வெள்ளி, ஆகஸ்ட் 06, 2004

கவிதைகளை ரட்சியும் - வைரமுத்து

Marathadi

அதிகாலை
சூரியன்கூட இன்னும்
முகம் கழுவவில்லை

வாசிக்க ஆளில்லை

என்னும்
வானப்புத்தகம்
திறந்திருந்தது

எனது தவச்சாலையாய்
மொட்டைமாடி

நட்டுவைத்த மௌனங்களாய்
மரங்கள்
அங்கங்கே
புள்ளினங்களின் பூபாளம்

கலை என்பது
இயற்கை வாழ்க்கை
இரண்டின் மொழிபெயர்ப்போ?

"அப்பா
உங்களைப் பார்க்க நிறையபேர்"

என் மகன்
கதவு தட்டிக்
கனவுடைத்தான்

கலைந்த தலை
கசங்கிய லுங்கி
முகத்தில் முள்

பரவாயில்லை

கவிதைக்கும் கவிஞனுக்கும்
நிஜமே கம்பீரம்

கீழே வந்தேன்

முகங்கள் முகங்கள்
முழுக்க முழுக்க முகங்கள்

படித்த முகங்கள் பாமர முகங்கள்
கனவு முகங்கள் கழுவாத முகங்கள்
அன்பில் குழைந்த ஆர்வ முகங்கள்
மழலை சுமந்த மாதர் முகங்கள்

'வணக்கம்'

ஓ!

ஒரேபொழுதில்
அத்தனை உதட்டிலும் பூப்பூக்க வைக்கும்
அற்புத மந்திரமா 'வணக்கம்'?

"எந்த ஊர் நீங்க?"

ஊர் சொன்னார்கள்

"என்ன விஷயம்?"

"ஒங்க பாட்டுன்னா உசுரு"

லுங்கி சிறகானது

"எல்லோருக்கும் டீ சொல்லுப்பா"

தேநீரைப் போலவே
சுடச்சுடக் கேள்விகள்

"ஒரு பாட்டு எழுத
எவ்வளவு நேரம்?"

"அதிகபட்சம்
அரை மணி நேரம்"

"பாட்டுக்கு எவ்வளவு
பணம் வாங்குறீங்க?"

"வாங்கவில்லை
கொடுக்கிறார்கள்"

"பாரதிராஜா உங்களுக்குச்
சொந்தக்காரரா?"

"ஆமாம் 'கலைச்சொந்தம்'"

"ரஜினியோடு
சாப்பிடதுண்டா?"

'உண்டு'

"கமல் டெலிஃபோன்
பண்ணுமா?"

"எப்போதாவது"

"நடிகைகள் வருவார்களா?"

"வந்திருக்கிறார்கள்
கல்யாண அழைப்பிதழ் கொடுப்பதற்கு"

"உங்களைப் பற்றியும்
கிசுகிசு வருகிறதே"

"என் புகழுக்கு அது போதாது"

"உங்களைத்
தொந்தரவு செய்கிறோமா"

"இல்லை
தோகை, மயிலுக்குத்
தொந்தரவா?

"உங்களுக்குப்
பிடித்த பாட்டு..."

'காதல் சிறகைக்
காற்றினில் விரித்து'

"நீங்கள் நினைத்து
நிறைவேறாமல் போன ஆசை?"

'மொட்டை மாடியிலிருந்து
குதிக்க வேண்டும்'

"உங்கள் பலம் எது?
பலவீனம் எது?"

'பலம் - பகை
பலவீனம் - சொந்தம்'

"குறைந்த நாளில்
நிறையச் சம்பாதித்த கவிஞர்
நீங்கள் தான்"

'இல்லை
எனக்கும்
மாசக்கடைசிகள் உண்டு'

"எங்களுக்கு
என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"

'மீண்டும் வணக்கம் சொல்ல
விரும்புகிறேன்'

சிரித்தார்கள்

அலையலையாய் அழகழகாய்ச்
சிரித்தார்கள்

கலைந்தார்கள்

கனவுகளாய்
கலர் கலராய்க்
கலைந்தார்கள்

எல்லோரும் போனபின்
அந்த அறையில் யாரோ
முனகுவது கேட்டது

திரும்பிப் பார்த்தேன்

தன்னை யாரும்
விசாரிக்கவில்லையே என்ற
விசாரத்தில்
கண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது
என் கவிதை

oOo

வைரமுத்து கவிதைகள் - ரூ. 300/- சூர்யா வெளியீடு

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு