வியாழன், ஜூலை 15, 2004

The Cider House Rules

(c) IMDB.comசுஜாதா சொன்னதாக கேள்விப்பட்டது. "நான் கதை எழுதித் தருவேன். நிறைய வசனங்களோடு இருக்கும். அவற்றில் இருந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு கொஞ்சம் தட்டி கொட்டி திரைக்கதை அமைத்துக் கொள்வார்கள்." நல்ல புத்தகத்தை எழுதிவிட்டு, அவை சின்னாபின்ன படமாக்கப்பட்டு வெளிவருவதைத் தடுப்பதற்கு, இந்தப் படத்தின் கதாசிரியர் கடைபிடித்த உத்தியை பின்பற்றலாம். அவர் எழுதிய புத்தகத்துக்கு, அவரே திரைக்கதை கொடுத்து, அதற்கான ஆஸ்காரையும் வென்றிருக்கிறார்.

பாஸ்டனுக்கு வடமேற்கே, அமெரிக்காவின் ஈசானிய மூலையில் இருக்கும் 'மெயிண்' மாகாணத்தில் நடக்கும் கதை. இரண்டாம் உலக யுத்தத்தின் காலகட்டம். அநாதை இல்லம் நடத்துபவரின் செல்லப் பையனாக (தற்போதைய ஸ்பைடர்மேன்) டோபி மெக்வ்யெர். டோபிக்கு வாழ்க்கை போரடிக்கிறது. விடுதியின் தலைவருக்கு வயசாகிப் போனதால், மாற்று ஏற்பாடுகளை செய்ய விடுதியின் உரிமையாளர்கள் முடிவெடுக்கிறார்கள். மருத்துவம் படிக்காமலேயே, அனுபவத்தினாலும், திறமையினாலும், foster father போன்ற நடத்துநரின் ஆர்வத்தாலும் ob-gyn பயிற்சியுள்ள டோபி தலைமை இயக்குனராவதுதான் கதை சுருக்கம்.

புத்தகங்களுக்கேயுரிய கிளைக் கதைகள், கதாபாத்திர சித்தரிப்புகள், மெல்லிய நகைச்சுவை, மனதில் ஒட்டிக்கொள்ளும் வசனங்கள் என்று ஆஸ்கார் பரிந்துரையை படம் நியாயப் படுத்துகிறது. அறுபது வருடம் முந்திய காலகட்டத்தில் நடந்த கதையாக சொல்லப்பட்டாலும், இன்றைய நிகழ்வுகளிலும் அவற்றில் பல காட்சிகளை நினைக்கலாம். த்ரிலுக்காக போர் விமானம் ஓட்டும் 'வாலி'யை இன்றைய ஈராக் சண்டையினால் உள்நாட்டிலும் கலவரம் ஏற்படுத்தி, போருக்கு சென்ற இடத்திலும் சாதிக்காமல் திரும்பிய புஷ் அரசோடு ஒப்பிட்டுப் பார்க்க நினைக்கிறேன். ஐம்பது வருடம் முன்பு பற்றியெரியும் பிரச்சினையாக இருந்த Pro-Choice கருக்கலைப்பு -- இன்றும் மக்களால் மதநம்பிக்கையாலும், உணர்ச்சிபூர்வமாகவும் சிந்திக்கப் படுகிறது. உறவு கொள்ளத் துடிக்கும் இளவயதினரின் பொறுப்பற்ற தனமைகளில் பெரிய அளவில் மாற்றமேதுமில்லை.

பாசத்துக்கும், காதலுக்கும், ஆசைக்கும் உள்ள சிறிய வேறுபாடுகளை வெளிக்கொணர்கிறது ரோஸ் குடும்பம். துள்ளித் திரியும் இளம் மானாக இருக்கும் ரோஸ் (பிரபல பாடகி 'எரிகா படு'), எவ்வாறு சுருங்கிப் போகிறாள் என்பதை இயல்பாக சித்தரிக்கிறார்கள். அன்பும் அரவணைப்பும் கிடைத்தாலும், குழந்தைகளுக்கு அப்பா, அம்மா என்னும் பந்தத்தில் எவ்வளவு ஆர்வம் என்று சொல்லும்போது நமது மனமும் கசிகிறது. ஒரே திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாலும், மனதுக்கு உகந்தவர்களுடன் பார்ப்பதால், படம் பார்ப்பது 'வேறு எதற்கோ' என்று சொல்லும் போது 'அட' போடாமல் இருக்கமுடியவில்லை.

கட்டளைகள் நிர்ணயிப்போர் எப்பொழுதுமே அவற்றை பிறருக்காக மட்டுமே வடிக்கிறார்கள் என்று எள்ளல் செய்வது; எல்லைகள் இல்லாத உலகம்தான் இது; ஆனால், சொந்த எல்லைகளை வகுத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணவைப்பது; செய்யும் செயல் ஒவ்வொன்றிலும், உன்னால் உலகுக்கு என்ன நன்மை என்று சுய மதிப்பீடு செய்யத் தூண்டுவது; தவறு செய்து தப்பிக்க வாய்ப்பு அமைந்தால் பயன்படுத்துவோமோ என்று யோசிக்க வைப்பது; தன்னால் அடைய இயலாதபோதும் கொண்ட கொள்கையில் நம்பிக்கை வைத்திருப்போமா என்று சந்தேகிக்க செய்வது; நிலைமையை சரி செய்ய முடியுமானால், தனக்கு ஆதாயமில்லாமல் ஆபத்தே என்றாலும், தலையிடுவோமா என்று கேள்வி கேட்பது; காத்திருந்தால், பொறுமையோடு வாழ்வின் கடனை செலுத்தினால் நன்மையே பயக்குமோ என்று வேறூன்றுவது; மனமுதிர்ச்சியின் அடையாளமே நாம் அனைவரும் அனாதைகளே என்று உணர்வதோ என்று இம்சிக்க வைப்பது; இன்னும் அலசிக் கொண்டே இருக்கவைக்கும் குணாதிசயங்களின் அணிவகுப்பாக கதை நகர்கிறது.

தமிழில் இதை மறுபதிப்பாக்கினால் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் யோசித்துப் பார்க்க ஆசை. அனாதை இல்லத்தின் தலைவராக; சட்டம், நிகழ்வியல் அபத்தங்களை அறிந்த டாக்டராக சிவகுமார். வயசுக்கு வரும் வயதின் குழப்பங்களோடு, வாழ்க்கையை வாழ நினைக்கும் இளைஞனாக 'ஜெயம்' ரவி. பர்மாவின் மேல் பறப்பதற்குத் துடிக்கும் போர் வீரனாக 'புன்னகைப் பூவே' நந்தா. காதலனை மிஸ் பண்ணும் நாயகியாக சிம்ரன். ஆப்பிள் பறிப்பவர்களின் தலைவராக பிரகாஷ்ராஜ். அப்பாவுடன் முரண்புணர்வுக்கு உள்ளாகும் சூட்டிகையான மகளாக பூமிகா. தலைமை தாதியாக சுகாசினி. Haapy-go-lucky-ஆக இரவின் நட்சத்திரங்களை ரசிக்கும் ஆப்பிள் பறிப்பவனாக விவேக். பிரும்மாண்டம் தலைநீட்டாமல், இயற்கையான இயக்குநராக ஜெனநாதன். வசனத்திற்கு இ.பா. மாதிரி யாரையாவது சேர்த்துக் கொண்டால் சரியாக இருக்கும்.

இவ்வளவும் சொல்லிவிட்டு படத்தின் உயிர்நாடியாக இருக்கும் குழந்தைகளை பற்றி எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. கடவுளை உணரவேண்டுமானால், பார்க்கவேண்டிய புத்தகம். 
 

 
 
ரெண்டு வரி நோட்: இந்தக் கதாசிரியரின் புத்தம்புதிய நாவல் A Widow for One Year, நாளை முதல் The Door In The Floor என்று வெள்ளித் திரையிடப் படுகிறது.

2 கருத்துகள்:

எங்க ஊரு படம். எனக்கும் பிடிச்ச படம் cider house!

-dyno

அண்ணே, படத்துக்கு உயிர்கொடுக்கிற மைக்கல் கெயின் இனைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லாமல், வருகிற எந்தப்படத்திலுலே drug overdose இலே கிறங்கிப்போனவர்மாதிரி எழுகிற நடக்கிற பேசுகிற அலைகிற சிலந்திவலைக்காரரை மட்டுமே பேசியிருக்கின்றீர்களே? நியாயமா? ;-)

-/பெயரிலி.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு