செவ்வாய், ஜூன் 15, 2004

ஜே. ஜே.: சில குறிப்புகள்: சிறு குறிப்புகள்

பெயரிலி:
நாவலுக்கு இலக்கணம் வலிந்து அதன்படி தமிழின் சென்ற நூற்றாண்டின் சிறப்பான பத்து பட்டியல் வகுத்து, தனது இரண்டு புதினங்களை முன்னுக்கு வைக்கின்ற எழுத்தாளத்திறனாய்வுக்குழவிகள் தொடங்கி, (தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு - ஜெயமோகன்.) தாள் தேர்ந்து நூல் வாசித்து பிடித்தபத்து பொறுக்கும் பெரும்பாலான சாதாரண வாசகர் வரைக்கும் எவருமே தமது பத்துக்குள் ஜேஜேயின் குறிப்புகளைத் தவிர்க்கமுடியாமற்போனதற்கு, குறிப்புகளின் கருவும் பாத்திரப்படைப்பும் சொற்செதுக்கலும் இழை மேவிச் சீராய் ஊடுபாவி அமைந்துகொண்ட விதமே காரணமாக இருக்கின்றது என்று தோன்றுகின்றது. எழுத்தாளர்-திறனாய்வாளர்-வாசகர் என்ற முக்கோணமுடுக்கிலே கதையின் பாத்திரங்கள் மாற்றி மாற்றி தம்மை இடம் பெயர்த்துக்கொள்கின்றன. அதே நேரத்திலே, குறிப்புகளை வாசிக்கின்றவர்களும்கூட தெளிவாக விளக்கமுடியாத காரணங்களின் உந்தலால், தம்மை ஏதோவொரு பாத்திரத்தால் ஆரம்பத்திலே அடையாளம் கண்டுகொண்டு, தாமும் கதையோட்டத்துடன், ஜேஜேயின் குறிப்புகள் மேலான பாலுவின் குறிப்புத்தளத்துக்குச் சமாந்திரமான இன்னொரு தளத்திலே, வேறொரு கோணத்திலே அதே பாத்திரங்களோடு தமக்கான சொந்தக்கதையைக் கோலாட்டி வழிநடத்திச் செல்ல நேரிடுவதாகின்றது. இந்தவிதத்திலே, பதிவாளன் பாலுவூடாக ஆசிரியர் என்ன சொல்லவந்தார் என்பதிலும், வாசகனின் பிறிதான பதிவாடியிலான தெறிப்புகளும் முக்கியமாகின்றன. இதன் காரணமாக, ஆசிரியரின் காலடியொற்றிப் பாதம் பதித்தாடும் கட்டாயத்திலிருந்து வாசகன் தளர்த்தப்படுகின்றான்; விடுவிக்கப்படுகின்றான். இஃது இந்தப்புதினத்துக்கு மட்டுமேயான சிறப்பில்லையெல்லையென்றாலும், எல்லாப்புதினங்களுக்கும் இச்சாத்தியம் ஏற்படுவதில்லை.

இந்தச்சாத்தியம் நிகழ்வதற்கு பாத்திரப்படைப்புகளின் முளைப்பும் அமைப்பும் செதுக்கலும் விவரிப்பும் ஆசிரியனாலே முழுமையாக வரையறுக்கப்படாது, வாசகனுக்கு வேண்டியபோதிலே கைகொடுத்து விழையாப்பொழுதிலே விலகி நின்று கவனித்து, இன்னொரு பொழுது படைப்பும் தெறிப்பும் மீள ஒட்டிக் கொள்ளும் வண்ணம் நிகழ்த்தல் வேண்டும். இது மண்டையோடு பிளந்து மூளை அறுவைச்சிகிச்சை செய்யும் கலை; சற்றே நெருங்கினால், வாசகனின்மீது பாத்திரத்தின் செறிவின்மீதான திணிப்பும் சற்றே விலகினால், கதைமீதான ஈடுபாட்டு விலகலும் நிகழும் என்ற கம்பியிலே எம்பிக்குதித்துக் கால் தந்தியாடும் நிலை. ஜேஜேயின் பதிவு மட்டுமல்ல, அரவிந்தாட்சமேனன், எம்.கே.ஐயப்பன், முல்லைக்கல் மாதவன் நாயர், திருச்சூர் கோபாலன் நாயர் என்று மட்டுமின்றி, சாராம்மா வரைக்கும் இதே காட்டியும் காட்டாமலும் வாசிப்பவர் கற்பனைக்கும் இடங்கொடுத்து கவர்ச்சி தரும் செயல் நிகழ்கின்றது. தமிழ் எழுத்துமட்டத்தின் முந்தநாளையும் நேற்றினையும் இன்றினையும் வாசிப்பாகப் பாதி, ஊர்வம்பூசியேறிய செய்தியாக மீதி கண்டு நடக்கும் தினசரி வாசகன் மட்டுமேயானவனுக்கு, ஆசிரியரின் பாத்திரங்கள்மீதான அறிமுக விவரணங்கள் - இது மலையாள இலக்கிய உலகத்தின்மீதான பார்வையா தமிழ் இலக்கிய உலகத்தின்மீதான பார்வையா என்பதற்கு ஆசிரியர் ஆங்காங்கே கொடுக்கமுயற்சித்த விளக்கங்களை அவரின் விரிவும் ஆழமும் தேடியிலே அங்கும் இங்கும் காணமுடிந்தபோதும்- 'யாரோ, இவர் யாரோ? இவரோ? அவரோ?' என்ற உருவகிப்பினை ஏற்படுத்தினாலும், கதை விரியுமிடத்திலே அந்தத் தனியாளை இந்தப் பாத்திரமாய் ஒட்டிவைக்கும் சுதை கழன்று அரூபம் மட்டும் வாசகனோடு நேரத்துக்கேற்ப இரசத்துளி உருளலும் வடிவமுமாய் -ஆனால், தானானது உள்ளே மாறாமற் போகின்றது.

முழுவதும் படிக்க - பெயரிலி கோப்புகள்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு