். பாஞ்சாலி சபதத்தில் இதற்கு விடை இருக்கிறது.
அவைக்கு ஒரு வேண்டுகோள். பாரதியின் உரைநடை பற்றியும் பேசலாம். அதிகம் கவனிக்கப்படாமலே இருக்கும் துறை அது. கட்டுரை, சிறுகதைகள், ஆங்கில எழுத்து, பத்தி¡¢க்கைக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளுக்கும் தன் பங்கைச் செலுத்தியிருப்பவன் பாரதி. Fox with a Golden Tail என்ற கூடார்த்தக் கதை பாரதி தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலத்திலும் நகைச்சுவை எழுதுவதில் வல்லவனாய் இருந்தான் என்பதற்குச் சான்று. தாகூர் சிறுகதைகளைத் தமிழிலும் ஆழ்வார் பாசுரங்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருப்பது பலருக்குத் தொ¢யாது. அவற்றைப் பற்றியும் பேசலாமே.
(பலருக்கும் தெரியாதது என்னவென்றால் பாரதிதாசன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அயல்நாட்டுப் பத்திரிக்கைகளில் வெளிவரச் செய்திருக்கிறான். பாரதிதாசனே குறிப்பிடும் உண்மை இது.)
யாப்பறிந்தவர்கள் பாரதியின் யாப்பியல் கொள்கைகளை விவாதிக்கலாமே. இலக்கணம் அறியாத வெள்ளைப் புலவன் என்ற உரையின் உண்மை என்ன என்பதையும் பார்க்கலாமே. (வெளிவிருத்தம் என்ற வகைக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் பாரதியின் ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா என்ற பாடலை அல்லவா பார்க்க வேண்டும்.)
அதிகம் அறியப்படாத பாரதி கவிதைகளையும் அவ்வப்போது வெளிவரும் பாரதி ஆராய்ச்சி நூல்கள் பற்றியும் பரிமாறிக்கொள்ள இந்த இழை எவ்வளவு வாய்ப்பானது! இப்படி ஓர் இழையினை ஆரம்பித்தவருக்கும் இந்த இழையை மிகுந்த ஆர்வத்துடன் இதுவரை பின்னிக்கொண்டிருப்பவர்களுக்கும் திக்குகள் அனைத்தையும் நோக்கி வந்தனம் செய்கிறேன். (பாரதி இழை வெறுமையாக இருக்கலாமா என்ற ஆதங்கம் ஒன்றையும் பார்த்தேன்.) அடடா. உங்கள் உணர்வுகள் என் கண்களைப் பனிக்கச் செய்கின்றன.
என் பங்குக்கு பாரதி சின்னப் பயல் என்ற ஈற்றடியில் பாரதி எழுதிய அவனுடைய ஆரம்பகால வெண்பாக்களை இங்கு இடுகிறேன்.
ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல். (1)
இந்த வெண்பாவை எழுதியதும் காந்திமதிநாதன் அடைந்த (அவரும் அப்போது 16-17 வயது இளைஞர்தாம்) நாணம் சிறுவன் பாரதியைத் தாக்கியிருக்கவேண்டும். இன்னொரு வெண்பாவும் பாடினான்.
ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் - மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல். (2)
இந்த நிகழ்ச்சி 1895லிருந்து 1898க்குள் நடந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. அதாவது பாரதிக்குப் 13 முதல் 16 வயதுக்குள். அவைக்கு ஒரு வினா. கண்ணன் பாட்டில் பாரதி பொதுவாக ஒரு முறையைக் கடைப்பிடித்திருக்கிறான். ஆண் வடிவத்திற்குக் கண்ணன் என்றும் பெண் வடிவத்திற்குக் கண்ணம்மா என்றும் பெயர் வைத்திருக்கிறான். குழந்தை வடிவில் ஆண் குழந்தையாகவும் பெண் குழந்தையாகவும் பார்த்திருக்கிறான்.
தாய் என்ற வடிவத்தில் மட்டும் அது என்ன கண்ணன் என் தாய்? கண்ணம்மா என் தாய் என்றல்லவோ இருந்திருக்கவேண்டும்? தலைப்பில் தவறா என்று பார்த்தால் பாட்டிலும் பாரதி "கண்ணன் எனும் பெயருடையாள்" என்றல்லவோ சொல்கிறான்? இது ஏன்? (என் விளக்கத்தை முதலில் இட்டு உங்கள் கருத்துகளுக்குச் சாயமேற்ற விருப்பமில்லை.) யாரேனும் விளக்கம் தர முடியுமா?
நன்றி: மன்ற மையம்
கருத்துரையிடுக