திங்கள், ஜூலை 26, 2004

சன் டிவி: கல்யாண மாலை

Yahoo! Groups - RaayarKaapiKlub: போன வார நிகழ்ச்சி ஒன்றில் பெண்ணின் தாயார் 'பையன் சூட்டிகையாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும்." என்றார். தொடர்ந்த அவரின் மகள், 'எனக்கு வரப் போகிறவர் துறுதுறுவென்று புத்தியாலியாக அமைய ஆசை' என்று தொடர்ந்தார். கேட்ட எனக்கு 'பரவாயில்லை... காலம் மாறிப் போச்சு. பெண் வீட்டுவேலை செய்வாளா என்னும் காலம் போய், பையன் பம்பரமாய் செயல்படுவானா என்று கேட்கும் காலம் வந்தது நல்லதுக்கே!' என்று நினைத்தேன்.

இன்னொரு குடும்பத்தில், 'எங்களுக்கு யாராக இருந்தாலும் ஒகே. நாங்கள் வடமா... பிரஹ்ச்சரணம், வாத்திமா என்றாலும் எங்களுக்குப் பரவாயில்லை' என்று தன் பரந்த மனப்பானமையை சொன்னார்.

தமிழகத்தில் இல்லாமல், வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு, மக்கள் மாறியிருக்கிறார்களா, காதல் திருமணம் பெருகியிருக்கிறதா, டேட்டிங் கலாசாரம் கோலோச்சுகிறதா, மதப்பிரிவினைகள் நீங்கி விடுமா, சாதி விட்டு சாதி திருமணம் அதிகரிக்கிறதா என்பதை கணக்குப் போட பயனுள்ள நிகழ்ச்சி.

நடுவே வரும் காமெடி சொற்பொழிவு இன்னும் அற்புதம். போன வாரம் வினுச் சக்கரவர்த்தி சினிமா நடிகர்களின் தியாகங்களைப் புட்டுப் புட்டு வைத்தார். ரஜினிக்குப் பின் ராகவேந்திரா பக்தி அதிகமானது ஒத்துக்கொள்ளவேண்டிய விஷயம். எம்ஜிஆருக்கு முன் யாருமே நல்லாட்சி தரவில்லை என்பதும், சினிமாவில் சம்பந்தப்பட்டவர்களே இனி அரசாள்வார்கள் என்ற பிரகடனையும், சிரிப்பை வரவழைத்தது.

இங்குள்ள என்.ஆர்.ஐ.க்களுக்கு திரிசங்கு சொர்க்கம் போன்ற நிலை. அமெரிக்கர்களை டேட்டிங் செய்ய வெள்ளியிரவு, சனியிரவு பார் பாராக ஏறி இறங்கினாலும் க்ளிக் ஆகாது. இந்தியாவில் அரேஞ்ட் மாரேஜ் செய்துகொள்ளவும் மனம் விரும்பாது. கண்டதும் காதலிலும் நம்பிக்கை லேது. நண்பியிடமும் காதலை சொல்வதில் தயக்கம். காதலியிடம் கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் கேட்பதிலும் தயக்கம்.

ரொம்பக் கஷ்டப்படறாங்க...
-பாஸ்டன் பாலாஜி

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு