செவ்வாய், செப்டம்பர் 21, 2004

ஜான் எட்வர்ட்ஸ் - செல்லாத வோட்டு

'நான் வியட்நாம் போரை முடித்துக் கொண்டு திரும்பியபோது, ஜான் எட்வர்ஸ் டயாபரைக் கூட விட்டிருக்க மாட்டான்!'

-- மேற்கண்ட பொன்மொழியை சொன்னது டிக் சேனி அல்ல. சுதந்திர கட்சியின் துணை-ஜனாதிபதி வேட்பாளராக எட்வர்ட்ஸை தேர்ந்தெடுப்பதற்கு முன் ஜான் கெர்ரி பேசியது.

அதற்கு பழிவாங்குவதற்காகவோ என்னவோ... தெரியவில்லை. கெர்ரியை சகட்டு மேனிக்கு வம்பிழுக்கும் டிக் சேனியையும் இன்ன பிற குடியரசு கட்சித்தலைவர்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார் ஜான் எட்வர்ட்ஸ். அவருக்கு இது ஒரு அவசியமான ஆனால் முக்கியமில்லாத தேர்தல். அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதற்கு கிடைக்கும் நேரடிப் பயிற்சி.

நான்கு வருடம் கழித்து நிகழப் போவதற்கு இப்பொழுது ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார் எட்வர்ட்ஸ். ஹில்லரி க்ளிண்டனுக்கு இந்தத் தேர்தல்களில் நிறைய அனுபவமும், பெரிய படையும் உண்டு. எட்வர்ஸ் இந்த மாதிரி தேசிய அளவிலான பிரச்சாரங்களையும், தொண்டர் மேய்ப்பையும் செய்து அறியாதவர். இப்பொழுது அதிக பணம் செலவழிக்காமல், பெயரும் ரிப்பேர் ஆகாமல், பட்டி தொட்டியெங்கும் பெயரை பரப்பிக் கொண்டிருக்கிறார்.

நான்கு வருடம் மட்டுமே எம்.பி (senator)-யாக இருந்தவர், நாப்பத்தி நான்கு வருடம் அரசியலில் கலக்காமல் காசு மட்டுமே பார்க்கும் வக்கீலாக இருந்தவர், சில தேர்தல்களில் மட்டுமே வோட்டு போட வாக்குச்சாவடி பக்கம் எட்டிப்பார்ப்பவர், என்னும் அனுபவமின்மைப் பட்டியலை துடைத்தெறியும் வாய்ப்பை ஒழுங்காக பயன்படுத்தி வருகிறார் எட்வர்ட்ஸ்.

குழந்தையின் கள்ளமில்லாத சிரிப்பும், நேர்மறையான அணுகுமுறையும், பார்வையாளரை மயக்கும் பேச்சும் அவரை எளிதில் செனேட்டர் தேர்தலில் வெற்றிபெற வைத்தது. தனது பதினாறு வயது மகன் விபத்தில் இறந்தபின்புதான் அவருக்கு அரசியலில் நுழையும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. பதவியில் அமர்ந்து சமூகத்தின் மாற்றத்திற்கு வித்தாக இருக்கவேண்டும் என்பதற்காக சொந்தப் பணம் ஆறு மில்லியன் டாலரை கரைத்தவர். இப்பொழுதும் அதே போன்ற அமைதியான, விஷய அடர்த்தியும், கொள்கைப்பிடிப்பும் கொண்ட பேச்சுக்களே வோட்டுக்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறார். அதனால், டிக் சேனி போன்றோர் முன்னிறுத்தும் சேற்றை வாரி இறைக்கும் வார்த்தைஜாலங்களையும், மிரட்டும் அச்சுறுத்தல்களுக்கும் பதிலடி கொடுக்காத புத்தராக, செய்திகளை நிரப்பாமல், ஓரமாக நகர்வலம் செய்து கொண்டிருக்கிறார்.Crawdad Presidential Campaign Tracking Dashboard என்னும் தளத்தில் யார் எவ்வளவு புழுதியை எப்படி எங்கே வீசுகிறார்கள் என்று விவரமாக அலசுகிறது. புஷ்ஷுக்கும் சேனிக்கும் சளைக்காமல் கெர்ரி காரி துப்பினாலும், இலக்கற்று துப்புவது போல் தோன்றுகிறது. 'சொல்லி அடிப்பாரடி... அடிச்சாருன்னா நெத்தியடிதானடி' என்பது போல் வியட்நாம், ஈராக் போர் என்று ஒவ்வொரு பிரம்மாஸ்திரமாக விட்டுக் கொண்டிருக்கிறார்கள் குடியரசு கட்சி. கெர்ரியோ தன் வசம் இருக்கும் 'பொருளாதார' நாகாஸ்திரத்தையும் சரியாக ஏவாமல், வரும் அம்புகளில் இருந்து தப்பிப்பதே பெரும்பாடாக இருக்கிறது.

கெர்ரிக்கு இந்த மாதிரி நிலை ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே சுதந்திர கட்சியின் வேட்பாளருக்கான முதல்கட்ட தேர்வில் பின்தங்கிய நிலையில் இருந்தவர்தான். முதலில் நடந்த 'ஐயோவா' மாகாணத்தில் கூட இரண்டாம் இடத்தைப் பிடித்தால் போதும் என்று முனகிக் கொண்டிருந்தார். ஜாக்பாட் ரேஸில் தன் பெரிய மூக்கை உள்ளே நுழைத்து முதலிடம் பிடித்தவர், வழியில் வந்த மற்றவர்களையும் தவிடு பொடியாக்கி சுதந்திரக் கட்சியின் வேட்பாளாராக அற்விக்கப்பட்டவர்.

ஆனால், பிறரை தாழ்த்திக் காட்டி கெலிப்பதில் ஜார்ஜ் புஷ் வில்லாதி வில்லர். கடந்த 2000-த்தில நடந்த குடியரசு கட்சி வேட்பாளருக்கான தேர்தல்களில் மெக்கெயின் முன்னிலை வகித்தார். ஜார்ஜ் புஷ்ஷுக்கு அனுபவம் போதாது; போருக்கு செல்லாதவர் என்ற குறைகளை படு சாமர்த்தியமாக திசை திருப்பி, எதிராளியின் இல்லாதது + பொல்லாதது பரப்பி, வங்கி ஊழல் குற்றஞ்சாட்டி கட்சியின் சீட்டை அடைந்தவர். பரபரப்பு பேப்பரை சென்றடையும். எதிராளியின் பெயரை களங்கமடைய வைக்கும். எளிதில் பரவும். ஊடகமெங்கும் 'நெருப்பில்லாமல் புகையுமா?' என வல்லுநர்களைக் கொண்டு அலச வைக்கும். கடைசியில் பொய் என்று முடிவு பெற்றால் கூட 'காசு கொடுத்து வாயை அடைச்சுட்டான்பா' என்று எண்ணத்தை மனதின் ஓரத்தில் வடுவாக விட்டுச் செல்லும்.

மஹாபாரதப் போரில் அர்ஜுனரும் கர்ணனும் சண்டை புரிகிறார்கள். கர்ணனின் தேர் தாழ்ந்தபொழுது அவனைக் காப்பாற்ற தேரோட்டி சல்லியன் உதவி புரிய இறங்கவில்லை. கர்ணனே இறங்கி தேரை நிலைப்படுத்தப் போகும்போது அர்ஜுனரின் அம்பு அவனை மாய்க்கிறது. சல்லியன் சிறப்பான தேரோட்டிதான்; பாண்டவர் பக்கம் சாயாதவர்தான்; சாமர்த்தியசாலிதான்; ஆனாலும், அப்பொழுது பயன்படவில்லை. அமெரிக்காவின் கர்ணன் -- கெர்ரிக்கு, எட்வர்ஸாவது, தரையில் இறங்கி, சாய்ந்து கொண்டிருக்கும் மதிப்பை நிலைநாட்டி, காப்பாற்றுவாரா?

இல்லையென்றால், அஸ்வத்தாமனாக மைக்கேல் மூர், 'Wacko' என்னும் தலைப்பில் படமெடுக்க அடுத்த கதை கிடைக்கலாம்!

-பாஸ்டன் பாலாஜி

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு