கவிதைத் தொகுதி அறிமுகம் - காளான் பூக்கும் காலம் : எஸ்.பாபு
எனக்கும் ரயிலுக்குமான உறவு பெற்றோர்-பிள்ளை உறவு போன்றது. பல சமயம் ரொம்ப அன்னியோன்மாய் இருப்போம். சில சமயம் கடனே என்று கடமையை முடிப்போம். ஆனால், எப்பொழுதும் ஆவலாய் ஒருவரையருவர் கவனித்துக் கொண்டேதான் இருப்போம்.
முதன் முதலில் தண்டவாளத்தில் கால் வைத்தது திருப்பதி பாலாஜிக்காக. ரேணிகுண்டா வரை முன்னேறும் ட்ரெயின், அதன் பின் தன் பயணத்தை பின்னோக்கி செல்வது போல் தோன்றும். நம் வாழ்க்கை எதற்காக நம்மை தூக்கி சிம்மாசனத்தில் வைத்து விட்டு கீழே தள்ளிவிடுகிறது என்று எனக்கு தெரியாது. ரயில் வண்டியும் ரேணிகுண்டா போனபின், வந்த வழியே மீண்டும் பயணித்தது ஏன் என்பதும், ஏன் நேரடியாக திருப்பதியை அடையக்கூடாது என்பதும்தான்.
அடுத்ததாக ஆறு மாதத்துக்கு ஒரு முறை புது தில்லியில் இருந்து சென்னை. பதினைந்து நாட்களோ, கோடை விடுமுறையோ அனுபவித்து உறவினர் சலித்த பின் தனிமையான ஹாஸ்டலை நோக்கி மீண்டும் புது தில்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரசில் முப்பத்தாறு மணி நேர தவம். ஆரம்ப காலங்களில் நட்புப் பிடிபடாத நாட்களில் கூட ரயில் பயணம் போரடித்ததில்லை.
சென்னை வாசமும் கல்லூரி ஹாஸ்டல் இருப்பும் கூட அவ்வப்போது தனிமையை உணரச்செய்திருக்கிறது. ஆனால், ட்ரெயின் எப்பவுமே கலகல. சில நேரத்தில் பிரிந்து விடப் போகும் நட்பின் ஏக்கமாக இருக்கலாம். அல்லது நீண்ட நாள் பார்க்காதவர்களை மீண்டும் சந்தித்த சந்தோஷமாக இருக்கலாம். இரயில்வேயில் வேலை பார்க்கும் அப்பாவின் தயவால், ஏஸி ஸ்லீப்பரில் இருக்கும் சக மாணவனின் இருக்கையின் எதிரில், அந்தக்கால ஆயிஷா ஜூல்கா மாதிரி இருக்கும் சுடிதார் பெண்மணியாக இருக்கலாம். ரயில் பயணங்கள் சந்தோஷமானவை.
தெரியாத பாஷை பேசும் ஊர்களில் இறங்கி, ஸ்டேஷனை அளந்து, ஆராய்ந்து, ஒன்றும் வாங்காமல், கடைகளில் ஹிந்தியில் பேரம் பேசி, ட்ரெயின் ஓட்டம் எடுக்கும் வரை ப்ளாட்·பாரத்தில் அசால்ட்டாக நின்று கொண்டு, எஸ்-12 கோச்சில் ஏறி, என்னுடைய எஸ்-1 வரும் வரை, ஒவ்வொரு பெட்டியிலும், ஒவ்வொரு இருக்கையிலும் இருப்பவர்களை கண் மேய்ந்து, மனதின் நினைவுகளில் இருக்கிறார்களா என்று தேடி, கேள்வி கேட்கும் வயதானோர்க்கு கல்லூரி பெயர் சொல்லி, இருக்கைக்கு வருவதற்கு முன், அடுத்த நிறுத்தம் வந்துவிட, மீண்டும் முதலில் இருந்து செய்ய ஆரம்பிக்கலாம்.
'காளான் பூக்கும் காலம்' படித்தபோது எனக்கு என்னுடைய ரயில் சுகங்கள் நினைவில் வந்தது. என் மனதில் தங்கிய வழிகுறிப்புகளை யாரோ கவிதையாக்கினது போல் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு நிகழ்வுகளைக் கிளறியது. பேசின் ப்ரிட்ஜ் வருவதற்கு முன் வரும் குடிசைகளும், காலைக் கடனை முடித்துக் கொண்டிருக்கும் காண முடியாதவற்றையும், போபாலின் அருகே அடர்ந்த காடுகளில் சம்பல் கொள்ளைகாரர்கள் இருப்பார்களோ என்னும் பய உணர்வுகளுடன் உத்தர பிரதேசத்தின் பசுமை நிறைந்த புல் வெளியையும், ஆக்ராவும் இங்கேயிருந்து தெரிந்துவிடுமோ என்னும் கற்பனையையும் கொண்டு வந்து நிறுத்துகிறது.
ஓரிருவரின் அணிந்துரை, பின் இலக்கியப் பெரியவர்களின் மதிப்புரை, படைப்பாளியின் முன்னுரை என்று பத்திருபது பக்கங்களை ஒதுக்கமால், முதல் பக்கத்திலிருந்தே கவிதை ஆரம்பிக்கிறது. காலச்சுவடு, தாமரை, புதிய பார்வை, கணையாழி, கதை சொல்லி, அம்பலம்.காம், ஆனந்த விகடன், தாமரை, சொல் புதிது, தினமணிக் கதிர், தமிழ் அமிழ்தம், சுந்தர சுகன், செம்மலர் ஆகியவற்றில் ஆகஸ்ட் 89 முதல் நவம்பர் 2001 வரை பாபு எழுதியதில் இருந்து 65-ஐத் தொகுத்திருக்கிறார்கள்.
நாம் கடற்கரையில் உட்கார்ந்தால் கூட இயற்கையை முழுக்க ரசிக்க முடிவதில்லை. அங்கு வரும் மனிதர்களும், அவர்களின் செய்கைகளும் சில சமயம் சுவாரசியபடுத்தினாலும் நமக்கும் கடலுக்கும் இடைவெளி விடுவதற்குப் போதுமானதாக இருக்கிறது. காடுகளுக்குப் பயணம் செல்லும்போது கூட திரும்பி செல்லும் பாதை, வழி மற்றும் நேரம் தவறாமை என சிந்தனைத் தடங்கல்கள் வருகிறது. இங்கும் ரயில் பயணம் நமக்குக் கை கொடுக்கும். வெறுமனே வேடிக்கை பார்ப்பதை யாரும் தடை செய்யமாட்டார்கள். சுதந்திரம் வேண்டும் என் போன்றவர்கள் நுழைவாயிலின் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் கம்பிகளின் இடையூறு கூட இல்லாமல் அவசரப்படும் ரயிலின் பார்வையில் இயற்கையை விழுங்கலாம். இந்தக் கவிதைகள் நமக்கு அவசரப்படாமல் அவற்றை காட்சிபடுத்துகின்றன.
கால வரிசைப்படி இல்லாமல், ஒரு தொடர்கைதையைப் போன்ற அமைப்போடு நம்மோடு ஒட்டி உறவாடும் அமைப்பு. எதிர்மறை எண்ணங்களையும் நம்பிக்கையின்மையையும் தவிர்க்கும் தொகுதி இது. ஜாதி மத பேத நல்லிணக்கத்தைத் தாண்டி உயர்திணை அ·றிணை ஒற்றுமையை வலியுறுத்தும் படைப்புகள் (அமீபாவின் அழுகை), விடைபெறும் விருந்தாளியாக/ஓர் உயிருள்ள பிணமாக/ஏறக்குறைய கடவுளாக என்னும் அச்சுறுத்தும் பார்வைகள், போன்ற எண்ணங்கள் மனதை விட்டு நீங்காது.
தனிமை என்னை அச்சுறுத்தியது உண்டு. திரைப்பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டாலும், நண்பர்களை அழைக்க எத்தனித்தாலும், கதவைத் திறந்து வைத்தாலும் தனிமை தொடர்வது போன்ற பிரமை. 'அறைக்குள் இருக்கும் எதிரி' அதைப் படம் பிடித்து காட்டுகிறது. அறைக்குள் நுழையக் காத்திருந்து/தாவியேறி கழுத்தைக்/கட்டிக்கொண்டது தனிமை/... உச்ச சப்தத்தை மீறிக் குரலெடுக்கிறது/தனிமையின் பெருத்த ஓலம்/... /தலைக்குப் பின்புறமிருந்து/தானும் எட்டி பார்க்கிறது இந்தக் கஷ்டத்தை தீர்க்க கொடூரத்தனிமைக்கு எதிரான/கொலை ஆயுதமாக/இக்கவிதையை என முடிக்கிறார்.
இன்றைய தேதியில் பலருக்கு மதிப்பில்லாதது நம் இணைய நண்பர்களின் மின்னஞ்சலும், பின்னூட்டங்களும்தான். 'நாளைக்கு' சொல்கிறது, அடிக்கடி வருவதால்/அலுத்துவிட்டது/நண்பனின் கடிதவரிகள்... இடைவெளிகள் அவசியம்/அன்பையும் ஆர்வத்தையும்/அதிகப்படுத்த... என்னும்போது நமக்குள் மின்னல் வெட்டலாம். பெரிய விஷயங்களுக்குக் கலங்காமல், சிறு சங்கதிகள் நம்மைப் புரட்டிப் போடுவதை அருகே இருந்த குளத்தின்/.../பூ உதிர்ந்ததில்/நடுநடுங்குகிறது அதன்/நீர் பிம்பம் என்று பெரிய கட்டிடத்தைப் பதியும்போது சின்னச் சின்ன நிகழ்வுகள் எவ்வாறு உலக வர்த்தக மையத்தைத் தகர்க்க அடிகோலியது என்னும் சிந்தனைகள் எழுகிறது.
தொலைந்த நட்புகளையும் நினைவுகளையும் அசைபோடும் 'அடையாளம்' பருத்த தொந்தியும் நரைத்த மீசையுமாய்/பாய்லர் முன் நின்றிருந்த/ பள்ளித்தோழன் கேட்கிறான்:/டீ தரட்டுமா சார்?, 'நிலை'யின் வட்டிக்குக் கொடுத்தவன்/கொட்டிவிட்டுப் போன/வசவுகள் சிதறி/வாசலெங்கும் கிடக்கிறது என்று கடன் பட்டு நிற்கும் நடுத்தர வர்க்கத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம், 'கம்பிகளறுந்த கிதார்' குறித்து எப்போதாவது/அறையைச் சுத்தம் செய்ய/ நகர்த்தப்படும் வேளையில் மட்டும்/அறுபட்ட கம்பிகளில்/அபஸ்வரமாய் ஒலியதிர/தன்னிருப்பை உணர்த்திக் காட்டுகிறது என்று மறக்கப்பட்டவர்களின் நிலையை விவரிப்பது, 'மெழுகுவர்த்தி' குறித்து தீராத இருட்கடலில்/ மெல்லக்கரையத் துவங்கிற்று, 'பருந்துக்கு' வட்டமிட்டு வட்டமிட்டு/ வானளக்க வலுவிருந்தும்/தரையிறங்கத்தான் வேண்டியிருக்கிறது/இரை கொள்ள, 'நீளும் மாலைப்பொழுதை' அடிவானத்தில் அலைந்தபடியிருந்தன/ குழப்பங்களின் நிறமாற்றம் போன்ற கவனிப்புகள் என்னை மிகவும் கவர்ந்தது.
விசுவின் குழப்பல் வசனம் போன்ற 'விசாரிப்புகள்' (கணையாழி), லிஸ்ட் போடும் 'உரியவர்' (அம்பலம்), நவீன சாயலில் ஆங்கில வார்த்தை தெளித்த 'நிலா சானல்' (ஆனந்த விகடன்), என்னுடைய வாசிப்புக்கு எட்டாத 'கலைந்துவிட முற்படும் பெருங்கனவு', குணாதிசயங்களைக் கவர்ச்சியாக சொல்லும் 'நீர்ப்பிறவி' மட்டுமே எனக்கு ஏமாற்றம் கொடுத்தது.
தொகுதியின் பல கவிதைகள் நேரடியான அர்த்தம் தந்தாலும், அடிநாதமாக விளங்கும் குறியீட்டையும் சத்தமில்லாமல் விதைக்கிறது. தொகுப்பின் தலைப்புக் கவிதையும், 'விலங்கு'ம் இதற்கு நல்ல உதாரணம். யானையை மையமாக வைத்து அடக்கப்படுபவர்களும், தாத்தாவோடு போன பாசத்தின் ருசியைக் காளானிலும் பார்க்கலாம்.
எந்த வருடத்தில் எழுதியது என்று எல்லாக் கவிதைகளுக்கும் தேதி கொடுத்திருக்கலாம். ஆசிரியரை குறித்து பின்னட்டையில் கூட சிறு குறிப்பில்லாதது தன்னடக்கத்தின் உச்சம் என்றாலும், தவிர்க்கலாம். ஆங்காங்கே சில கோட்டோவியங்கள், அனைத்து கவிதைக்கும் தலைப்பு (இந்த மாதிரி எங்காவது மேற்கோள் காட்டும்போது பயன்படும்!) போன்றவை அடுத்த பதிப்பில் கவனிக்கப் படவேண்டும்.
'கோடை விடுமுறை', 'வழிகாட்டிகள்', 'ஓட்டம்', 'மாற்றம்' போன்றவை காட்டப்படும் இடங்களில் வலம் வந்தும், அவை சொல்லியதை செய்தும் இருப்போம். கவிதைத் தொகுப்பின் முத்திரைக் கவிதைகள் என்று 'மறைந்து வாழும் முகம்', 'ஆற்றுப்பாலத்தில் போகும் ரயில்', 'கோடை மழை' மற்றும் 'புறக்கணிப்பு' ஆகியவற்றை சொல்வேன். பற்களைக் காயப்படுத்தாத எளிய வார்த்தைப் பிரயோகத்தின் மூலமே பல அர்த்தங்களை புலப்படுத்தி உள்ளத்தில் அழமாகப் பதிந்துவிடுகிறார்.
காளான் பூக்கும் காலம் - எஸ்.பாபு தமிழினி ரூ. 25/-
திண்ணையில் எஸ். பாபு எழுதும் 'கவிதை உருவான கதை'யில் இருந்து சில பகுதிகள். கவிதைகளும் மற்ற பத்திகளும் சுட்டிகளின் உள்ளே கிடைக்கும். வலி
நிறமாற்றம்:
கவிதை உருவாவது கணங்களில் நிகழ்வது. அதன் பிறகு கவிதை செப்பனிடப்படலாம். எனினும் உருவாவது கணங்களில்தான் என்று தோன்றுகிறது. ஒரு வருடம் முழுவதும் ஒரு கவிதை கூட எழுத முடியாமல் போகலாம். ஒரே நாளில் எண்ணற்ற கவிதைகள் எழுதிக்குவிக்கலாம். எல்லாம் அவரவர் மனம் சார்ந்தது மட்டுமல்ல புற உலகின் நெருக்கடிகளும் சார்ந்தது.
சிதைவு:
காரணமே இல்லாமல் (அல்லது காரணம் தெரியாமல்) மனம் உற்சாகமடைவதும் பிறிதொரு சமயம் வறண்டு வடிந்து போவதும் எனக்கு அடிக்கடி நிகழ்வது. சிறுவயதில் சிலோன் ரேடியாவில் கேட்ட ஒரு நல்ல பாடல் போதும் என்னை உற்சாகப்படுத்த. மனம் லேசாகி அந்தரத்தில் மிதக்கும். மேகம் திரண்டு இருட்டிக்கொண்டுவரும் மாலை நேரம் போதும், மனம் பாரமாகிப் போக. இவற்றுக்கெல்லாம் இதுவரை காரணம் புரிந்ததில்லை.
அன்றைய தினம் வேறு நண்பர்களைக் காணமுடியாததால் நான் தனியாக தேநீர் அருந்தப் போனேன். தேநீர் அருந்துவது பத்து நிமிடம் தான் என்றாலும் அது தரும் தெம்பும் உத்வேகமும் அலாதியானது. தேநீர் அருந்தச் சென்ற போது, ஆர்டர் செய்த போது, அருந்திய போது மனம் லேசாகவும் உற்சாகமாகவும் இருந்தது. என்னுடைய கெட்ட பழக்கம், என்னைச் சுற்றிலும் நடப்பவற்றை அங்குலம் அங்குலமாக கவனிப்பது. தேநீர் குடித்து முடித்து கிளம்பும்போது மனம் வற்றிப் போயிருந்தது. காரணமே அறிய முடியாமல் உற்சாகம் வடிந்து போயிருந்தது. காத்திருக்கும் ஆராய்ச்சிக்கூடப் பணி காரணமாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆராய்ச்சிக்கூடத்திற்கு திருப்பியபோது யோசித்ததுதான் கிழ்க்காணும் கவிதை.
கருத்துரையிடுக