வியாழன், ஜூலை 01, 2004

A Beautiful Mind

மயிலாப்பூரில் நடந்து செல்லும்போது நான் என்ன மனநிலையில் இருக்கிறேனோ அதற்கு ஏற்ற சூழ்நிலை எனக்கு கிடைக்கும். கோவில் சென்று நாளாகிவிட்டதே என்று யோசித்தால், சுலோகங்களை முணுமுணுத்துக் கொண்டே செல்பவரை பார்க்கலாம். கோவில் சென்று கும்பிட்டால்தான் சாமி அருள்வாரா; என் வேலையை செய்யும்போதே அவனை நினைக்கலாம் என்று எண்ணச்செய்யும். ஒரு நாள் போட்டியின் மதிய இடைவேளை வெய்யிலில் சாமான் வாங்க கடைக்கு ஓடிச் செல்லும் வழியில், அவசர கிரிக்கெட் மாட்சுக்கு டீம் போடுபவர்களைப் பார்க்கலாம். 'வெண்ணிலாஸ்' அங்காடி வாசலில் என் நேர்மினமையை நிதானப்படுத்தும் விதத்தில் அமைதியாக நான் கொண்டு சென்ற நல்லி சில்க்ஸ் துணிப்பைக்கு டோ க்கன் தருபவர் செயல்படுவார். தம்பதியராக வீட்டிலிருந்து கல்யாணத்துக்குக் கிளம்பியவர்களில், கணவன் பத்தடி முன்னேறி வேகமாக நடந்து செல்ல, ஓட்டமும் நடையுமாக மனைவி, அவரை வேகவேகமாக தொலைத்துவிடாமல் கூடவே செல்வது, திருமண வாழ்க்கையில் கொஞ்சம் அச்சத்தையும், கூடவே ஒத்துசெல்லும் மனோபாவத்தையும் சிந்திக்கவைக்கும். என் கூட ஹிந்தி படிக்கும், டி.எஸ்.வி கோவில் தெரு திரும்பியபின் வரும் எட்டாவது வீட்டில் இருக்கும் பத்மா தென்பட்டால் கிடைக்கும் சிரிப்பு, அன்றைக்கு எல்லாமே நல்லவிதமாய் நடக்கப்போவதாக அறிவிக்கும். குடிக்காமலேயே, இந்தியக்கொடியின் ஆரஞ்சுக் கண்களுடன் இருக்கும் பயமுறுத்தும் பால்காரன், எருமை மாட்டைத் தொழுவத்தில் குளிப்பாட்டுதல்; செருப்பில்லாமல் நாய் கூட வெளியில் செல்லமுடியாத அக்னி நட்சத்திர மதியத்தில் கையில் பழைய வேட்டி போட்டு மூடிய தாம்பாளத்தில் சாத்துமுறை
பிரசாதம் ஏந்தி வெறுங்காலில் மெல்ல நடந்துவரும் ஸ்ரீனிவாசர் கோவில் அர்ச்சகர், வேறு எந்தத் தெருவிலோ செங்கல் இறக்கப் போகும் லாரி, தன் ப்ளாட்ஃபாரத்தில் ஏறி இடித்து விடலாமோ என்ற அச்சத்தில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் குடும்பத்தலைவர் என்று எல்லாருமே என்னையும் பார்த்திருப்பார்கள்.

நெடிசலான தேகத்துடன் விறுவிறுவென அவர் நடந்துபோய்க் கொண்டிருப்பார். அவர் ஏதாவதொரு கடையில் நின்று எதையாவது வாங்குவதையோ; பத்து மணிக்கு வந்திருக்க வேண்டிய பல்லவனுக்காக பதினொன்றரை வரை திட்டிக்கொண்டே காத்திருக்கும் பயணியாகவோ; தெருமுக்கில் தட்டுப்படும் திரைச்சீலை இடப்படாத விநாயகருக்காகவோ, கருமாரிக்காகவோ, காலணியைக் கழற்றி அதன் நுனியில் அரை நொடி நின்றுகொண்டு கன்னத்தில் போட்டுக் கொள்வதையோ; தெருவின் நடுவே களம் அமைத்து சுவற்று ஸ்டம்புக்குக் குறிவைத்து பந்துவீசும் சிறுவன் எறிந்து முடிவதற்காகக் காத்திருந்தோ நான் பார்த்ததேயில்லை. என்னைப் போலவே அவரும் தனக்குள் எப்போதும் எதையோ சிந்தித்துக் கொண்டேயிருப்பார். அதை சத்தமாக முணுமுணுக்கவும் செய்வதுதான் அவரை நகைப்புக்குள்ளாக்கியிருந்தது. கூடவே, அவர் மனைவியும், அதே வேகத்தில் விடுவிடுவென்று, அவரைவிட கொஞ்சம் சத்தமாகப் பேசிச்செல்வது பலகாலம் வரை பைத்தியங்களைக் கண்டு அஞ்சும் சிறுவர்கள் லிஸ்டில் என்னையும் வைத்திருந்தது. கணவன் பேசுவதை மனைவியும், மனைவி பேச்சை கணவனும் காதில் போட்டுக் கொள்ளாமல், தொடர்ந்து தன்பாட்டுக்கு இன்னொருவரிடம் பேசிக்கொண்டேதான் இருந்தார்கள்.

கொஞ்ச நாள் கழித்து தரமணியில் பயிற்சி எடுக்க செல்லும் வாய்ப்பில் அவர்களைப் பற்றிய புதிய கோணம் கிடைத்தது. அங்கிருக்கும் வி.எச்.எஸ்.க்கு வரும் மனநலம் குன்றியவர்கள், பஸ்ஸில் இருந்து இறங்குவதைப் பார்க்கும்போது, எனக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான வாழ்க்கையை எண்ணி, பெற்றோருக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்லவைக்கும்.

இவர்களை இன்னும் ஒழுங்காகப் புரிந்துகொள்ள 'எ பியுடிஃபுல் மைண்ட்' உதவுகிறது. நிஜ வாழ்வில் நடக்கும் காதல் கதையில் கொஞ்சம் த்ரில்லர் தொட்டுக்கொண்டு விவரிக்கிறார்கள். சாதிக்க விரும்பும் நாஷ், எவ்வாறு மனைவியைக் கண்டுபிடிக்கிறார், ஸ்கிஸோஃப்ரேனியாவுடன் எவ்வாறு போராடுகிறார், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை எவ்வாறு வெல்கிறார் என்பதை படம்பிடித்துள்ளார்கள். ஓவர்-ஆக்ட் கொடுக்காத ரஸ்ஸல் க்ரோ மற்றும் சிறந்த துணை-நடிகை விருது பெற்ற ஜெனிஃபர் கானலி. இருவருக்கும் பக்கபலமாக அனைவருமே வாழ்க்கை வரலாற்றை சுவைபடுத்தியுள்ளார்கள்.

ஏற்கனவே படத்தை பார்த்திருந்தாலும் டிவிடியில் இன்னொருமுறை பார்க்கலாம். இரண்டு குறுந்தகடுகள். எக்ஸ்ட்ராக்கள் நிரம்பிய #2வில் வழக்கம்போல் படத்தில் இடம்பெறாத காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அவை ஏன் நீக்கப்பட்டன என்பதை இயக்குநர் ஆர்வத்துடன் விவரிப்பது, சிறந்த நாவல் மற்றும் திரைப்படங்களில் செய்யவ்ண்டிய self-editing-ஐ வலியுறுத்துகிறது.

அது தவிர இன்னும் இரண்டு பகுதிகள் தவறவே விடக்கூடாதவை:

1. மேக்கப் நுட்பங்கள்: வயதான 'இந்தியன்' தோற்றத்திற்காக எட்டு மணி நேரம் எடுத்துக்கொள்ளும் முகமூடிகளுக்கு (facial mask) பதிலாக சிலிகானில் முகத்தில் சில பகுதிகளை மட்டும் ஒட்டிக்கொள்ளும் புதிய தொழில்நுட்பம். இதன் மூலம், எச்சில் முழுங்கும்போது தொண்டைக்குழியில் ஏற்படும் நுண்ணியங்கள், முகம் திருப்பும்போது ஏற்படும் இயற்கையான அசைவுகள், பேசும்போது ஏற்படும் முகபாவ சுருக்கங்கள் என எல்லாமே தெளிவாக வெளிப்படுகிறது.

2. ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்: பத்து பேரை வைத்துக்கொண்டு நோபல் பரிசு பெறும் விழாவில் லட்சக்கணக்கானோரை உண்டாக்கியது நம்ம ஊரில் ஷங்கர் செய்த மாயாஜாலம்தான். ஆனால், புறாக்கள் பறந்துபோகாமல், அவற்றை வளையவரும் கற்பனைச் சிறுமி; பச்சிளங்குழந்தையை தண்ணித்தொட்டிக்குள் போட்டுவிட்டு தன்னுடைய உலகுக்கு சஞ்சரித்துப் போகும் காட்சி; ரஸ்ஸல் க்ரோவிடம் அதிக கால்ஷீட் கேட்காமல் பனி பெய்யும் நாளில் எடுக்கப்பட்ட படபிடிப்பை, இலையுதிர் காலமாக மாற்றிய வித்தை என படத்தில் எங்கே கம்ப்யூட்டர் பூந்து விளையாடுகிறது என்பதை அவர்கள் சொன்னால்தான் அறிந்து கொள்ளலாம்.

நிஜ நாஷுடன் சந்திப்பு, இசையமைப்பளருடன் பேட்டி, கதாசிரியர் Akiva Goldsman திரைக்கதை உருவாக்கிய கதை ஆகியவையும் பரவசபடுத்தும்.

மீண்டும் பார்க்கவேண்டிய உண்மைக்கதை.

2 கருத்துகள்:

ரொம்ப நல்லா இருக்கு. குறிப்பா, மைலாப்பூர் பற்றி நீங்க சொன்ன விதம் அருமை. பல சம்யங்கள்ல நம்ம மூட்-க்கு தக்கவாறு நிகழ்ச்சிகளை காண நேர்வது, உலகம் தன்னுள் அனைத்தையும் வைத்திருக்கின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.

Beautifull mind: ஒரு அற்புதமான படம். முன்பே பார்த்திருந்தாலும், நீங்கள் கூறிய தகவல் மேலும் ஒரு முறை பார்க்கத் தூண்டியது.

இப்பதிவிற்கு நன்றிகள்

நன்றி பாலாஜி :)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு