வெறும் பொழுது - உமா மகேஸ்வரி
சுயம்
அடுப்படியின்
அழுக்கு மொஸைய்க்.
விரலிடுக்கில் பாத்திரக் கரி.
காற்றிலாடு துணிக்கொடியும்,
நேற்றிருந்த கனாக்களும்
வாழ்க்கையாச்சு.
இருப்பின் அவஸ்தை மறைக்க
இயல்பாகிப் போனதோர்
சந்தோஷ முகமூடி.
சுயத் திமிர் வேறு.
தன்னைத் தான் ஆய்வதோடு
பிறர் குணமும் கூறு போடல்
தொடரத் தொடர வேதனை மிகும்.
தொலைதூரத்தில் விசும்பும் நிலவும்,
கேள்விகள் இன்றி சதா
புல் தின்னும் ஆடுகளும்
மனம் உறுத்தும்.
பேச்செல்லாம்
சவ ஊர்வலத்தின் சங்கொலி போல்
வெறுமை.
இவை தவிர்த்து எப்போதும்
கடல் துப்பிய சிப்பியாய்
கரை மணலில்
நான் தனித்து
விடுமுறைக்குப் பின்னான வீடு
விரிகிறது தனது
அலாதியான சிக்கல்களோடு
ஒரு மாபெரும் சிலந்தி வலையாக.
அதன் தற்காலிகமான கலகலப்பை,
மழலை கூடிய குரல்களை
வேடிக்கை விளையாட்டுக்களை
மிருதுவான களங்கமின்மையைத்
திணித்து எடுத்துப் போனார்கள்
பிள்ளைகள் தங்கள் பள்ளிப்பைகளில்.
ஸ்கூல் பஸ் நகர்கிறது
சிரிப்பொலிகளோடும்,
அழுகைத் துளிகளோடும், ஆடும் கைகளோடும்.
முடிக்கப் படாத குழந்தை ஓவியத்தின்
வர்ணங்கள் வாசற்படியில்
வடிந்திருக்கின்றன.
பாதாளத்துடன் இறங்கிவிட்ட
வீட்டின் தலையைப் பிளந்து
என் தனிமையோடு
உள் நுழைகிறேன்
என்னைப் பிய்த்துத் தின்னத்
தயாராகக் காத்திருக்கிறது
அசையாத குரங்கு பொம்மையின்
ஒற்றைக் கை
தமிழினி - 224 பக்கங்கள் - ரூ. 100/-
கருத்துரையிடுக