வியாழன், நவம்பர் 11, 2004

ஒரு வதமும், அதன்பின்னும் - என் சொக்கன்

© தினம் ஒரு கவிதை

வீரப்பன் கொல்லப்பட்ட மறுதினம், நான் கோட்டயத்தில் இருந்தேன்.

விடுதி அறையில், செல்ஃபோனில் அலாரம் வைத்து எழுந்து, குளித்துத் தயாராகிக் கீழே வந்தால், வரவேற்புப் பகுதியில் ஏழெட்டு மலையாளச் செய்தித் தாள்கள் அழகாக மடித்துவைக்கப்பட்டிருந்தன.

எனக்கு சத்தியமாய் மலையாளம் படிக்கத் தெரியாது. என்றாலும், அன்றைக்கு எல்லா செய்தித் தாள்களின் முதல் பக்கமும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாய்த் தோன்றியதால், ஆர்வமாய் எடுத்துப் பார்த்தேன்.

ஆச்சரியம். எல்லா 'முதல் பக்க'ங்களிலும், வீரப்பனின் வண்ணப் புகைப்படம் இருந்தது. பக்கத்தில் ஜாங்கிரி ஜாங்கிரியாய் பெரிய மலையாள எழுத்துகள் - ஏதேனும் பெரிதாய் நடந்திருக்கவேண்டும்.

கர்நாடகாவில் இத்தனை வருடங்களாய் வாழ்ந்துவிட்டதால், சட்டென்று எனக்குத் தோன்றியது, வீரப்பன் இன்னொரு பிரமுகரைக் கடத்திவிட்டான் என்பதுதான். முன்பு ராஜ்குமார், பின்னே நாகப்பா, இப்போது யாரப்பா ?

ஆனால், அந்தச் செய்திகள் எவற்றிலும், வீரப்பனைத்தவிர வேறு யாருடைய புகைப்படமும் இல்லை. ஆகவே, இது கடத்தல் விவகாரம் இல்லை என்று லேசாய்ப் பிடிபட்டது. ஒருவேளை வீரப்பனைப் பிடித்துவிட்டார்களோ ?

இந்த எண்ணம் தோன்றியதுமே, சட்டென்று 'சாமி' திரைப்படத்தில் வரும் விவேக் அய்யர்தான் நினைவுக்கு வந்தார். 'அவரை எப்போ பிடிக்கப்போறேள் ?', என்றபடி வீரப்பன்போன்ற பாவனை மீசையை அவர் வருடிக்காட்டும் கிண்டல் காட்சியை நினைத்துக்கொண்டபடி, வரவேற்பறையிலிருந்த நண்பரிடம், 'இது என்ன நியூஸ் ?', என்று ஆவலோடு கேட்டேன்.

அவர் முகத்தில் ஏனோ சிரிப்பு பொங்கிக்கொண்டிருந்தது, 'வீரப்பன் வெடிவச்சுக் கொல' என்று ராகத்தோடு படித்துக் காண்பித்துவிட்டு, 'வீரப்பனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்', என்று ஆங்கிலத்தில் விளக்கினார்.

என்னால் அந்தச் செய்தியைச் சட்டென்று நம்பவேமுடியவில்லை, 'நிச்சயமாய்த் தெரியுமா ? அல்லது, எப்போதும்போல் இன்னொரு வதந்தியா ?', என்று விசாரித்தேன்.

'உறுதியான செய்திதான்', என்றார் அவர், 'டிவியில் வீரப்பனின் பிணத்தைக்கூட காட்டிவிட்டார்கள்'

நான் மெதுவாகத் தலையாட்டிவிட்டு, என்னுடைய பணி அலுவலகத்தை நோக்கி நடந்தேன். வழியெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள், குழப்பங்கள். வீரப்பனை யார் சுட்டார்கள் ? தமிழக அதிரடிப் படையா, அல்லது கர்நாடகமா ? எங்கே சுட்டார்கள் ? எப்படி ? இந்த மரணத்தால், வீரப்பன் விவகாரத்தில் இதுவரை பதில் தெரியாமலே இருக்கும் கேள்விகள், குழப்பங்களுக்கெல்லாம், விடை கிடைக்காமலேபோய்விடுமா ?

அலுவலகம் வந்தடைந்ததும், அவசரமாக சில ஆங்கிலத் தளங்களுக்குச் சென்று, இதுபற்றிய தகவல்களை வாசித்து அறிந்துகொண்டேன். என்றாலும், அந்தக் கடைசி கேள்விமட்டும் மனதுள் தொக்கி நின்றது.

சிறிது நேரத்தில், நண்பர் பா. ராகவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு, 'உடனடியாக வீரப்பன்பற்றிய ஒரு முழுமையான நூலைக் கொண்டுவரவேண்டும்', என்றார். வாழ்க்கை வரலாறுபோல இல்லாமல், அறிமுகம், முக்கிய சம்பவங்கள், கேள்விகள், அலசல் என்பதாக அவருடைய திட்டம்.

உடனடியாக என்றால், மிக உடனடியாக. ஒரு வாரத்துக்குள் எழுதி முடித்து, பத்து நாள்களுக்குள் பிரசுரித்துவிடவேண்டும். வெளிநாடுகளில் இதுபோன்ற 'லேட்டஸ்ட்' விஷயங்களை அலசும் நூல்கள் அதிகம். பொதுவாக ஆங்கிலத்தில்மட்டும் செய்யப்படும் இதுபோன்ற முயற்சிகளை, கிழக்கு பதிப்பகத்தின்மூலம், தமிழிலும் செய்துபார்க்கவேண்டும் என்று ராகவனும், பத்ரி சேஷாத்ரியும் விரும்பினார்கள்.

Veerappan Book

என்னதான் தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள் இருப்பினும், அவர்கள் சமீபத்திய செய்திகளில்தான் கவனம் செலுத்துவார்கள், ஆங்காங்கே முந்தைய சம்பவங்கள் அலசப்பட்டாலும், அவற்றில் ஒரு முழுமையான பார்வை இருக்காது. ஆகவே, வீரப்பன் விவகாரத்தைப்பற்றி விளக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களின்மத்தியில், இதுபோன்ற நூல்களுக்குத் தேவை இருக்கும் என்று பத்ரி உறுதியாய் நம்பினார்.

அடுத்த இரண்டு நாள்களுக்குள் தேவையான செய்திக் குறிப்புகள், நூல்களைத் திரட்டி, தகவல்களைத் தொகுத்தோம். நான்கு நாள்கள் தூக்கமில்லாமல் உட்கார்ந்து எழுதினேன், ஒரு வாரத்துக்குள் கிட்டத்தட்ட 140 பக்க அளவில் முழுமையான ஒரு நூலை உருவாக்கிவிட்டோ ம்.

குறுகிய அவகாசத்தில் அவசரமாய் எழுதியதுதான். என்றாலும், நூலைக் கூர்மையாகக் கட்டமைத்து, எந்தத் தகவல் பிழையும் ஏற்பட்டுவிடாமலும், சுவாரஸ்யம் குறைந்துவிடாமலும் ராகவனும், பத்ரியும் கச்சிதமாய் எடிட் செய்து செம்மைப்படுத்தினார்கள்.

நாங்கள் எதிர்பார்த்தபடி நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. மின் ஊடகங்கள் நம் வாழ்வை முழுமையாய் ஆக்கிரமித்திருக்கும் இந்தச் சூழலிலும், அச்சுப் புத்தக வடிவில் தகவல்கள், செய்திகள் தொகுக்கப்படுவதற்கான அவசியம் இன்னும் இருப்பது, மீண்டும் உறுதியாகிறது.

(வீரப்பன் : வாழ்வும், வதமும் - என். சொக்கன் - கிழக்கு பதிப்பகம் வெளியீடு - 136 பக்கங்கள் - ரூ 50/-)

நன்றி: Yahoo! Groups : dokavithai

1 கருத்துகள்:

புத்தகம் வெளியாவதற்கு முன்னர் வெளி அட்டை மாறிவிட்டது. வெளி அட்டை மற்றும் புத்தக விவரங்களுக்கு
http://www.newhorizonmedia.co.in/

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு