வெள்ளி, ஆகஸ்ட் 27, 2004

ஆவணி அவிட்டம்

இதுவும் சிறுகதை எழுதும் பயிற்சி முயற்சிதான். தங்களின் கருத்துகளுக்கு, முன்கூட்டிய நன்றிகள்.



உபநயனம் செய்வித்த அன்றே சந்தியாவந்தனம் செய்யாமல் விட்டவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்... என்னைத் தவிர.

பதின்மூன்று வயதான எனக்கான உபநயனமும், என்னுடைய அக்காவின் திருமணமும் ஒரே நாளில் நடந்தேறியது. முகூர்த்தத்திற்கு நாழியாகிறதே என்னும் பரபரப்பில் என்னுடைய பெற்றோர் இருந்தார்கள். சித்தப்பாக்களுக்கோ மாப்பிள்ளை ரூமில் மின்விசிறி வேகமாய் ஓடவில்லை என்பதில் டென்ஷன் எகிறிக்கொண்டிருந்தது. மாடியேறிக் குளிக்க முடியாது என்போரை திருப்பி விடுவதில் மாமாக்களும் பிஸி. வாத்தியாருக்கோ காசி யாத்திரைக்கு சென்றவரை தடுத்தாட்கொள்வதும், என்னுடைய காதில் ரகசியமாக பிரம்மோபதேசம் செய்வதும் க்ளாஷ் ஆகக் கூடாதே என்னும் பயம். எனக்கோ, பூணூல் தரித்தவுடந்தான் டிபன் கிடைக்கும் என்பதால், செல்லப்பாவின் நெய்மணக்கும் கேசரியும், உப்புமாவும் காலியாகிப் போயிருக்கக் கூடாதே என்னும் கவலை.

கல்யாண வீடு களேபரத்தில், அன்று மாலை ஆரம்பிக்கவேண்டிய சந்தியாவந்தனத்தை சந்தோஷமாக மறந்தே போனோம். நலங்கில் ரொம்ப உரிமையெடுத்துக் கொண்டு தன் பையன் அப்பளாத்தை தலையில் ஒழுங்காக உடைக்கவில்லை என்ற மாமியார் கோபத்தை நைச்சியமாகப் பேசி சமாதானப் படுத்துவதில் சிலர் அக்கறை காட்டிக் கொண்டிருந்தார்கள். கொடுத்த அட்வான்சுக்கு 'அதைப் பிடி... என்னை இப்படி படம் எடு' என்று படுத்தியதில், மாலை ரிசப்ஷனுக்கு வீடியோகாரன் டேக்கா கொடுத்திருந்தான். எப்பொழுதும் என்னைப் பார்த்தவுடன் 'நான் யார் என்று தெரிகிறதா?' என்று படுத்தும் ஒன்றுவிட்ட மாமா ஒருவர், என்னை ஒதுக்குப்புறமாக அழைத்துக்கொண்டு போய், 'எது எப்படி ஆனாலும், எந்த ராஜா, எந்த பட்டினம் போனாலும், காலையிலும் மாலையிலும் பதினாறு தடவையாவது காய்த்ரி ஜெபிச்சுடு' என்று சொன்ன சீரியஸில், காய்த்ரி ஜபத்துக்கு நிறையவே பயம் கலந்த ரெஸ்பெக்ட் கிடைத்தது.

அந்த வயதிலும் சரி... இப்பொழுதும் சரி... கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டு, மனதை அலைபாயாமல், ஜெபிக்க ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் கண் அசந்திருப்பேன். ஸ்கூலில் ஒரு தடவை 'ஆழ்நிலை தியானம்' என்னும் சர்வ மத வகுப்பு ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். நிறைய சுவாரசியமான அறிவுரைகள். கொஞ்சம் மனத்திற்கான விளையாட்டுகள். மேலாண்மை தத்துவங்கள். வயலின் வகுப்பு. நிறைய குட்டிக்கதைகள் என்று போரடிக்காமல் இருந்தது எங்களுடைய மிகப் பெரிய ஆச்சரியம். அந்த நாளின் கடைசி பகுதியாக டிரம்ப் கார்ட் மாதிரியான தியானம் செய்முறையை விளக்கிவிட்டு, அனைவரையும் பத்து நிமிடம் கண்மூடி, தியானம் பயில சொன்னார்கள்.

எப்பொழுது நிகழ்ந்தது என்று தெரியாது. ஆரம்பத்தில் பக்கத்துவீட்டு ஸ்ரீநிதியும், மொட்டைமாடி டேங்கை க்ளீன் செய்யவேண்டிய முறைவாசலும், பிள்ளையாருக்குப் போட வேண்டிய நூற்றியெட்டுத் தோப்புக்கரணக் கடனும், பெஞ்சில் பெயர் பொறித்திருப்பதால் ஃபைனைத் தீட்டுவார்களோ கவலையும், பள்ளியில் நடக்கும் அடுத்த சினிமா ஷூட்டிங்கும் 'அன்புள்ள ரஜினிகாந்த்' மாதிரி பெரிய நட்சத்திரங்களை வைத்திருக்கவேண்டும் வேண்டுதலும், 'மாறுகோ... மாறுகோ'வுக்கு ஆடலமைத்த பிரபுதேவா என்னை படபிடிப்புக்குக் கூட்டிச் செல்ல வேண்டுமே என்பதுமே ஓடிக் கொண்டிருந்தது. எப்படி அமைதியாகிப் போனேன் என்று தெரியாது. இழுத்து இழுத்து விட்ட மூச்சாக இருக்க வேண்டும். அல்லது கண்ணை மூடிக் கொண்டே, இறுக மூடாமல் அரைப் பார்வை பார்த்ததாக இருக்கலாம். சத்தமில்லாமல், வாய்க்குள், நாக்கை அசையாமல் உச்சரித்த 'ஓம்' செய்திருக்கலாம். தூங்கியேப் போனேன்.

நீண்ட வெள்ளை அங்கியுடன், குண்டு கறுப்பு கண்ணாடியுடன், என்னை மெல்லத் தொட்டவர்தான் மீண்டும் நிலைக்குக் கொண்டு வந்தார். சக மாணவர்களின் சிரிப்பை அடக்குவதற்காக சொன்னாரா என்று தெரியாது. 'உண்மையான தியானத்தின் முதல் படி, தூக்கம்தான். தூங்க ஆரம்பிப்பதுதான், பாசாங்கற்ற தியான முயற்சியின் ஆரம்ப நிலை' என்றபோது முதன்முதலாக எழுதிய கதைக்குக் கிடைத்த பின்னூட்டம் போல் சந்தோஷமாக இருந்தது. நண்பர்கள் விடவில்லை. 'ராவெல்லாம் முழிச்சிருந்து என்ன பண்றே' என்று கேள்விகள் கேட்டு என்னை நிறைய ஸ்ரீநிதி கதைகளை சொல்ல வைத்தார்கள். அவற்றில் சில பாக்யராஜ் செய்தவை. சில அக்கா படித்த மில்ஸ் அண்ட் பூனில் வருபவை. சில மதனகாமராஜன் கதைகளில் சொன்னவை. சில யு-ஏ முத்திரை வழங்கக் கூடிய உண்மை கற்பனைகள்.

ஆனாலும், அப்பொழுதும் சந்தியாவந்தனம் தொடர்ந்ததில்லை. பூணூல் கிடைக்கும்வரை, நமக்கும் தோளில் மூன்று கயிறு இருக்காதா... திருமணம் ஆனபின் ஆறு ஆகாதா... குழந்தை பிறந்தால் அல்டிமேட் பெரிய பதவியாக மூன்று மூன்றாக -- ஒன்பது கிடைக்காதா என்னும் அவா. கிடைத்தவுடன், அதனால் என்ன பயன், எதற்காக அணிந்திருக்கிறேன், செய்யவேண்டியதை ரிலிஜியஸான கடமையுணர்வோடு செய்கிறேனா என்றால்... இல்லை.

சின்ன வயதுகளில் பள்ளிக்கூடம் இருக்கும். ஒன்பது மணிக்கு சைரன் ஊதி அழைக்கும் பள்ளிக்கு, சாதாரணமாக எட்டு மணிக்கு எழுந்தால் போதுமானது. ஆவணி அவிட்டம் இருக்கும் நாள் மட்டும், ஏழுமணிக்கே எழுப்புவார்கள். அரை டிராயரை மட்டுமே போட்டுக்கொண்ட கால்களுக்கு, வேஷ்டி கிடைக்கும். வேஷ்டி கட்டி, தோளில் தூண்டு போட்டுக் கொண்டு நடப்பதே பெருமிதமாக இருக்கும். இதும் ஏற்கனவே சொன்ன 'கிடைக்காத ஒன்று' வகையறாவில் சேரும். காலில் தடுக்கி தடுக்கி சரசரக்கும் சத்தம் போடுவது பிடிக்கும். பட்டு சரிகையோடு நீலமும் சிவப்புமாக இருக்கும் மயிற்கண் வேட்டியினால், இல்லாத மினுக்கும், பிரீமியர் மில்ஸ் விளம்பரத்தில் சொல்லிக் கொடுக்கும் கௌரவமும் கிடைத்திருப்பதாக தோன்றும்.

ஆவணி அவிட்டத்திற்காக செய்யப்படும் சமையல் மிகவும் முக்கியமானது. சாதம் போட்ட பால் பாயஸம், வடை என்பது நிச்சயம் இருக்கும். அனேகமாக, கொலஸ்ட்ராலுக்காக டோஃபு போட்டு செய்யாமல் சுத்த தேங்காயில் குளித்த அவியல், அம்மாவின் கையை அரக்காக்கியிருக்கும் பீட்ரூட் கறி, கடலைபருப்பு கூட்டோ என்று சந்தேகிக்கவைக்கும் கோஸ் கூட்டு, சாலடில் தற்போது மண்டை மண்டையாகக் காணப்படும் வெள்ளரிக்காயின் பிஞ்சு பச்சடி, தெளிவான குளத்தின் பாசி நிறைந்த தண்ணீரில் டக்கென்று கண்ணில் சிக்கும் மீன்களைப் போல் தக்காளிகளைத் தாங்கி நிற்கும் பொன்னிற ரசம், வெண்டக்காயை வறுத்துப் போட்ட மோர்க்குழம்பு, பலருக்கு அலர்ஜி கொடுத்தாலும் எனக்காக சேனை மசியல், கிண்ணம் நிறைய பருப்பு, அமெரிக்காவின் நீர்நிலைகளில் போடப்படும் சில்லறைகளைப் போன்ற முள்ளங்கித் தான்கள் நிறைந்த அரைத்துவிட்ட சாம்பார், உருளை ரோஸ்ட் என்று மெனு தயாராகிக் கொண்டிருக்கும்.

நாங்கள் செல்லும் சங்கர மடம் மிகவும் அழுக்காக இருக்கும். பழைய பூணூலை தூக்கியெறிந்துவிட்டு புதியதை மாட்டிக்கொள்ள கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகும். இவ்வளவு நேரமும் குத்திட்டு மட்டுமே உட்கார்ந்து கொள்வது உடம்புக்கு நல்ல எக்ஸர்சைஸ். கீழே அப்படியே உட்கார்ந்தால், பட்டு வேட்டி பாழாகிப் போகும். டேபிள், சேரில் உட்கார்ந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொள்ள இனிமேல்தான் வேதங்களை அர்த்தப்படுத்தவேண்டும். கால் வைக்கும் இடமெங்கும், முந்தின பேட்ச் செய்த ப்ரோஷனங்கள் ஓடிக் கொண்டிருக்கும். கூரை இல்லாத ஏழ்மையான பள்ளிக்கூடத்தில், நான்காம் வகுப்புக்கான கணக்குப் பாடமும், மூன்றாம் க்ளாஸ் தமிழ் வகுப்பும், பக்கத்து பக்கத்து மரத்தடியில் இடித்துக்கொள்வதை ஒத்து இங்கும் ஆறரை மணியின் யஞ்ஞோபவீதனத்தாரணமும், எங்களின் பிராயசித்தமும், கூட்டலும், திருக்குறளுமாக மாறி மாறி குழப்பும்.

நான் செய்த பாவங்களைக் கழுவி விடுவதற்காக பிராயசித்தம் செய்யப்படுவதாக வாத்தியார் சொல்வார். வெள்ளீஸ்வரர் கோவிலில் உறங்கிக் கொண்டிருந்த பூனையைக் கோணிப் பையில் போட்டு, வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்து, அது பால்குடிக்காக ஏங்கித் தவித்தது முதல் பாவம். போன வருடத்தில் பெரிதாக எதுவும் பாவங்கள் இழைக்கவில்லை. அம்பையராக இருந்தபோது தண்டபாணி மிரட்டி வைத்திருந்ததால், அவன் க்ளீன் போல்ட் ஆனவுடன், அவுட் கொடுக்காதது பாவமாகத் தோன்றவில்லை. அவசர அவசரமாக மதிய உணவை முடித்துவிட்டு நான்கு தெரு தள்ளிச்சென்று, ரேகாவின் வீட்டில் ஆரம்பித்து அவள் படிக்கும் பெண்கள் பள்ளியின் வாசல் வரை நிழல் தொடருவதும் தவறில்லை. ஷூ காலோடு விநாயகரை கும்பிட்டபோதே, அவரிடம் மன்னிபு கேட்டுவிட்டேன். படு சின்சியராக படித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநிதியின் மேல் கல்லெறிவது கூட விளையாட்டாகத்தான் செய்கிறேன். அப்படியே, அவை தப்புதான் என்றாலும், அடுத்த ஆவணி அவிட்டத்தில் பிராயசித்தார்த்தம் செய்தால், பாவங்களைக் கழுவி விடலாம்.

நான் பாவமே செய்யாமல் பிராயசித்தம் செய்தது என்னுடைய கல்லூரி காலத்தில்தான். வட இந்தியாவில் இருந்ததால் ரக்ஷாபந்தனுக்குத்தான், அதிக முக்கியத்துவம் இருக்கும். ராக்கியை முன்னிட்டு ஒரு வாரம் முன்பில் இருந்தே, தபால்கள் வண்ணமயமாக வந்து கொண்டிருக்கும். ஆவணி அவிட்டமும் ரக்ஷாபந்தனும் ஒரே நாளன்றுதான் என்றாலும், தபால் நிலையத்தின் கைங்கரியத்தினாலோ, தங்கைகளின் சோம்பலினாலோ, கோடை காலம் முடியும் வரை அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். கடிதத்தைப் பிரித்து, கர்மசிரத்தையாக அவர்கள் அனுப்பியதை கையில் கட்டிக் கொள்வார்கள். பதிலாக, தமக்கைகள் மணியார்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கலாம். பொங்கலுக்கு அடுத்தநாள் கணுப்பொடி வைப்பதுதான் எனது நீண்ட ஆயுளுக்கும், நலனுக்குமாக தமிழர்களின் பழக்கம். அதனால், எங்கள் வீட்டில் ஆவணி ஆவிட்டத்திற்கும், தங்கைகளுக்கும் அதிக சம்பந்தமில்லை.

கல்லூரியில் இருந்த நான்கு வருடங்களில் முதல் வருடம் என்னை ரேகிங் செய்தவர்களைத் தண்டித்ததால் பாவம் இழைத்திருப்பேன். இரண்டாம் வருடம் மெஸ் தேர்தலில் நின்றவனை ஜெயிக்க வைப்பதற்காக தில்லுமுல்லு செய்திருக்கலாம். மூன்றாம் வருடம் உன்மத்தருள் உத்தமராக இருந்த காலம். அந்த வருடம்தான் புதிதாக சேர்ந்திருந்த தமிழ்ப் பேராசிரியர், டில்லியில் இருந்து வாத்தியாரை வருவித்திருந்தார். அவரை மாணவர்களுடன் பகிர்ந்தும் கொண்டார். டெல்லி வாத்தியாருக்கு தமிழர்களைப் பார்த்த குஷியில் சம்ஸ்கிருத ஸ்லோகங்களுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டே ஆவணி அவிட்டத்தை நடத்தினார். முன்று நூல்களை அணிந்து கொள்வதன் மூலம் சிம்பாலிக்காக கடவுளுடன் இணைகிறோம் என்னும் போது மிகவும் ஆர்வமாகத்தான் இருக்கும். தாயத்தைக் கட்டிக் கொண்டால், வீரமும், பலமும், மரியாதையும் கிடைப்பது போல் பூணூல் மாட்டிக் கொள்வதாலும் சந்தியாவந்தனம் செய்வதாலும் நீண்ட நாள் வாழலாம் என்னும் மந்திரங்களை உணர்த்தினார்.

அமெரிக்கா வந்தபிறகு பூணூலினால் தொல்லைகள்தான் ஜாஸ்தியாகிப் போனது. மூன்று மாதமே இருக்கும் சம்மருக்காக கடற்கரையில் சட்டையைக் கழற்றினால், வெற்று மார்பை அலங்கரித்தது. ஜிம் சென்று முப்பது நிமிடம் ஓடிக் களைத்தபிறகு, குளிக்க சென்றாலும், புருவங்களை உயர்த்த வைத்தது. துடிக்கிற ஆட்டத்தைப் பார்க்க, நைட் க்ளப் செல்லும் சமயங்களில், இருபது டாலருக்கு, மூன்று நிமிட ஆட்டக்காரியையும் உறுத்தவைக்கிறது.

இப்பொழுதெல்லாம் என்னுடைய பூணூல் பீச் அலைகளில் தொலைவதில்லை. வீட்டின் சாவியைப் போல், பெட்ரூமில் இருக்கும் தினசரி காலெண்டரின் ஆணியில் மாட்டப்பட்டிருக்கிறது.

3 கருத்துகள்:

Dear Balaji,
Very Good story. The way you have written the story is very good, Funny sometimes. The only thing you should edit is "Sirukathai..Pinoottam" line which didnt gel with the story. Good job!

அருணை வழிமொழிகிறேன்.

பாபா, கதையிலே வர்ற உபநயனம், சந்தியாவந்தனம் (இதுக்கு என்னோட அகராதியிலே வேற அர்த்தம்) எல்லாம் என்னன்னு புரியாதவங்க என்ன பண்றது? எனக்கென்னவோ இது கதை மாதிரி தெரியலை ;-).

நேங்க இதுக்கு முன்னாடி சிறுகதை எழுதி இருக்கீங்களே?. குறிப்பா ஒரு ஹோமம் பற்றிய நகைச்சுவை கதை..

ஆனாலும் இந்த பதிவு டைம்லி பதிவே?. ;)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு