கலை - குழந்தை - மசாலாப் படங்கள்
சமீபத்தில் பார்த்ததில் விவரமாக விமர்சனம் எழுதலாம் என்று தள்ளிப் போட்டவற்றில் சில:
அமோரஸ் பெரஸ்: மணி ரத்னத்தின் புண்ணியத்தில் இந்திய வலைப்பதிவுகளில் நிறைய அடிபட்ட படம். இந்தப் படத்தின் அறிமுகமானவர் 'ஒய் டூ மாமா தம்பியேன்' என்னும் அடுத்த படத்திலும் பின்னியிருப்பதாக ஆஸ்கார் பரிந்துரைத்தது. அந்த மெக்ஸிகன் படத்தின் இயக்குநர்தான் நாளை வெளிவரும் புத்தம்புதிய ஹாரி பாட்டரின் இயக்குநர். (மாதவனின் மொட்டை தலைக்கும் ஹாரி பாட்டரின் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது இப்படித்தான் :)
படத்தின் கதாநாயகர் - எடிட்டிங். இரண்டாவது நாயகர் - காட்சியமைப்புகள். கொஞ்சம் ஒழுக்கத்தை போதிப்பது போல் தோன்றினாலும், நம் மனதின் எதிர்பாராத ஈடுபாடுகளையும் வினோத முடிவெடுப்புகளையும் அமர்க்களமாக, ஆனால் 70எம்எம் பயமுறுத்தல் இல்லாமல் காட்டியிருந்தார்கள். 'காதல் என்றால் நாய்க்குணம்' (love is a bitch) என்னும் தலைப்பு. மூன்று கதாநாயகர்களின் குணங்களையும் அவர்களின் செல்லப்பிராணிகளை குறியீடாகத் தொட்டுக்க மட்டும் வைத்துக் கொண்டு, ரத்தமும் சதையுமாக காட்டிய படம்.
ஷ்ரெக்:மூன்றரை வருடம் முன்பு பார்த்த 'மின்னலே'க்குப் பிறகு வெள்ளித்திரையில் ரசித்த படம். குழந்தை பிறந்தவுடன் சில படம் 'ஏ' முத்திரையாலும், சில படம் கமல் வசனம் பேசுவதாலும், சில படம் சரத்குமார் நடித்திருந்ததாலும், பல படம் 'பிஜி' முத்திரை இல்லாததாலும் சின்னத்திரையில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோம். பெரிய ஸ்க்ரீனில் நிறைய ட்ரெயிலர்களுடன், பாப்கார்ன் கொறித்துக் கொண்டு, படத்தை நிறுத்தி நிறுத்தி செல்லும் அரசுப் பேருந்து விசிஆர் இல்லாமல், பாஸ்டன் டு பாம்பே செல்லும்பொழுது விடும் தமிழ்ப் படங்களின் இடைவேளை கூட இல்லாமல் பார்த்ததே முதல் சந்தோஷம்.
க்ரேஸி மோகன் வசனம் எழுதினால் ரெண்டு மூன்று முறை படம் பார்க்க வேண்டும். விஷயம் அறிந்த ஜீவன்களுடன் பார்த்தால் படத்தை ஆங்காங்கே நிறுத்தி நான் சாய்ஸில் விட்டுவிட்ட நகைச்சுவைகளை சுட்டி காட்டுவார்கள். இந்தப் படத்துக்கு க்ரேஸி வசனம் எழுதாவிட்டாலும், சில ஜோக்குகள் புரியவில்லை. கருணாஸ் செய்யும் அபத்த 'வாலி' உல்டா போல் அல்லாமல், விவேக்த்தனமாக ஒழுங்காக பல ஹிட் திரைப்படங்களை போட்டுத் தாக்கியிருந்தார்கள். புதிய காரெக்டராக அறிமுகமான பூனையாரின் அட்டகாசத்துக்காகவே டிவிடி வந்தவுடன் மறுமுறை பார்க்க வேண்டும்.
'நீ நீயாகவே இரு; இன்னொருத்தருக்காக 'செட்டப்ப மாத்தி கெட்டப்ப மாத்தி' எல்லாம் முயற்சி செய்யாதே' என்னும் உயரிய தத்துவத்தை குழந்தைகள் முதல் கோட்டான்கள் வரை மனதில் அறையுமாறு சொல்லியிருந்தார்கள்.
ஸ்மிலியாஸ் சென்ஸ் ஆஃப் ஸ்னோ: பீட்டர் ஹோக்கின் புத்தகத்தைப் படமாக்கியுள்ளார்கள். தமிழில் ஹீரோ செய்யும் சாகசங்களை இங்கு ஹீரோயின் அசத்துகிறார். ரெண்டு டூயட், ஒரு குடும்பப் பாடல், ஒரு சோகப் பாடல், ஒரு தத்துவப் பாடல் என்று மொழிமாற்றி சூப்பர் ஹிட் ஆக்கலாம். அதுதான் 'விக்ரம்' ஏற்கனவே வந்து விட்டதே என்கிறீர்களா!?
படத்தின் ஓரிரு வசனங்கள் மனதை மிகவும் கவர்ந்தது. மனிதனின் வளர்ச்சியையும் எண்கணிதத்தையும் ஒப்புமை செய்திருந்தார். குழந்தைப் பருவத்தில் எல்லாமே நிறையாகத் தெரிகிறது. வளர வளர நாம் சாதிக்க வேண்டியது, கிடைக்க வேண்டியது எல்லாம் நெகட்டிவ். கொஞ்சம் போல் நடு வயதில் மனிதர்களின் அழுக்கு, அவர்களின் ஆசை இடுக்குகள் எல்லாம் பின்னம். இன்னும் போகப் போக நாம் அறிய வேண்டியது, தேடல் எல்லாம் அண்ட பராபரத்தையும் தாண்டிய நிலை. மனிதர்களைப் புரிந்து கொள்வது காம்ப்ளெக்ஸ்கள் நிறைந்த கடினம் என்பது போல் விளக்கினார். இந்த உரையாடலுக்காகவே புத்தகத்தைப் படிக்கும் ஆர்வம் மேலிட்டது.
நானும் ஆங்கில, ஸ்பானிஷ், மெக்ஸிகன், தாய்வான், சீனா என்று படங்களாகப் பார்த்து தள்ளத்தள்ள இரமணீதரனும் பார்க்காத படங்களாக லிஸ்ட் போட்டு செல்கிறார்.
கருத்துரையிடுக