ஞாயிறு, நவம்பர் 28, 2004

நன்றி வழங்கல்

நாலு நாள் பயணம். கால் அலுக்க சுற்றினாலும் திகட்டாத நியு யார்க் நகரமும் அது சார்ந்த ஜெர்ஸி தமிழர் பிரதேசங்களும். கல்லூரி நண்பர்கள். புத்தம்புது இணையத் தோழர்கள். புதுப்பிக்கப்பட்ட அமெரிக்கத் தொடர்புகள். இன்பமாக கழிந்த நான்கு நாட்கள்.

நியு யார்க் ஃப்ளஷிங் கோவில் மனதுக்கு மிகவும் முக்கியமானது. வேலை இன்னும் கிடைக்காத 'பென்ச்' தேய்த்த காலத்தில் ஒரு விஸிட் அடித்தவுடனேயே, இண்டர்வ்யூ முடிந்து, வேலையும் வாங்கிக் கொடுத்த பெரிய பிள்ளையார். திருப்பதிக்கு போகும் வழியில் திருத்தணி இருப்பதால், முருகருக்கு அரோகரா போல், நியு யார்க் போகும் வழியில் ஃபளஷிங் விநயகருக்கும் பரிவாரங்களுக்கும் சல்யூட் எப்போதும் உண்டு. இந்த முறை மேசீஸ் தேங்க்ஸ் கிவிங் பரேட் பார்க்க செல்வதால் அவரை சாய்ஸில் விட்டு விட்டோம்.

போகும் வழி கனெக்டிக்கட்டில் புதிதாய் முளைத்திருக்கும் சத்யநாராயணாவை தரிசித்தோம். எளிமையான கோவில். 'ஹரே க்ருஷ்ணா' போல் ஹிப்பித் தலை வட இந்திய ஸ்டைல் ராமர், கிருஷ்ணர். ராதைக்கு கால் வரை நீளும் தலைமுடி. ஜெயின மதத்துத் துறவிகள் 'ஏன் பப்பிஷேம் ஆக இருக்காங்க?' என்னும் கேள்விக்கு நீட்டிமுழக்கினேன். அடுத்து துர்கை கையில் பளபளக்கும் விருமாண்டி வீச்சருவாவும் பூசி மெழுக வைத்தது.

கோவிலில் பிடித்த விஷயம், சூரிய ஒளி எப்பொழுதும் உள்ளே விழும் அமைப்பு. இயற்கை ஒளியை அதிகம் உபயோகப் படுத்திக் கொண்டது ஒரு வித சாந்நித்தியத்தைக் கொடுத்தது. நவக்கிரங்களின் படு திருத்தமாக ஒன்பது பேரும் காட்சியளித்தார்கள். உருவம், வாகனம், அணிகலன்கள், ஆயுதங்கள், அனைத்தும் உருவங்கள் கொண்டிருந்தது.

அங்கிருந்து கிளம்பி கனெக்டிகட் மிடில்டவுன் உடுப்பியில் சாப்பிட்டவுடன் ஸியஸ்டா மயங்க நினைத்தாலும், கடமை அழைப்பதால் டிரைவர் வேலையைத் தொடர்ந்தேன். நாங்கள் செல்வதற்குள் நியு யார்க் நகர அணிவகுப்பு முடிந்து விடும் என்பதால், நேராக கல்லூரி நண்பனின் வீட்டிற்கு வண்டி செலுத்தினேன். எல்லாரும் உறவோடு வான்கோழி உண்பதற்காக மூட்டை முடிச்சுகளுடன் சென்று கொண்டிருந்தார்கள். எள் போட்டால் எண்ணெயாகும் அளவு ட்ராஃபிக்.

நண்பனின் வீட்டில் உண்டு கதைத்தவுடன் அனைவரையும் மகிழ்விக்க 'How to lose a guy in 10 days' திரையிட்டோம். மனைவிகள் எவ்வாறு எங்களை இயல்பாக தர்மசங்கடத்துக்குள்ளாக்குகிறார்கள் என்பதை சிரிப்போடு சொன்ன படம். தமிழில் சூர்யாவும் ரீமா சென்னும் நடித்தால் அமோகமாக ஹிட் ஆகும்.

அடுத்த நாள் காலையிலேயே நகரமையத்துக்குக் கிளம்பத் திட்டமிட்டிருந்தோம். குழந்தைகளுடன் கிளம்புவது தனிக்கலை. அவர்கள் காலணி, கோட் எல்லாம் அணிவிப்பது முதல் கட்டம். உருட்டுகட்டையாகத் தூக்கிச் சென்று கார் இருக்கையில் அமர்த்தி பெல்ட் போடுவது அடுத்த நிலை. போட்ட பின் வண்டி ஓட ஆரம்பித்த அறுபத்தி ஏழாவது விநாடியில் 'potty', 'மூச்சா' என்று விதவிதமாக குரல் கொடுப்பதை இருபத்தி இரண்டு நிமிடங்கள் சமாளிப்பது சிறப்பு பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே முடிவது மோன நிலை.

இவற்றையெல்லாம் திடீரென்று ஒரு நாள் செய்ய நேருவது விபரீத நிலை.

அன்று அம்மாக்கள் நியு யார்க் நகர மையத்தில் ஷாப்பிங் செய்ய, நாங்கள் வாண்டுக்களை சமாளித்தோம். உணவு கொடுப்பது, தூக்கம் செய்வது போன்றவற்றை ஆண் மகன் செய்யும் விதத்தை ஆடம் சாண்ட்லர் 'Big Daddy'யில் சொல்லிக் கொடுத்த விதம் செய்து முடித்தேன். நடுவில் அனாதரவாக மகளிர் காலணி இரண்டு ஜதை நிறைந்த பையைப் பார்த்து பதைபதைத்தோம். காவலரிடன் சென்று முறையிட்டால், எங்களை சந்தேகப் பார்வை பார்த்தபடி, ஷூ தங்களுக்குப் பொருந்துமா, கேர்ள்ஃப்ரெண்ட்களுக்குப் பொருந்துமா, என்று பொருத்தம் பார்த்து எடுத்துக் கொண்டார்கள்.

மனைவிகள் பத்து டாலருக்கு குளிர்கால ஆடைகள் கிடைக்கும் இடங்களுக்கும், பத்து மடங்குக்கு அதிகம் விலைக்கு கைப்பை விற்கும் இடங்களுக்கும் சென்று மிதிபட்டு, பிழியப்பட்டு திரும்பினார்கள். ஆறு வயதுக்குக் கீழ் வயதிருந்தால் பல இடங்களுக்கு செல்ல முடியாது. ஐ.நா. சபை பர்வையிடுதல், என்.பி.சி. தொலைக்காட்சி ஸ்டூடியோக்களைப் பார்வையிடுதலும் இதில் அடக்கம். நாங்கள் அடக்கமாக ஒரு நாளாவது முழுக்க முழுக்கக் குழந்தையைக் கவனிக்கிறோம் என முன்வந்தோம். குடும்ப உறுப்பினர்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்க, சோர்வுடன் ஆண்கள் வீடு திரும்பியது அதிசயம்.

அடுத்த நாள் தமிழோவியம் கணேஷ் சந்திரா, எடிட்டர் மீனாக்ஷியின் சந்திப்பு. சிரிக்கும் புத்தர்களும் குடைப் பிள்ளையார்களும் பீங்கான் பொம்மைகளும் நிறைந்த வரவேற்பறை. காதிகிராஃப்ட் ஷோரூம் போன்ற ரம்மியமான தேர்வுகள் கொண்ட அலங்கரிப்புகள். அவற்றில் ரசித்ததையெல்லாம் என் பெண் சுட்டிக்காட்ட 'உனக்கே உனக்காக எடுத்துக் கொள்' என்று அன்பு மழை.

தமிழோவியத்தில் எழுதிய சமையல் குறிப்புகளை எல்லாம் செய்து காட்டி அசத்தியிருந்தார். மூக்குப் பிடிக்க சாப்பிட்டது போக, கண்ணையும் பிடிக்குமளவு பாயசத்துடன் உணவு. வழக்கம் போல் வலைப்பதிவுகளின் சூடான நிகழ்வுகள், முகமூடி அலசல் கொண்ட இலக்கிய உரையாடல்.

நியு ஜெர்ஸியில் எம்.எல்.ஏ.வுக்கு நின்றால் கணேஷ் சந்திரா ஜெயித்துவிடுவார். ஓக் ட்ரீ ரோடில் சிடிக்களும் காராசேவுக்களும் கதகளி பொம்மைகளும் மேய்ந்த கடைகளில் எல்லாம் விதம் விதமாக கணேஷ் சந்திராவை நலம் விசாரித்தார்கள். அவர் பேரைச் சொன்னால், பாதிக் கடைகளில் தள்ளுபடி விற்பனை கிடைக்கும்.

பாஸ்டன் டு நியு யார்க் நான்கு மணி நேரப் பயணம். திரும்பி வரும்போது அனைத்து கார்களும் விரும்பும் I-95 நெடுஞ்சாலைத் தொடாவிட்டாலும் ஏழு மணி நேரம் ஆகிப்போனது. அடுத்த முறையாவது இந்த முறை சந்திக்க இயலாத நட்புகளைப் பார்க்க வேண்டும்.

திரும்பி வந்து யாஹுவைத் திறந்தால் அதிகம் தனி மடல்கள் இல்லை. முன்பெல்லாம், இவ்வாறு நான்கு நாட்கள் இணையத் தொடர்புத் துண்டித்து வாழ்ந்தால், குறைந்தது ஐம்பது நண்பர்களிடமிருந்து, பதிலெழுத வேண்டிய மின்மடல்கள் நிறைந்திருக்கும். வலையில் பதிவதாலோ என்னவோ இது போன்ற நண்பர்களின் ஊடாட்டம் குறைந்திருக்கிறது. இந்தப் புது வருடம் புதிய சபதம் ஏதாவது எடுக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு நட்பையாவது தொலைபேசி மூலம் புதுப்பித்துக் கொள்வது என்று ஏதாவது எடுத்து பின்பற்றுவேன்.

மீதமுள்ள மின்மடல்களைக் களைந்ததில் தி ஹிந்துவில் என் வலைப்பதிவு பற்றிய குறிப்பு இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தந்தது.

நன்றி திலோத்தமா.

நண்பரின் இல்லத்தில் பார்த்த 'சிற்றகல்' புத்தகம் வாங்க வேண்டிய பட்டியலில் சேர்த்திருக்கிறேன். நூற்றியேழு கவிஞர்கள். 211 கவிதைகள். பூமா ஈஸ்வரமூர்த்தியும் லதா ராமகிருஷ்ணனும் தொகுப்பாளர்கள். மரத்தடியில் எஸ்.பாபு வழங்குவது போல் சிற்றிதழ் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். குழு மனப்பான்மை இல்லாமல் எல்லா ரகங்களும் கொண்டிருக்கிறது.

"இன்று நவீன தமிழ்க் கவிதையின் பல்வேறு தொனிகள், போக்குகள், கருப் பொருட்கள், பாணிகள் முதலியவை குறித்த அறிமுகத்தையும் பரிச்சயத்தையும், அதன் வழி அவற்றிற்கான ரசனையையும் பரவலாக்க பல கவிஞர்களை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு அவசியம்" என்கிறார் லதா ராமகிருஷ்ணன்.

தினம் ஒரு கவிதை, தினம் ஒரு சொல் போல் தினம் ஒரு கவர்ந்த பதிவை (blog post) யாராவது கொடுக்கலாம். அந்த வார நட்சத்திரமாகவோ, குறிஞ்சி மலர் போல் பதிபவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. விருப்பம் கொண்ட அனைவருமே, தங்கள் வலைப்பதிவின் ஓரத்தில் தங்களைக் கவர்ந்த அன்றைய பதிவை இடலாம்.

இன்று தமிழ்வலையை நுனிப்புல்லியதில் அமெரிக்காவில் வாழும் மனைவிகளின் கதி என்னைக் கவர்ந்தது. நிறைய எழுதவேண்டிய, பேசப்படவேண்டிய சமாச்சாரம்.

குட்நைட் சொல்லி உறங்கச் செல்லுமுன் இந்த வார நட்சத்திரமாக்கியதற்கு என்னுடைய நன்றி. மீண்டும் உங்களை வணங்கி வலைப்பதிவதில் மகிழ்கிறேன். இந்த வாரம் முழு ஐந்து நாட்களும் வேலை. மூன்று வார வேலை நாட்கள் கொண்ட போன வாரத்தில் இருந்து நிறைய வித்தியாசம். பளுவைத் திணிக்கும் வாரம். இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்.

என்னைக் குறித்த அறி(மறு)முகம்
என்னுடைய செய்திக் கோவை (ஆங்கிலம்)

5 கருத்துகள்:

வணக்கம் வருக,வருக.

ஈழநாதன் :) :D

I hope you didn't follow Adam Sandler's way of helping the boy to pee :). You brought back my newyork memories in this post.

Have a nice week.
Raj

பாபா,
வாழ்த்துக்கள், 'தி இந்து'வில் பெயர் வந்ததற்கு. என்ன 4 நாட்கள் நியூ ஜெர்சி யில் ஜல்சாவா: ;-)

நன்றி ராஜ்

கிறிஸ்துமசுக்கு ஒத்திகை பார்த்து வைத்துக் கொண்டேன் கார்த்திக் ;;)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு