ஞாயிறு, நவம்பர் 14, 2004

அராஃபத்தும் புஷ்ஷும்

பத்ரியின் பதிவுக்கு என்னுடைய நன்றிகள்.

என்னுடைய தமிழோவியம் கட்டுரை, யாஸர் அராராஃபத் என்னும் அரசியல்வாதியைக் குறித்தவை. பாலஸ்தீன மக்களையும் இஸ்ரேலியத் தலைமையையும் குறித்து நிறைய எழுதலாம். அராராஃபத்தை காந்தியின் நெஞ்சுரத்தோடு ஒப்பிட முடியாது. காந்திக்கு தேசத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு ஒத்துக் கொள்ளும் மனப்பான்மை இருந்தது. அகதிகளாக சிலரை பாகிஸ்தானுக்கும், சிலரை இந்தியாவுக்கும் அழைத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தது. அந்த கஷ்டமான முடிவை மக்களிடன் எடுத்துச் சொல்லி வழி நடத்தினார்.

யாரையும் இன்னொருவரோடு ஒப்பிடுவது எனக்கு உவப்பில்லாத செயல். அடுத்த வீட்டுக் குழந்தையையும் என்னுடைய குழந்தையையும் சமனிட்டு, 'என் குழந்தைக்கு கராத்தே தெரியும்' என்றும், உடனே நான் 'என் குழந்தைக்கு குங்-பூ' என்றும் சொல்லி சமாதானம் அடைவது போல் எனக்குப் படுகிறது. இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி புஷ்தான் கொள்கைகளிலும், உடும்புப்பிடிநிலைகளிலும், மக்கள் ஆதரவுகளிலும் அராராஃபத்திற்கு மிக அருகே நிற்கிறார். புஷ்ஷை எதிர்ப்பவர்கள் அதே நிலைப்பாட்டை யாஸர் அராராஃபத் மேலும் பாய்ச்சலாம். போர் தொடுப்பதன் மூலமே சுதந்திரத்தை நிலைநிறுத்தமுடியும் என்பதை இருவரும் நம்புகிறார்கள். பணத்தை திசைதிருப்புவது, கடவுள் நம்பிக்கை மூலம் அரசியல், உட்கட்சி கிளர்ச்சிகளை நசுக்குதல் என்று தொடரலாம்.

பி.எல்.ஓ.வின் லெபனான் தாக்குதல்களை குறித்து எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை. ஜனவரி 1976-இல் டமோர் (Damour) பகுதிகளில் நடந்த சூறையாடல்களும், அவற்றின் தொடர்ச்சியாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளானதும் இணையத்தில் அலசப்படுகிறது. சிரியாவுடன் ஒத்துழைத்து பிற நாடுகளில் கலகம் விளைவிக்கவும் அராராஃபத் அஞ்சவில்லை.

பெஸ்லானில் நடந்த குழந்தைகள் பலி எனக்கு முதலில் அச்சத்தையும், தொடர்ந்து வெறுப்பையும் கொடுக்கிறது. ஆனால் அதற்கு முன்னுதாரணமாக 1974-இன் மே மாதத்தில் இருபத்தியோரு குழந்தைகள் இறந்திருக்கின்றனர். வட இஸ்ரேலில் இருக்கும் நகரம் மாலோ-விற்குள் (Ma'alot) மூன்று பி.எல்.ஓ. தீவிரவாதிகள் நுழைந்திருக்கிறார்கள். வழியில் இருந்த ஒரு குடும்பத்தினைக் கொன்றுவிட்டு, பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்தை பிணைக்கைதியாகி இருக்கிறார்கள். வழக்கமான கோரிக்கைதான். நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் இருக்கும் அவர்களின் கூட்டாளிகள் விடுவிக்கப்பட வேண்டும். ரஷியாவைப் போல் இஸ்ரேலும் விட்டுக் கொடுக்கவில்லை. இஸ்ரேலியப் அதிரடிப்படை நுழைந்தவுடன் குழந்தைகளின் மேல் கைகுண்டுகளும், துப்பாக்கிகளும் செலுத்தப்பட 25 பேர் மரணமடைந்துள்ளனர். பி.எல்.ஓ.வின் தலைவர் அரா·பத்தை நினைவு கூர்கிறோம். இறக்கடிக்கப்பட்ட குழந்தைகள் பெயர்களும் இணையத்தில் கிடைக்கிறது.
------

இஸ்ரேலின் பங்குக்கு அவர்களும் பல்லாயிரக்கணக்கில் அவர்களின் புகழ்பெற்ற சகுனி வேலைகளை செய்திருப்பார்கள். இஸ்ரேலின் பிரதம மந்திரியாக இரண்டு தீவிரவாதிகள் இருந்திருக்கிறார்கள்.

* மெனேச்சம் பேகின் (Menachem Begin) கிங் டேவிட் ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்பில் 92 பேர்களைக் கொன்றிருக்கிறார்.

* டேர் யாஸினில் (Deir Yassin) யிட்ஸாக் ஷமீரின் (Yitzhak Shamir) ஸ்டேர்ன் அடியாட்கள் (Stern Gang) 260 பேர்களை அழித்திருக்கிறார்கள்.

ஏரியல் ஷரோன் (Ariel Sharon) போர்க்கால கிரிமினல். ஷரோன் இறக்கும்போது அவருக்கு நினைவாஞ்சலி எழுதுபவர்கள் சப்ரா (Sabra), ஷட்டிலா (Shatila) அகதிகள் முகாமில் கொன்று குவிக்கப்பட்ட இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களைக் குறித்தும் எழுதுவார்கள்.

திட்டமிட்ட முறையில் தாக்குபவர்களுக்கு வசதியாக இரவு விளக்குகளை அமைத்துக் கொடுத்தது, பன்னாட்டுத் தொண்டு நிறுவன ஆர்வலர்களை அப்புறப்படுத்தியது போன்றவற்றையும் விவரிப்பார்கள். தானே பார்த்து பார்த்து நிகழ்த்திய க்யுப்யா (Qibya) அட்டூழியங்களையும் கொல்லப்பட்ட அறுபது மக்களையும் குறிப்பிடுவார்கள்.

------

இருபக்கத்தில் இருந்தும் இன்னும் நிறைய அடுக்கலாம். அராஃபத்தை மட்டுமே ஆதரித்த இந்திய ஊடகங்கள்தான் எனக்கு வருத்தமளித்தது. ஒருவரின் மறைவுக்குப் பிறகு அவதூறு சொல்லவேண்டாம். ஆனால், அவரின் தவறுகளையும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய தருணங்களில் நடக்கும் பிழற்வுகளையும் பத்திரிகைகள் சுட்டிகாட்டலாம்.

மாலதி மைத்ரியின் வரிகள் தோன்றுகிறது.

'ஏதேனும் ஒரு திசையில்
குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம்
என் உடலின் ஏதோவொரு பாகம்
ஊனமடைகிறது'

(நீரின்றி அமையாது உலகு - பக்கம் 30)

1 கருத்துகள்:

இதை நீ முன்னாடியே எழுதவேண்டியதுதானே? முன்னர் நீ எழுதியது ஒரு சார்பாக அல்லவா இருந்தது?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு