கமல் கண்ட கனவு
சத்தியமாய் கதை எழுதும் முயற்சிதான்.
-பாஸ்டன் பாலாஜி
எனக்கு வரும் கனவுகள் பல உடனடியாக மறந்துபோகும். எனவே, பகிர்ந்து கொள்ளுதல் என்னும் பேச்சுக்கே இடமில்லை. நான் சொல்லப்போகும் கனவு இப்படி மறந்து போகாத பகலில் நிகழ்ந்த ஒன்று.
கனவை குறித்து விவரிப்பதற்கு முன், இடஞ்சுட்டி விடுதல் உங்களுக்குப் பொறுத்தமாக இருக்கலாம். முந்தைய நாள் இரவு ஒன்றரை மணி வரை ஸ்னேஹாவுடன் டூயட். பதிவானதற்கு அடுத்த நாள், நான் கண்ட கனவு இது. இதைப் போன்ற நிகழ்வுகளை என்னுடைய திரைப்படங்களில் திணிக்க இயலாது. பஸ்ஸில் தூங்கிக் கொள்ளலாம் என்னும் நம்பிக்கையில், காலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்ட அவுட்டோ ர் ஷூட்டிங் இருகின்ற சினிமா நாள்.
என்னுடைய கனவுகளில் ஸ்னேஹாவோ, சிம்ரனோ வருவது கிடையாது. கனவுக்கண்ணன்கள் என்றும் யாரும் வந்து போவதில்லை. பல சமயம் கனவே வராது. நான் கனவு காணும் சக்தியை இழந்துவிட்டேனோ என்று கூட அச்சமாய் இருக்கும். நான் காணும் கனவுகள் எனக்கு எப்போதும் பலித்ததே கிடையாது. விழித்திருந்தால், நான் கனவுகள் காண்பதில்லை. திட்டம் போடுவதிலும், அதை நிறைவேற்றுவதற்கு உரியோரைத் தேர்ந்தெடுப்பதிலுமே என் நேரம் சென்று விடுகிறது.
துர்சொப்பனங்கள் அவ்வப்போது எட்டி பார்ப்பதுண்டு. என்னுடைய படத்திற்கான க்யூவில் நான் நிற்பதாகவும், தடியடி வாங்குவதாகவும்; ஆஸ்கார் விருதினைப் பெறச் செல்லும்போது படிக்கட்டில் வேட்டி தடுக்கி விழுவதாகவும்; பல்லாயிரக்கணக்கான முதலைகளுக்கு நடுவே, நானும் வாய் திறந்து, கண்மூடி, மிருகக்காட்சி சாலையில் வசிப்பதாகவும்; விமானத்தில் தனியே பறக்கும்போது, விமானி இல்லாததைக் கண்டு பயந்துபோய், கதவைத் திறந்து, மேகத்தில் தொத்திக் கொள்வதாகவும்; வீட்டு சாவி இல்லாத இரவில், ஆள் அரவமற்ற தெருவில், ஆடை கிழிந்து, அலங்கோலமாக ஓடும்போது, திடீர் சூரியன் உதிப்பதாகவும் என்று நிறைய.
ஆனால், அவற்றை சொல்லி, உங்களின் சுபதினைத்தை நாசமாக்க நான் விரும்பவில்லை. கெட்ட சொப்பனம் கண்டால், எழுந்து, தண்ணீர் குடித்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவேன். நல்லது கண்டால் தூங்கக் கூடாது, கெட்டது கண்டால் தூங்கிப் போக வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. முழித்திருந்தால் வேலை செய்யவேண்டும். அவ்வளவே.
என் கனவை குறித்து சொல்லிவிடுகிறேன். இந்தக் கனவு சூரியன் இருக்கும் பகல்வேளையில்தான் ஆரம்பிக்கிறது. நானும் என்னுடைய நண்பரும், கம்பிகள் போட்ட தியேட்டர் வாசலில் நிற்கிறோம். என் தோற்றத்தைப் பிறர் காணக்கூடாது என்பதற்காக, 'சத்யா'வின் தாடியும், 'ஆளவந்தானின்' மொட்டையும் கொண்டு காணப்படுகிறேன். கூட இருக்கும் நண்பர், பார்ப்பதற்கு 'பாய்ஸ்' சித்தார்த் மாதிரி இருந்தார். எங்களுக்குப் படத்திற்கான டிக்கெட் கிடைத்துவிட்டது. நாங்கள் இருவரும் பார்க்கப் போகும் படத்தை குறித்தோ, கடந்து செல்லும் இளைஞர்களை குறித்தோ, கம்பிக்கு வெளியே இருக்கும் கூட்டத்தை குறித்தோ பேசிக் கொண்டிருக்கலாம்.
யாருக்கும் என்னை அடையாளம் தெரியாத அந்த அதிகாலை ஏழு மணி காட்சியில், ஒருவன் மட்டும் என்னைப் பார்த்து விடுகிறான். 'நீங்க கமல்தானே?' என்னும் அவனின் மகிழ்ச்சியான கண்டுபிடிப்பு எனக்கு சந்தேஷம் தருகிறது. முகத்தில், தோற்றத்தில் இவ்வளவு மாற்றம் செய்தாலும், என்னை அடையாளம் கொண்டு விசாரிக்கும் அவனுக்கு 'ஆம்' என்கிறேன்.
எனக்கு வழக்கமான பயம் வருகிறது. என்னுடைய நடிப்பு, திரை ஆளுமை, இயக்குநர் பாணிகள், சினிமா என்று பாராட்டிப் பேசும் மற்றொரு ரசிகன் வந்துவிட்டானே என்ற பயம். இரண்டு நிமிடம் பேசி, கை குலுக்கி, போட்டோ பிடித்துக் கொண்டு, முகத்தைக் கிள்ளி, சினிமா டிக்கெட்டின் பின் கையெழுத்து வாங்கி, நாலு தடவை நன்றி சொல்லி, தானும் பிரபலத்தை சந்தித்த கதையை நண்பர்களிடம் பிரஸ்தாபிக்கப் போகும் இன்னொரு ஜீவனோ என்னும் பயம்.
ஆனால், நான் ஏற்கனவே சொன்னேனே, இது நல்ல கனவு. இவன் என்னுடைய 'தீராநதி' படைப்பை விசாரிக்கிறான். ஞானக்கூத்தன் கவிதையை அலசுகிறான். தொழில்நுட்பத்தை விட்டுவிட்டு இலக்கியம் பேசுகிறான். என்னுடைய கவிதைப் புத்தகம் எப்போது வெளிவருகிறது என்று ஆர்வமாய் கேட்கிறான். இது போன்ற ஆழ் அலசல்கள் வலையுலகில் கிடைப்பதை விவரிக்கிறான். இண்டர்நெட்டில் தமிழ் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது முதல் எங்கு கோலோச்சுகிறது என்பது வரை அலசுகிறான். என்னை சந்திக்க வருபவர்களிடம் இருந்து, மாறுபட்டு, என்னைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்காமல், சிறந்த படம், சிறந்த ஹீரோயின் என்று லிஸ்ட் கேட்காமல், நிருபரைப் போல் அந்தரங்கக் குடைசல்கள் இல்லாமல், வெற்றுப் புளகாங்கிதங்களில் சிரிப்பை நிரப்பாமல், என்னுடைய நல்ல ரசிகன் ஒருவனைப் பார்த்த சந்தோஷத்தில் மிதந்து கொண்டுதான் இருந்தேன்.
கடைசியாக, தான் சார்ந்திருக்கும் இணைய இலக்கிய குழுவில் என்னை உறுப்பினராகும்படி வலியுறுத்தி என்னுடைய மின்னஞ்சல் முகவரியைத் திருடும்வரை அந்தக் கனவு நல்ல கனவுதான்.
உண்மையைச் சொல்லுங்கள். கமலை ரா.கா.கி க்கு கூப்பிடுவது மாதிரி கனவு கண்டீர்கள் தானே..? :-)
சொன்னது… 7/28/2004 10:45:00 AM
;-) நோ காமெண்ட்ஸ் மூக்கரே ;-) அதுதான் டைட்டில், 'கமலின் கனவு' என்று சொல்லிட்டேனே :P
சொன்னது… 7/28/2004 10:52:00 AM
அப்படியே வந்தாலும், "விருமாண்டியும் வெளக்குமாறும்"னு ஒரு திரி ஓடுச்சு இல்லையா? அதை, நம்ம அகழ்வாராய்ச்சி நிபுணரும், இந்த பட்டாவுக்கு சொந்தக்காரருமான
பாலாஜி ·ப்ரம் பாஸ்டன் எடுத்துப் போட்டாரானால், கோபித்துக் கொண்டு வெளியே போய்விடுவார் :-)
சொன்னது… 7/28/2004 11:49:00 AM
பாலாஜி,
அருமையான கனவு. அப்படியே அச்சு அசலாக கமல் பேசுவது போன்றே தோன்றுகிறது. ம்கூம் குழப்புகிறது. கமல் மட்டும் கனவு கண்ட மறுநாள் காலையில் எப்படி இருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்? :) அது சரி நீங்க எப்போத்திலேர்ந்து ஆம்பளைங்களை பத்தியெல்லாம் கனவு கான ஆரம்பிச்சீங்க? கஷ்ட காலம் ?! :)
சொன்னது… 7/28/2004 01:59:00 PM
//
ஆஸ்கார் விருதினைப் பெறச் செல்லும்போது படிக்கட்டில் வேட்டி தடுக்கி விழுவதாகவும்;
//
:-))
சொன்னது… 7/28/2004 04:47:00 PM
கார்த்திக்: உங்களோட சேர ஆரம்பித்த பிறகுதான் ;-)
ஐகாரஸ்: அப்படி போக எத்தனித்தால், பொன். முத்துக்குமார் எழுதிய 'அன்பே சிவம்' விமர்சனத்தை எடுத்துப் போட வேண்டியதுதான்
நன்றி 'தகடு' சார் :-)
சொன்னது… 7/29/2004 05:44:00 AM
கடைசியாக, தான் சார்ந்திருக்கும் இணைய இலக்கிய குழுவில் என்னை உறுப்பினராகும்படி வலியுறுத்தி என்னுடைய மின்னஞ்சல் முகவரியைத் திருடும்வரை அந்தக் கனவு நல்ல கனவுதான்.
கலக்கலா எழுதியிருக்கீங்க பாலா... !
சொன்னது… 8/01/2004 05:38:00 AM
கருத்துரையிடுக