திங்கள், ஜூன் 14, 2004

ஜே.ஜே : சில குறிப்புகள்

சுந்தர ராமசாமி

'இலக்கியப் போக்கையே தலைகீழாக மாற்றிவிட்டார்களே இங்கு. மூன்று வேளை சாப்பிடுகிறவனைப் பற்றி இப்போது இலக்கியத்தில் நாம் ஒரு வார்த்தை பேசக்கூடாது. செம்மான், தோட்டி, வெட்டியான், நாவிதன், வேசி, பிச்சைக்காரன், கோடாலிக்காரன், கசாப்புக் கடைக்காரன், மீன்காரி, பூட்ஸ் துடைக்கும் சிறுவர்கள், கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் யார் வேண்டும் என்றாலும் வரலாம். இலை போட்டுச் சாப்பிடுகிறவன் வரக்கூடாது. .....
....
'புதிதாக இன்னும் எழுதித் தா' என்று அரிக்கிறான் என் வெளியீட்டாளன். பாலு, நான் சரித்திரத்துக்கு எங்கே போவேன்? என் நாவல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததும், 'பட்சி சாஸ்திரம்', 'பெண்களை வசீகரிப்பது எப்படி?', 'படுக்கை அறை ரகசியங்கள்', 'வாகட விளக்கம்', 'எண்பது வயதுக்குப் பின் இளமை' என்று எழுதிக் கொண்டிருந்த பயல்கள் எல்லாம் சரித்திரத்தின் மேல் ஏறி விழுந்து பிச்சுப் பறக்கவிட ஆரம்பித்து விட்டார்கள். பாலு, உனக்குத் தெரியும். எங்களுக்குக் கொஞ்சம் போல்தான் சரித்திரம் இருக்கிறது. உங்களுக்கு என்றால் முக்குளித்து விளையாடலாம். இடிந்துபோன கோட்டை கொத்தளங்கள், பழுதடைந்த அரணமனைகள், மண் மூடிவிட்ட சுரங்கப் பாதைகள், சாய்ந்த கோபுரங்கள் எல்லாவற்றையும் பற்றி எழுதிவிட்டோ ம். பாலு, கோட்டாற்றில் ஒரு சண்டை நடந்ததாமே, உனக்கு அது பற்றி, ஏதாவது விபரம் தெரியுமா? ஒரு பழைய பாடல், பழைய பாடலின் வாய்ப்பான வரி, கிடைத்தால் போதும். அதை ஒரு பிடி பிடித்தேன் என்றால் தொள்ளாயிரம் பக்கத்துக்கு எழுதிவிடுவேன். ஜே.ஜேயும் அவனுடைய வானர சேனைகளும் புலம்பிக்கொண்டு இருக்கட்டும். எனக்கு என் வசகர்கள்தான் முக்கியம். இலக்கிய தர்மத்தை ஒருநாளும் நான் கைவிட மாட்டேன்.'பிறமொழி எழுத்தாளர்கள் மாதிரித்தான் நம் மொழி எழுத்தாளர்களும் என்பதை நாம் மறந்துவிடலாம்? தரத்தில் வேண்டும் என்றால் கூடுதல் குறைவு இருக்கலாம். குணத்தில், நடத்தைகளில், பழக்க வழக்கங்களில், போட்டி பொறாமைகளில், குழு மனப்பான்மைகளில், குழி பறிப்பதில், காக்காய் பிடிப்பதில் ஏகதேசமாக ஒன்றுதான். வெவ்வேறு மொழி பேசினாலும் நாம் எல்லோரும் இந்தியர்கள்தானே? நமக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்குமா?


'தமிழ் வாசகன் எவனும் பிறமொழி இலக்கியம் படிக்க முடியாவிட்டால் உயிரை விட்டுவிடுவேன் என்று சொல்லவில்லையே' என்றார். எனக்கு முகத்தில் அறைந்தாற்போல் ஆயிற்று. 'நீங்கள் எழுதவில்லை என்று உண்ணாவிரதம் இருக்கும் வாசகன் எவன்?' என்று நான் திருப்பிக் கேட்டிருக்கலாம். அந்த நிமிஷத்தில் எங்கள் உறவு முறிந்து போய்விடும். 'எவரும் அவர் விரும்பும் கருத்தை வெளியிடுவதுதான் இலக்கிய உலகின் நிர்த்தாட்சண்யமான நியதி' என்று சொல்லிக் கொண்டே கடைசி வரையிலும் என்னிடம் பேசாமல் இருந்துவிடுவார். இவரும் பேசாதாகிவிட்டால், அப்புறம் நான் தனியே பேசிக் கொள்ள வேண்டிய நிலை இன்று.


'கால்பந்தாட்டக்காரனின் நினைவுகள்' என்ற தலைப்பில் அவன் எழுதியுள்ள நூலில், "தோவிகளுக்குப் பின் நாம் எப்போதும் காணும் பலவீனம், குழு அல்ல, நான்தான் முக்கியம் என்ற விளையாட்டுக்காரனின் மனோபாவமே. காலடியில் வந்துசேரும் பந்து என்னுடையதல்ல, என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. உனக்குக் கொண்டுபோவதற்குச் சாத்தியமானதற்கு மேல் ஒரு அங்குலம் கூடப் பந்தைக் கொண்டுபோக முடியும் என்று நினைக்காதே. நீதான் 'கோல்' போட வேண்டும் என்று ஒரு போதும் நினைக்காதே. உனக்கு பெரும் தடைகள்சூழ்ந்து வரும்போது, பந்தை மேலெடுத்துச் செல்ல, வசதியுடன் உன் சக ஆட்டக்காரன் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே' என்றெல்லாம் ஜே.ஜே. எழுதியிருக்கிறான். கால் பந்தாடத்தை அடிப்படையாக வைத்து விரிவாக ஜே.ஜே. எழுதியுள்ள குறிப்புகள், கால் பந்தாட்டத்தை பற்றியது மட்டும் அல்ல என்று விமர்சகர்கள் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். எங்கும் பலவீனத்தின் ஊற்றுக்கண்ணுக்கான காரணம் மனிதன், அவனுக்கும் அவன் ஆற்றும் பங்குக்கும் உள்ள உறவில் கோணல் ஏற்படுத்திக் கொண்டு விட்டதே என்றும், இந்தக்கோணல் சுய பிமானத்திலிருந்து தோன்றுகிறது என்றும் ஜே.ஜே. கூறுவதாக விமர்சகர்கள் குறித்திருக்கிறார்கள்.


காலச்சுவடு - ரூ. 75/-

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு