வியாழன், மே 27, 2004

ஆனையடியினில் அரும்பாவைகள் (சிறுகதை)

நந்தினி காரை கிளப்பின போது காலை ஐந்து மணி இருக்கும். நான் பல சமயங்களில் தூங்க ஆரம்பிக்கும் நேரம் அது. அன்று, நான்கு மணிக்கு அலாரம் அடிப்பதற்கு அரை மணி முன்பே எழுந்து, அவளையும் எழுப்பிவிட்டேன். அவ்வளவு ஆவலும் எங்களது கல்லூரிக்கு ஒரு புனித யாத்திரை செய்யத்தான்.

அமெரிக்காவில் இருந்து நான் வருவதற்கு பல மாதங்கள் முன்பே ஒரு மெல்லிய இழையில் ஆரம்பித்த திட்டம். பல ஈமெயில்களுக்குப் பிறகு செயல் வடிவம் பெற்று, இப்பொழுது ஆறு மணி தூரத்தில் இருக்கிறது.

நந்தினியின் கணவரும் எங்களுக்கு நல்ல ஊக்கமாக இருந்தார். எங்களுடன் வாருங்களேன் என்ற அழைப்பையும் மறுத்து விட்டார். அவரும், என் குடும்பமும் வந்திருந்தால் இது ஒரு வழக்கமான சுற்றுலாவாக இருந்திருக்கும். இப்போது இந்த பயணத்தின் நோக்கமே வேறாகிப் போனது.

கடந்த இளமையை மீண்டும் சுவாசிக்கப் போகிறோம். இருந்த இடங்களில் மீண்டும் தொலைந்து போகப் போகிறோம். இனிமையான, வருத்தமான, வழக்கமான நினைவுகளில் உலா வரப் போகிறோம். வெறுமனே அசை போடாமல் இளமைக்குத் திரும்பப் போகிறோம்.

நந்தினி கல்லூரி காலத்தில் எங்களுக்குப் பிடித்த "சின்ன சின்ன ஆசை"யைப் போட்டு விட்டிருந்தாள். எதிர்காலம் என்னவென்று தெரியாத கல்லூரி காலம் போன்ற டில்லியின் முன்பனி, சாலையையும் சூரியனையும் காணாமல் செய்திருந்தது.

"நந்து... மஹேனும் பத்மாவும் ஒரே இடத்தில் வேலைக்கு சேர்ந்தார்களே? கல்யாணம் ஆயிடுத்தா?"

"ரெண்டு பேரும் சேர்ந்து கம்பெனி ஆரம்பிச்சுட்டா. உனக்கு ஏதாவது சாஃப்ட்வேர் ஆள் தேவைன்னா சொல்லுபா. அவங்ககிட்ட கேக்கலாம்".

ரமேஷின் பி.எச்டி. எங்கு உள்ளது, கீர்த்தி தேர்தலில் நிற்கிறானா, அடுல் கிரிக்கெட் அணியில் இருக்கின்றானா என்று எங்கள் நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று பேசுவதே காலை உணவாகிப் பசியாற வைத்தது.

நந்தினியின் கணவன் போட்ட ஸ்டார்பக்ஸ்ஸை மிஞ்சும் காபி குடித்துக் கொண்டே ரெஹ்மானிடமிருந்து "உன்னை நான் அறிவேன்... எனையன்றி யார் அறிவார்" ராஜாவுக்கு மாற்றி விட்டேன்.

கல்லூரியில் செய்வதற்கு நந்தினி பத்து அம்ச திட்டம் வைத்து இருந்தாள். அதில் நாகர்ஜியின் பெட்டிக்கடையில் 'ரப்ரி' சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்தது. வாழைப்பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி ஒட்டகத்துப் பாலில் போட்டுத் தருவார். பரிட்சை பேப்பர் தந்த சோகத்தையும், கவுன்சிலில் சுட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்ட துக்கத்தையும் தூக்கி எறிய சரியான மருந்து அது. கூடவே சமோஸாவும் கிடைத்தால் சொர்க்கம் வசப்படும். எனக்கு இப்போது செரிக்குமா என்று ஒரு பயம் எட்டி பார்த்தது.

"ஆட்டமா.. தேரோட்டமா" என்று ராஜா அதிரடி செய்து கொண்டிருந்தார். பஜார் தெருவில் 'பான்ங்' அடிக்க வேண்டும். கிடைக்காவிட்டால் பியராவது குடிக்க வேண்டும். மீரா பவன் என்னும் பெண்கள் விடுதிக்குள் சென்று ஜென்ம சாபல்யம் அடைய வேண்டும். எங்களுடைய பத்து அம்சத் திட்டத்தில் நிறையவே பொருத்தம்.

"புது ரூட்டுலதான்" என்ற ராஜாவின் அரசாட்சியில் மெய்மறந்து, செய்து பார்க்க வேண்டிய எல்லாவற்றையும் அலசி முடிப்பதற்குள் காவிக்கொடித் தாங்கிய பலகை எங்களை கல்லூரி வளாகத்திற்கு வரவேற்றது.

நாங்கள் மட்டும் மாறவில்லை. எங்களுடைய கல்லூரியும் உரு மாறி இருந்தது. பத்து அம்ச திட்டத்தில் பல நிறைவேற்ற முடியாது. ராஜஸ்தானில் மதுவிலக்குக் கிடையாது. அதற்குள் இருக்கும் எங்கள் கல்லூரி ஊரில் பியரும் கிடைக்காது; 'பான்ங்'கும் கிடைக்கவில்லை. வகுப்புகளில் எங்கள் நினைவுகளை ஆரம்பித்தோம்.

"ஹேய் நந்து... இங்கேதான் முதல் முதலாக உன்னை ஃப்ரெண்ட் பிடிச்சேன்"?

"ஆமாண்டா... பக்கத்தில் உட்கார்ந்து நல்லா உரசுவே".

"போடீ... மூணு பேர் பெஞ்சியில், அஞ்சு பேர் உட்கார்ந்தா அப்படித்தான்".

இருவருக்கும் நல்ல பசி. முதல் ஆர்வம் தீர்ந்து விட்டதால் வயிறு நினைவூட்ட ஆரம்பித்தது. நேராக கடைத்தெருவுக்கு வந்தோம். பல தெரிந்த உணவு விடுதிகள் மறைந்து STD/ISD/PCO க்களும், Xerox கடைகளும் நிறைந்து இருந்தது.

தப்பித்த உணவு விடுதிக்குள் புகுந்து, மெனுவில் ஆறு வித்தியாசங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.

"இங்கேதான் என்னுடைய வாழ்நாள்லேயே முதன்முதலாக பிறந்த தின கேக் வெட்ட வெச்சேடா. ரொம்ப தாங்க்ஸ்பா"!

"நான் என்ன செஞ்சேன் நந்து? எல்லாம் தீபாவோட ப்ளான். 'பம்ஸ்' கொடுத்தது மட்டும் என்னோட திட்டம்."

"உன்னை பலி போடணும்டா... எவ்வளவு வலி தெரியுமா? அடுத்த நாள் பரிட்சைக்கு உட்காரவும் முடியாம... ஆம்பிளைகளுக்கு ஏன்தான் அடி உதையிலேயே புத்தி போகுதோ"?

நல்ல சாப்பாடு முடித்துவிட்டு, ஒவ்வொரு மெஸ்ஸாக நுழைந்து கிளம்பினோம். பெரிதாக ஆச்சரியப்படுத்தாத அதே திங்கட்கிழமை மெனு. கூப்பிட்ட குரலுக்கு சப்பாத்தியும் சப்ஜியும் கொணர்ந்த அதே சிப்பந்திகள். அதே நாவில் வைக்க முடியாத சுவை. இருந்தாலும் இப்போது எங்களுக்கு சுவைத்தது.

அடுத்து ஆசிரியர்களைத் தேடிப் பயணம். அப்படியே மாலைக்கு ஓடிப் போனது நேரம். சரஸ்வதி கோவிலின் ஐந்தரை மணி தீபாராதனை தவற விடக் கூடாது. செமஸ்டர் ஆரம்பத்திலும், இறுதியிலும் கூட்டம் அதிகம். நாங்கள் சென்ற போது பலர் கண்ணை மூடிக்கொண்டும், சிலர் கண்ணை மூடாமல் புது வரவுகளையும் வேண்டிக்கொண்டார்கள். குளிர்ந்தாலும் புல்வெளியில் அமர்ந்தோம். ஆங்கிலம் தெரியாதவர்களும் நயாகராவை ரசிப்பது போல புரியாத மொழியில் பாடப்பட்ட பஜன்களில் ஆழ்ந்து போனாள்.

"நந்து... மூன்றாவது வருஷக் கடைசியில் இங்கே உட்கார்ந்து விக்கி விக்கி அழுதது ஞாபகம் இருக்கா"?

"அது எப்படிடா மறக்க முடியும். அன்னிக்குத்தான் நீ வெளுத்து வாங்கினியே. ஊர் ஆயிரம் சொல்லும். ஆனால், நம்ம மனசுக்கு சரின்னு பட்டா எது வேணும்னா செய்யலாம். கழுதை மேல் போனவன் கதையா உலகத்துக்குப் பலவிதமான எண்ணங்கள், கருத்துக்கள். எல்லாவற்றையும் காதுல வாங்கிட்டு, முடிவை மட்டும் நாமதான் சிந்திச்சு எடுக்கணும்னு ஒரு பெரிய அட்வைஸ் இல்ல கொடுத்தே"?

"ஆமாம்பா.. என்னென்னவோ உளறிண்டு இருந்தேன் அன்று. நம்ம நட்பைக் காதலா கொச்சைப்படுத்திட்டாங்க. இன்னும் சில பேரு அவளோட எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கேன்னு கேட்டதுதான் என்னோட கோபத்தைக் கிளறிவிட்டது".

"அது தேவலையே. கலைவிழாவில உன்னோட ரூம்மேட் ஜனா, தண்ணியப் போட்டுட்டு வந்து, அவன் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறான்; சொல்ல தில் இல்லை; அதான் நான் உடைக்கிறேன்ன போது நானே நம்பிட்டேன்"!

"அப்போ உன்கிட்ட உண்மைய விளக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு".

நன்கு இருட்டியிருந்தது. எங்களின் விருந்தினர் மாளிகைக்குத் திரும்ப ஆரம்பித்தோம். அங்கேயே சாப்பிட்டு, சீக்கிரமாய் தூங்கி, காலையில் டில்லி திரும்பலாம் என்பதுதான் திட்டம். ரொம்ப நாளாய் பார்க்காத சந்திரன். முக்கால்தான் இருந்தார். இருந்தாலும் பௌர்ணமி போல் தோன்றியது எனக்கு. மெள்ளக் கையைக் கோர்த்து கொண்டு "பெஹ்லா நஷா..." பாடிக்கொண்டே வந்து சேர்ந்தோம்.

"டேய்... நான் குளிச்சுட்டு வந்துடறேன். கார்த்தாலே டைம் இருக்காது" என்று நந்து புகுந்து விட்டாள். ஆண்கள் சோம்பிக்காமல் டிவி சேனல் மாற்றுவது போல பெண்கள் அனைவருமே குளியலறையில் நேரம் செலவழிக்கிறார்கள்.

கல்லூரியின் பழைய செய்தித்தாள்களை அழகாக அடுக்கி இருந்தார்கள். பல வழக்கமான நிகழ்வுகள். புரட்டியதில் பெண்களின் கூடைப்பந்தாட்டம்தான் விளையாட்டு விழாவில் அதிகம் பேர் நுழைவு சீட்டு வாங்கிய நிகழ்ச்சி என்றிருந்தார்கள். ஒரு பெண், ஆண்கள் விடுதியில் மாட்டிக் கொண்டு நீக்கப்பட்டது செய்தியாக மிரட்டியது. கலைவிழாவில் கல்லூரிக்கு விடுமுறை அளிக்காதது பற்றி முறையிட்டிருந்தார்கள். எவ்வளவு நாட்கள் ஆனாலும் இந்த செய்திகள் மாறுமா என்பது சந்தேகமே.

நந்தினி நைட்டியில் தூங்கி இருந்தாள். எனக்கும் காலையில் விழித்தது, கண்ணை சொக்கியது. விளக்கை அணைத்து, மனைவி இல்லாத ஒருத்தியுடன், ஒரே கட்டிலில் முதல் முறையாக படுக்கை. கண்ணை மூடிக் கையைப் போட்டேன். அவளின் போர்வைக்குள் நுழைந்தபோது விளக்கைப் போட்டாள் நந்தினி.

"கிளம்பலாமா? இப்பவே கிளம்பினா நாளைக்கு என் அச்வினை வகுப்புக்கு வழியனுப்பலாம்".

தூக்கம் கலைந்து எழுந்த நான் "டைம் என்னாச்சு?" என்று கேட்டு பதில் வராமல் இரண்டு அடித்து பத்து மணித்துளிகள் என்று அறிந்தபோது சூரிதாருக்கு மாறி இருந்தாள்.

"தோழா...தோழா... தோள் கொடு தோழா"வை கத்தவிட்டு உள்ளூர் தேனீரோடு வண்டியைக் கிளப்பினாள்.

"நந்து 'ரோஜாக்கூட்டம்' பார்த்தியா? தமிழ் சங்கத்தில் போட்டார்களா"?

"இல்லேப்பா... நான் 'ஃபைவ் ஸ்டார்'தான் லயிச்சு பார்த்த கடைசிப் படம்".

அதன் பிறகு நான் தூங்கி போனேன். அவள் விழித்திருந்து என்னை மீண்டும் டெல்லியில் 'கந்தர் சஷ்டி கவச'த்துடன் நுழைத்தாள்.

-பாலாஜி
பாஸ்டன் - (ஃபெப். - 2 - 2003)

10 கருத்துகள்:

பாபா, விசாரிப்புக்கு நன்றி.
திடீர்னு எழுத சொன்னாங்க சரின்னேன்னன் . திடீர்னு கேக்குறத நிர்றுத்திப்புட்டாங்க. அதுக்கும் சரின்னு வாளாவிருக்கிறேன் :-). கா உட்டுட்டாங்கன்னு தெரிஞ்சா மன்னிப்பு கேக்கலாம்னா , அதுவும் தெரியமாட்டேங்குது :-)

கதைக்கான கமெண்ட்டை கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்; பெரிசா உபயோகமான கமெண்ட் எல்லாம் எதிர்பார்க்க கூடாது சரியா :-)

Hi Bala,

Good story. In the movie Indian, Urmila will say about her relationship with Kamal as "Neither Green light to go ahead nor Red light to stop. It is sort of a yellow light in between". I was reminded of that dialogue while reading this story. You have got a very natural way of writing.

கார்த்திக்ராமஸ்: என்ன விசாரிப்பு ? புரியலையே...!

நன்றி செந்தில் :)

Sorry for the mottai msg. This was about your previous Thamizoviam vimarsanam post. I thought If I write my comment there you probably wont read it :-)

//இன்னும் சில பேரு அவளோட எவ்வளவு தூரம் *முன்னேறியிருக்கேன்னு* கேட்டதுதான் என்னோட கோபத்தைக் கிளறிவிட்டது".//
I took it in a good sense , meaning, how far you are successful in ur life than her. 2 nd time I got it right. "nerungki irukkeennu" may be a suggestion.

//"கிளம்பலாமா? இப்பவே கிளம்பினா நாளைக்கு என் *அச்வினை வகுப்புக்கு வழியனுப்பலாம்*".//

intha 2 idangkaL muthal vaasippil leesaay puriyalai.

நன்றி கார்த்திக்ராமஸ் :)
வாராவாரம் எழுதுகிறீர்கள் என்றால், வாரம் ஒரு ரிமைண்டர் அனுப்புவாங்களா என்ன :P அந்த மாதிரி நீங்க எழுதிண்டே இருங்க :D

Bob...where art thou?!

nantrayirunthathu

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு