செவ்வாய், நவம்பர் 30, 2004

சில பதில்கள் - என். சொக்கன்

1. தங்களின் வலை அனுபவங்கள்

வலையில் அப்பவும், இப்பவும் நான் ரொம்ப ரசிப்பது விவாத மன்றங்களைதான் - ஏனோ, மிகவும் வசதியான மின்னஞ்சல் ,அரட்டையைவிட, இவைதான் என்னை ரொம்பக் கவர்கின்றன. காரணம் சொல்லத் தெரியவில்லை.

அப்படி நான் மிகவும் விரும்பும் / விரும்பிய தளங்கள் - தமிழ்த் திரையிசை விவாதங்களுக்கான டி.எஃப்.எம்.பேஜ் மற்றும் மன்றமையம் - இவற்றில் மன்றமையத்தில் நடைபெறும் விவாதங்களின் தரம் சமீபத்தில் குறைந்துவிட்டது எனக்கு ரொம்பவே வருத்தம். ஆனால் நல்லவேளையாக டிஎஃப்எம் பேஜ் அப்படி இல்லை - தமிழில் எந்தப் புதிய ஆல்பம் வெளிவந்தாலும், அதுபற்றிய விவாதங்களை அடுத்த சில மணி நேரங்களுக்குள் இங்கே படிக்கலாம் - தேர்ந்தெடுத்து வாங்கலாம் - இசை ஞானமுள்ள ரசிகர்களும், என்னைப்போல டண்டனக்கா பார்ட்டிகளும் ஒன்றாகக் கலந்து பழகும் தளம் என்பதால்தானோ என்னவோ, இங்கே எப்போதும் சுவாரஸ்யம் பொங்குகிறது !

மற்றபடி, மெயிலுக்கு ரீடிஃப், இலக்கியத்துக்கு ராயர் க்ளப், அகத்தியர், சந்த வசந்தம், மரத்தடி, அப்புறம் வழக்கமான இலக்கியப் பத்திரிகைகள், கல்கி, விகடன், குமுதம், அப்பாலே, அவ்வப்போது தொட்டுக்கொள்ள தமிழ் சினிமாச் செய்திகள் - இவ்வளவுதான் என்னுடைய தினசரி வலை உலவல் ஃபார்முலா.

2. வலைப்பதிவுகளில் மிகவும் விரும்பிப் படிக்கும் ப்ளாகுகள்

நான் தொடர்ந்து படிக்கும் வலைப்பதிவுகள் என்று பார்த்தால், பாராவின் 'மனத்துக்கண்' (ஒரு சுவாரஸ்யமான மிடில் மேகஸின்போன்ற வலைப்பதிவு இது - ஆனா, இப்போ காணாமபோச்சே ஏன் ?), பத்ரியின் எண்ணங்கள் (பல சமயங்களில் 4 தடவை படித்துப் புரிந்துகொள்ளுமளவு கனமான விஷயங்களை, அக்கறையோடும், கவனத்தோடும் விளக்கிச் சொல்கிறார்), உங்களோட ஈதமிழ் (யாரோ இந்த வலைப்பதிவைக் 'குமுதம்'ன்னு சொன்னாங்கதானே ? அது பாதி தப்பு ;), மீனாக்ஸின் மார்க்கெட்டிங் மற்றும் மேல்கைண்ட் வலைப்பதிவுகள் (இந்த ரெண்டு வலைப்பதிவுகளிலுமே, நல்ல விஷயங்களும், நகைச்சுவையும் கலந்து தருவது அருமையான கலவை !), அருணின் அகரதூரிகை (அழகான நடையில், சுவாரஸ்யமான விஷயங்களைத் தேர்ந்தெடுத்து எழுதுவதால் பிடிக்கும்.)

இந்த வலைப்பதிவுகளோடு ஒப்பிட்டால், வெங்கடேஷ், எஸ். ராமகிருஷ்ணன், நாகூர் ரூமி ஆகியோர் அடிக்கடி எழுதுவதில்லை, என்றாலும், எழுதும்போது மிஸ் செய்துவிடாமல் படிப்பேன் !

இவைதவிர, தமிழ் மணம் தளத்தில் உலவும்போது, அவ்வப்போது கண்ணில்படுகிற நல்ல கட்டுரைகளையெல்லாம் தவறாமல் வாசித்துவிடுவேன்.

3. விரும்பிப் படித்த பதிவுகள்

அப்படித் தவறவிட்டது சத்யராஜ்குமார், சித்ரன் ஆகியோரின் வலைப்பதிவுகளைதான். அப்புறம், மாலனின் சில வலைப்பூக்கள்.

4. படிக்காவிட்டால், ஏன் தற்போது படிப்பதில்லை?

இப்போது அவர்கள் அப்டேட் செய்வதே இல்லை (அப்படிதான் நினைக்கிறேன் !)

5. எப்பொழுது, எப்படி, எதற்காக உங்களுக்கான வலைப்பதிவு அமைக்க விருப்பம்?

எனக்கான வலைப்பதிவு இன்னும் இல்லையே என்று பல நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள் - கூடாது என்றில்லை, வலைப்பதிவுகளின் அதீத சுதந்திரம் எனக்கு ரொம்ப பயமாயிருக்கிறது.

சாதாரணமாகவே, நான் பெரிய சோம்பேறி. என் கழுத்தில் ரெண்டு, மூன்று கத்திகளை வைத்து, லேசாக அழுத்தினால்தான் எழுத ஆரம்பிப்பேன். இல்லையென்றால், சோபாவில் சாய்ந்துகொண்டு டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்பதோ, அமர் சித்ரகதா புரட்டுவதோதான் என் விருப்பங்கள்.

ஆகவே, வலைப் பதிவு என்று ஆரம்பித்துவிட்டு, அதில் எப்போதுவேண்டுமானாலும் எழுதலாம், மாதக்கணக்கில் எழுதாமலும் இருக்கலாம் என்கிற சுதந்திரமெல்லாம் எனக்கு ரொம்ப அதிகம். வாரம் ஒன்று அல்லது, வாரத்துக்கு நாலு அல்லது மாதத்துக்கு ஒன்று எழுதினால்தான் ஆச்சு என்று உறுதியான கெடு வைத்து மிரட்டினால்தான் எனக்குக் கை வளையும் (அல்லது தட்டும் !).

நீங்கள் இந்த பதிலை ஏற்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், 'வாரம் நாலு என்று வைத்துக்கொண்டு எழுதேன், யார் உன்னைத் தடுக்கிறார்கள் ?', என்றுதான் பதில் கேள்வி கேட்பீர்கள்.

ஆனால், நான் முன்பே சொன்னதுபோல், எனக்கு அப்படிப்பட்ட self-management குணமெல்லாம் சுத்தமாகக் கிடையாது. யாரேனும் விடாமல் நச்சரித்துக்கொண்டே இருந்தால்தான் எழுதுவேன்.

இதெல்லாம் சும்மா சாக்கு, உண்மையான உண்மையைச் சொல்வதானால், எனக்கு வேகமாக எழுதிப் பழக்கமே இல்லை. சிறிய கட்டுரைக்குக்கூட ஒரு வாரத்துக்குமேல் எடுத்துக்கொள்வேன். அப்படி நேரமெடுத்து எழுதுவதற்குள், நான் எழுத நினைத்த விஷயம் பழசு கண்ணா பழசு என்றாகிவிடும் !

இப்போதைக்கு, எனக்கு வேகமாக எழுதத் தெரிந்த ஒரே விஷயம் - சிறுகதைகளும், வாழ்க்கை வரலாறுகளும்தான். அதையெல்லாம் வலைப்பதிவில் யாரும் படிப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை !

இவ்வளவும் சொன்னபின், ஒரு கடைசி விஷயம் - நானும் ஒரு வலைப்பதிவு தொடங்கியிருக்கிறேன் - சொ. மணியன் என்ற பெயரில், வெண்பாவில் உலக நடப்பைச் சொல்வதற்காக ஒரு வலைப்பதிவு அது. ஆனால், நான் களமிறங்கிய ஒன்றிரண்டு நாள்களுக்குள், கிருஷ்ண சைதன்யா என்பவர் என்னைவிட அபாரமாக, இதேவிதமான வெண்பாக்களை எழுதிக் குவித்துவிட்டார். அவருடைய வேகத்துக்குமுன் நம்மால் ஆகாது என்று ஜகா வாங்கிவிட்டேன் :)


6. (பாரா சொன்னது போல்) புதிதாக ஒன்பதே ஒன்பது கட்டளைகள் எழுத நினைத்தால் என்ன சொல்வீர்கள்?

ஏன் ஸ்வாமி ? நான் ஏதோ நன்றாக இருப்பது பிடிக்கவில்லையா ? :)

5 கருத்துகள்:

Thanks Chokkan for your nice comments on my blog. Balaji...Thanks to you too.

மேல்Kind-ல் என்னோடு க்ருபா, ஷங்கர் ஆகியோரும் உண்டு. மற்றும் விருந்தினர் பதிவு அளிக்கும் அனைவருக்கும் மற்றும் ஊக்கப்படுத்தும் எல்லோருக்கும் பாராட்டில் க்ரெடிட் உண்டு.

///சொ. மணியன் என்ற பெயரில், வெண்பாவில் உலக நடப்பைச் சொல்வதற்காக ஒரு வலைப்பதிவு அது. ஆனால், நான் களமிறங்கிய ஒன்றிரண்டு நாள்களுக்குள், கிருஷ்ண சைதன்யா என்பவர் என்னைவிட அபாரமாக, இதேவிதமான வெண்பாக்களை எழுதிக் குவித்துவிட்டார். அவருடைய வேகத்துக்குமுன் நம்மால் ஆகாது என்று ஜகா வாங்கிவிட்டேன்///

சொ. மணியன்

உங்கள் வெண்பாவை நானும் வாசித்துப் பார்த்தேன்.
நன்றாக இருந்தது. யார் எழுதினால் என்ன? நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

சோம்பேறியா? செம காமெடிதான்!

ம்ஹீம்....பிளாக்ஸ் எழுதிக் குவிப்பவர் கேள்வி கேட்குறார்.. புக் ஏழுதிக் குவிப்பவர் பதில் சொல்றார்?!

மேல்கைண்டில் க்ருபாவும் ஷங்கரும் ரொம்பவே அடக்கி வாசிக்கறாங்களே... சீக்கிரமே கட்சி மாறிடப் போறாங்க மீனாக்ஸ் ;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு