செவ்வாய், ஜூன் 15, 2004

கோலையாத்தின் சறுக்கல்

லாஸ் ஏஞ்சலீஸ் வாசிகளே கலக்கல் பேர்வழிகள். எடுத்த காரியத்தை அசால்ட்டாக முடிக்கும் திறமை உடையவர்கள். அமெரிக்கக் கூடைப்பந்தாட்டத்தின் ராஜாக்கள் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸை சொல்லலாம். (இதே ஊரில் இருக்கும் க்ளிப்பர்ஸ் மகா சோடை டீம்). லேக்கர்ஸின் காப்டன் 'ஷக்கீல்-ஒநீல்' ஏழடிக்கு மேல் உயரம். கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்துக் கொண்ட மாதிரி இருக்கும். எதிரணிக்காரர்களை லங்கேஸ்வரனின் வீரர்களைப் போல் ஊதித் தள்ளிவிடுவார். அவருடை முக்கியமான சகா 'கோபி ப்ரையண்ட்'. வாலி போன்ற பலத்துடன் எதிராளியை 'தூசு' என்று சிம்பு வசனம் பேசிக் கொண்டே வீழ்த்துவார். இவர்கள் போதாது என்று ஜாம்பவான் (வயதிலும்+அனுபவத்திலும்) 'கார்ல் மாலோன்'. அங்கதன் 'பேட்டன்' அமைதியாக பந்தை அனைவருக்கும் நகர்த்துபவர். NBA இறுதியாட்டத்திற்கு அணியை தேர்வு பெறச் செய்தவர்கள்.

இப்பேர்பட்ட goliath-களுக்கு அடி சறுக்கியிருக்கிறது. ஒரு ஆட்டம் மட்டுமே தோற்பார்கள், போனால் போகிறது என்று இரண்டு விட்டுக் கொடுப்பார்கள் என்றெல்லாம் ஆருடம் சொன்னவர்களே அசந்து போயிருக்கிறார்கள். கிரிக்கெட்டில் கென்யாவைப் போன்ற டெட்ராயிட்டை (Detroit) சேர்ந்த பிஸ்டன்ஸ் வெற்றி வாயிலில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏழு ஆட்டம் கொண்ட சீரிஸில் மூன்றை வென்று விட்டார்கள். இன்று மாலையும் வென்றால், கோப்பை கிடைத்து விடும். இதுவரை எவருமே 3-1 என்ற நிலையிலிருந்து தோற்றதில்லை. டெட்ராயிட் மீதமிருக்கும் மூன்று ஆட்டங்களில் ஒன்றை வென்றால் கூட போதும்.

ஆட்டத்தைத் தொடர்ந்து பார்க்கும் பலருக்கும் டெட்ராயிட் ஜெயிக்க வேண்டுமே என்னும் எண்ணம் உள்ளூர இருக்கும். ஆனாலும், எல்லே லேக்கர்ஸ் வீறு கொண்டு எழுந்தால் யாராலும் தடுக்க முடியாது என்பது உறுதி. ஒரே ஒரு சக்தியை தவிர... முன்பே சொன்னேனே 'வாலி' கோபி ப்ரையனுக்கும் அனுமார் ஷக்கீலுக்கும் நடக்கும் நிழல் யுத்தம் நடு அரங்குக்கு(ம்) மீண்டும் எழாத வரை; லாஸ் ஏஞ்சலீஸ் நிச்சயம் மிச்சம் இருக்கும் மூணு மாட்சிலும் டெட்ராயிட்டை துவம்சம் செய்து விடும்.

பிகு: யாராவது யூரோ 2004 பார்க்கிறீங்களா??

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு