திங்கள், நவம்பர் 15, 2004

எனது வெண்பாப் புராணம் - என். சொக்கன்

© தினம் ஒரு கவிதை

Eraa Murugan - Thanks: Kizhakkuஎன்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியான 'ஒரு பச்சை பார்க்கர் பேனா'வின் முன்னுரையில், இரா. முருகன் இப்படி எழுதினார் :

'என். சொக்கன், புதுக்கவிதை எழுத ஆரம்பித்து - எல்லோரும் இப்படித்தான் தொடங்குகிறோம் - சிறுகதைக்கு வந்தவர்'

இந்த வாக்கியம் ஓரளவு உண்மைதான். என்றாலும், நான் எழுத ஆரம்பித்தது புதுக்கவிதை அல்ல. மரபுக் கவிதைதான்.

பத்தாம் வகுப்பில் எங்களுக்கு இலக்கணப் பாடம் நடத்திய ஆசிரியர் பெயர் திரு. பெ. செ. சுந்தரம். அவர்தான் வெண்பா இலக்கணத்தைப் புரியும்படி சொல்லித்தந்து, கூடவே எங்களுக்கு ஒரு பயிற்சியும் கொடுத்தார்.

Thanks: www.kalanjiyam.comஅதாகப்பட்டது, ஏதாவது ஒரு திருக்குறள் புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொள்வது. புத்தக கிரிக்கெட் விளையாடுவதுபோல், அதில் சடாரென்று ஒரு பக்கத்தைப் பிரித்து, அங்கே தட்டுப்படுகிற குறளை, ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்வது.

பிறகு, அந்தக் குறளை அக்குவேறு ணிவேறாய்ப் பிரித்து, நேர் - நேர் தேமா, நிரை - நேர் புளிமா என்றெல்லாம் பட்டியலிடவேண்டும்.

இப்போதுதான், முக்கியமான கடைசிக் கட்டம். நாங்கள் தேர்ந்தெடுத்த அந்தத் திருக்குறளில், அவர் சொல்லிக்கொடுத்த வெண்பா இலக்கணம் சரியாக வருகிறதா என்று சோதிக்கவேண்டும். அதாவது, வெண்பா இலக்கணப்படி எங்கேனும் தளை தட்டுகிறதா என்று பார்க்கவேண்டும்.

ஒருவேளை தளை தட்டினால், நேராக அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு, ஆசிரியரின் அறைக்கு வரவேண்டும். தளை தட்டாமல், எல்லாம் சரியாக இருக்குமானால், மீண்டும் திருக்குறள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, வேறொரு பக்கத்தைப் பிரித்து, முதலில் செய்த எல்லாவற்றையும் திரும்பச் செய்யவேண்டும்.

இப்படியாக, ஏழெட்டுக் குறள்களைப் பிரித்து மேய்ந்தபிறகு, அவர் ஏன் இந்தப் பயிற்சியை எங்களுக்குத் தந்திருக்கிறார் என்று புரிந்துவிட்டது. பல மாதங்கள் செலவழித்து, 1330 குறள்களையும் அலசி ஆராய்ந்தால்கூட, எங்கேயும் தளை தட்டப்போவதில்லை. ஆனால், இப்படிப் பிரித்து ஆராய்கிற கலையால், வெண்பா இலக்கணம் எங்களுக்குப் பளிச்சென்று புரியும்.

சிரியர் பெ. செ. சுந்தரத்துக்கு நன்றி. அநேகமாய், அவருடைய வகுப்பில் படித்த எல்லோரும், வெண்பாப் பித்து பிடித்து அலைந்தோம் என்பதுதான் உண்மை. குறிப்பாக, நானும், என்னுடைய சிநேகிதன் கார்த்திகேயனும் இணைந்து, சொந்தமாகக் குறள் வெண்பாக்களெல்லாம் எழுதத் தொடங்கிவிட்டோம்.

thirukural.tamilpower.comஅப்போது எழுதிய வெண்பாக்களெல்லாம் இப்போது எங்கே தொலைந்துவிட்டது என்று தெரியவில்லை. னால், வெண்பா இலக்கணம்மட்டும், ஒரு வசீகரமான நினைவாக எனக்குள் ஆழமாய்ப் பதிந்துவிட்டது.

பின்னர், பல ஆண்டுகள்கழித்து, இணையத்தில் உலவத் தொடங்கியபின், மன்ற மையம் என்ற தளத்தில், 'வெண்பா வடிக்கலாம் வா', என்ற சுவாரஸ்யமான விவாதத்தில் கலந்துகொண்டேன்.

வகைவகையாய், சுவைசுவையாய் அங்குள்ளவர்கள் எழுதித் தள்ளியிருந்த அழகு வெண்பாக்களைப் பார்த்தபிறகுதான், மீண்டும் வெண்பா எழுதவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது.

ஆனால், மன்ற மையத்தில் தொடர்ந்து எழுதிவந்தவர்கள் எல்லோரும், அபாரமான தமிழாற்றல் கொண்டவர்களாய் இருந்தார்கள். அவர்களுக்கிடையே, என்னுடைய பொம்மை வெண்பாக்கள் எடுபடுமா என்ற பயத்தில், ஒரு வாசகனாகவே தொடர்ந்துகொண்டிருந்தேன்.

அப்போது, என்னுடைய சிறுகதைகள் ஐந்தாறு, ஒரே வாரத்தில், வெவ்வேறு பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்டுத் திரும்பிவந்தன. மிகவும் அவமானகரமான அந்த சோகத்தை, யாரிடமாவது பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினேன். ஆகவே, அதை ஒரு வெண்பா வடிவில் எழுதி, மன்ற மையத்தில் இட்டேன்.

சற்றே அவசரத்துடனும், உணர்ச்சிமயமாகவும் எழுதிய அந்த அரைகுறை வெண்பா, இப்போதும் பளிச்சென்று நினைவிருக்கிறது :

திரும்பி வருகிற ஒவ்வொரு அஞ்சலும்
தீயாய்ச் சுடுகுது என்னை - எழுத்தை
விரும்பியே தொட்டதாய் ஞாபகம். ஏன்இந்த
வேதனை நாள்கள் எனக்கு ?


இந்தப் பாவில், வெண்பா இலக்கணம் சரியாகவே பயின்றுவருகிறது. என்றாலும், இதில் சில அசட்டுத்தனமான பிழைகள் செய்திருந்தேன். (உதாரணம் : 'அஞ்சல்' என்னும் வார்த்தை, உயிரெழுத்தில் தொடங்குவதால், 'ஒவ்வொரு அஞ்சல்' என்பது சரியில்லை. 'ஒவ்வோர் அஞ்சல்' என்பதுதான் சரி - னால், 'ஒவ்வோர் அஞ்சல்' என்று எழுதும்போது, தளை தட்டுகிறது !)

தவிர, இந்தப் பாடலின் எதுகையும், மோனையும் சரியாக அமையவில்லை. இதுபோன்ற தவறுகளையெல்லாம் மன்ற மையத்திலிருந்த அறிஞர்கள் பொறுமையாய் எடுத்துச்சொல்லி திருத்தினார்கள்.

மீண்டும் பத்தாங்கிளாஸ் இலக்கண வகுப்பில் அமர்ந்திருப்பதுபோல்தான் உணர்ந்தேன் நான். மறுபடி உற்சாகமாய் வெண்பாவைக் கற்றுக்கொண்டு, என் தவறுகளைத் திருத்திக்கொண்டேன்.

அதன்பிறகு, அவ்வப்போது விளையாட்டுத்தனமாய் வெண்பாக்கள் எழுதிப் பார்ப்பதுண்டு. 'மரபுப் பிரியர்' நண்பர் சின்னக் கண்ணன் எழுதிய பல சிறுகதைகளுக்கு, வெண்பாவிலேயே விமர்சனம் எழுதி விளையாடியிருக்கிறோம்.

எல்லாம் சரி, இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் ?

விஷயம் இருக்கிறது. இங்கே இடம் போதவில்லை. அடுத்த வாரம் பேசலாம்.

நன்றி: Yahoo! Groups : dokavithai

1 கருத்துகள்:

நீங்கள் மரபுக் கவிதை எழுதுவது கண்டு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அறிந்திருக்காவிடில், விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியமாகும். எவர் வேண்டுமானாலும் பங்களிக்கலாம். கீழ்காணும் தளங்களுக்கு சென்று தங்கள் பங்களிப்புக்களை பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE

2. http://en.wikipedia.org/wiki/Venpa

முடிந்தால் வெண்பா இலக்கணம் தொடர்புடைய எங்கள் கட்டுரையைப் படிக்கவும். பிழையிருந்தால் மன்னிக்கவும்.

1. http://citeseer.ist.psu.edu/balasundararaman03context.html

2. http://www.infitt.org/ti2003/papers/19_raman.pdf

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு