புதன், ஜூன் 02, 2004

கலைஞர் கருணாநிதிக்கு 81-வது பிறந்த நாள் வாழ்த்து


திராவகத் தேன் - வைரமுத்து

உன் மீது அடித்த புயல்
திசைமாறி அடித்திருந்தால்
இமயமலை கொஞ்சம்
இடம் பெயர்ந்திருக்கும்

உன் மீது அடித்த வெய்யில்
கடல் மீது அடித்திருந்தால்
பாதிச் சமுத்திரம்
பாலையாய்ப் போயிருக்கும்

நீயோ
புயலில்
சவாரி செய்தாய்
வெயிலை
சமாதி செய்தாய்

எப்படி நீ கற்றாய்
எரிமலைக் குழம்பு தடவி
வெற்றிலை போடும்
வித்தை?

நீ ஒரு
விசித்திரக் கலவை
திராவகமும் தேனும்
சரிவிகிதத்தில்

சுயமரியாதைப் பண்ணையின்
வீரிய விதையே
உன்னைப்
பாறைகளுக்கடியில்
பதுக்கி வைத்திருந்தாலும்
நிழல் தரும்
விருட்சமாய் அல்லவா
விரிவாய்?

தன்மானம் ஒன்றே
உன்
தனிக்கவசம்
சொல்
முத்தமிடவாவது
நீ
தலை தாழ்ந்ததுண்டா?

அறுபதா? உனக்கா?
அடையாளம் இருக்கிறதா?
நிஜத்தை விசாரிக்க
நீதிமன்றம் கிடையாது
காலண்டர் கூடப்
பொய் சொல்லும் காலமிது

உன் ரத்தத்தில் கரைந்திருக்கும்
தமிழ்த் தங்கம்
முதுமையின் நரைகளை
முறியடித்து விடுகிறது
தோல்வி உனக்கொரு
துயரமன்று - அதுபோல்
வெற்றியும் உனக்கொரு
விஷயமன்று

இலையுதிர் காலமும்
வசந்தமும் இங்கே
கிளைகளுக்குத்தான்
வேர்களுக்கல்லவே

நீ
தேர்தலின் நெற்றிக்குப்
பொட்டாய் இருப்பதினும்
இனத்தின் மார்புக்கு
விழுப்புண்ணாய் இரு

காலத்தின் கணக்கேடு
விருதுகளை விட்டுவிடும்
விழுப்புண்களையே அது
விரும்பும்

என்
கால்சட்டைப் பருவமுதல்
கனவுகளை வளர்த்தவனே
காந்த எழுத்தாலே
கண்களுக்கு இனித்தவனே


என்
கிராமத்து வானத்தில்
கீதமாய் நிறைந்தவனே

என் இதயத்தின்
நான்கு அறைகளும்
அந்த
நன்றியால் நுரைத்திருக்கும்

எனக்கு
இதயத்தை நேரடியாய்
இறக்கி வைக்கத் தெரியாது
ஆனால்
உன்னை நினைத்து
எப்போதாவது நான் உகுக்கும்
இருதுளிக் கண்ணீர் -
உன் தோளில் விழும்
அத்தனை மாலைகளையும்
அடித்துக் கொண்டோ டி விடும்

(கலைஞருக்கு மணிவிழா கவிதை - 1984)

அன்று: The Hindu : Karunanidhi cancels birthday functions
இன்று: கருணாநிதி பிறந்த நாள்: சிறப்பாக கொண்டாட திமுக முடிவு

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு