சுற்றுச்சூழல் கேடு - உலகமயமாக்கம்
காலை அலுவலகத்திற்கு வண்டியோட்டும்போதுதான் இந்த செய்தி காதில் விழுந்தது. இந்தியாவில் கக்கும் புகைகள், மேற்கத்திய நாடுகளையும் பாதிக்கின்றன என அலாரம் அடித்தார்கள். ஒவ்வொரு வருடமும் என்னுடைய ஜான்ஸி ரானி காலத்து வண்டியை, பாதுகாப்பு மற்றும் புகை பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும்போது, பர்ஸுக்கு எவ்வளவு வேட்டு வைக்கப் போகிறதோ என்று பயமாக இருக்கும். புத்தகம் மட்டுமே கரைத்துக் குடித்த +2 மாணாக்கன் கணிதத்தில் நூறு எடுப்பது போல் பாதுகாப்பு சோதனையை எளிதாக வெல்லும். மேடையேறி பேசச் சொன்னால் எப்படித் தடுமாறுவானோ, அது போல சுற்றுச் சூழல் தேர்வில், எல்லைக்கோட்டைத் தொட்டு பாஸ் மார்க் எடுக்கும்.
போன வருடத்தில் இந்தியாவில் கூட இது போன்ற தரச் சான்றிதழ் பெற காலக்கெடு நிர்ணயித்த்தாக நினைவு. அது எந்த முறையில் 'ஸ்டே ஆர்டர்' வாங்கப்பட்டது, எவ்விதம் ஊக்கத்தொகைக் கொடுக்கப்பட்டது, எங்கு போலி ஸ்டிக்கர் கிடைத்தது போன்ற தகவல்களை அறியேன்.
என்னதான் அமெரிக்கவில் மாய்ந்து மாய்ந்து கார்களை சுத்தப்படுத்தல், தொழிற்சாலைகளின் மாசுகளுக்கும் கட்டுப்பாடு விதித்தல் செய்தாலும், உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் கேடு விளைவித்தால், அது அமெரிக்காவையும் பாதிக்கிறது என்பதே, இந்த ஆராய்ச்சியின் தற்போதைய கண்டுபிடிப்பு. சைனா போன்ற வளரும் நாடுகளின் ஆலைகளுக்கு, புகைகளை சுத்தம் தரும் கருவிகளைக் கொடுப்பது, மேற்கத்திய நாடுகளைக் காப்பாற்றிக் கொள்ளும் வழி எனத் தொடர்கிறது.
ஆறு நாடுகளில், ஆறு வாரங்களுக்கு இந்தச் சோதனைகள் நடத்தப்படும். ஓசோன் சிணுக்கர்களைத் (sensors) தாங்கிய பலூன்களுடன் மாசுள்ள காற்றும், இன்ன பிற தூய்மையற்றவையும் எங்கு செல்கிறது, எவ்வாறு கண்டங்களுக்கிடையே பயணிக்கிறது, எப்படி சோர்வுற்கிறது என்பதைக் கண்டறிவார்கள். தற்போது கனடாவிடம் இருந்தும், ஐரோப்பாவிடம் இருந்தும் இடிபட்டு வரும் அமெரிக்காவைக் காப்பாற்றிக் கொள்ள இதன் முடிவுகள் உதவலாம்.
அமெரிக்காவை விட, ஆசியாவின் மாசுபடுத்தல்தான் பெரியது என்று நிரூபிப்பதன் மூலம், மற்ற நாடுகள், தன்னை விட்டுவிட்டு சைனா, இந்தியாவின் மேல் தங்களின் கோபத்தையும் க்யோட்டோ போன்ற ஒப்பந்தங்களையும் வீசவேண்டும் என அமெரிக்கா எண்ணுகிறது.
oOo
சம்பந்தமில்லாமல், சமீபத்தில் பார்த்த மைக்கேல் மூரின் டாகுமெண்டரியான 'பௌலிங் ஃபார் கொலம்பைன்' நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது. லாஸ் ஏஞ்சலீஸ் ஆரம்பித்து பாஸ்டன் வரை கொடுக்கப்படும் இரவுச் செய்திகளை நகையாடும் பகுதி அது. கொலை என்றால் கறுப்பர், கொள்ளை என்றால் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்னும் எண்ணத்தை அமெரிக்கர்களிடையே 'செய்திகள்' எப்படி விதைத்துள்ளது என்பதை பல புள்ளி விவரங்களுடனும் சில செய்திக் கோப்புக்களுடனும், ஒரு நேரடி செய்தி சேகரிப்பு புலனாய்வுடனும் விவரிப்பார்.
கறுப்பர்கள் கொலை செய்தால் எவ்வளவு சினிமாஸ்கோப்தனத்துடன் காவலர்கள் ஆய்ந்து அறிகின்றனர் என்பதை, எல்லே போலீஸுடனான தன்னுடைய குதர்க்கப் பேட்டியின் மூலம் நமக்கு சொல்லுவார்.
மூர்: 'அந்தக் கறுப்பனிடம் துப்பாக்கி இருந்ததா?'
போலீஸ்: 'இன்னும் இருப்பதாக கண்டுபிடிக்கவில்லை"
மூர்: 'எல்லேயில் எங்கு பார்த்தாலும் தெரியக்கூடிய, மலைமேல் இருக்கும் 'ஹாலிவுட்' என்னும் பெருத்த அடையாளப் பலகைத் தெரியவே இல்லையே! அதற்குக் காரணமான அசுத்தமான காற்று குறித்து விசாரித்தீர்களா?'
போலீஸ்: 'இல்லை'.
மூர்: 'இல்லாத ஒன்றை குறித்து கடந்த இரண்டு மணி நேரமாக துப்பு தேடுகிறீகள். இருக்கும் சுற்றுப்புறச் சூழலை குறித்து நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?"
பதில் சொல்ல விரும்பாத போலீஸார் நகர்ந்து செல்கிறார்கள்.
கருத்துரையிடுக