ஞாயிறு, ஆகஸ்ட் 08, 2004

வெறும் பொழுது - உமா மகேஸ்வரி

பிரியம்

ஏனிந்தக் குருவியை
இன்னும் காணோம்?
எனக்கு மகா செல்லம் அது.
பழுப்புக் கலரில் அழுக்குக்குஞ்சு.
சின்ன இறக்கைகளில்
கறுப்புக்கோடு தெரியும்.
கண் மட்டும்
கண்ணாடிக் கல் மாதிரி
செளிச்சத் துறுதுறுக்கும்.
உரிமையாய் கூடத்தின்
உள்ளே நுழைந்து நடக்கும்.
புத்தகம் ஒதுக்கி
அதையே கவனிக்கும் என்னை
அலட்சியப்படுத்தும்.
மாடி வெயிலில்
வேட்டியில் காயும்
வடகத்தை அலகால் நெம்புதல்,
தோல் உரிக்காது
நெல்லை விழுங்குதல்,
துணிக்கோடியில் கால் பற்றிக்
காற்று வாங்குதல்,
அறைக்கண்ணாடியில்
தன்னைத் தானே
கொத்திக் கொள்ளுதல் -
அதற்குப் பிடிக்கும்.
நான் இறைக்கும்
தானியமணிகளை
அழகு பார்த்துத் தின்னும்
ரசனாவதி.
ஏனிந்தக் குருவியை
இன்னும் காணோம்?
அது வரும் மாலை
மெதுவாய் நகருதே!
கீழ்வானப் பரப்பில்
கண் விசிறித் தேடினும்
காணவில்லை, எங்கு போச்சோ!
திடுமெனக் காதில்
தித்தித்தது அதன் கீச்சுக்குரல்
ஜன்னல் பிளவில்
உன்னிப் பார்த்தால்
அடுத்த வீட்டு முற்றத்தில்
இறைந்திருக்கும் தானியம் பொறுக்கி
அழகு பார்க்கும் என் குருவி;
என் முகம் ஏறிடாது
திருப்பிக் குனியும் விழிகளை

oOo

தமிழினி - 224 பக்கங்கள் - ரூ. 100/-

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு