நிலமெல்லாம் ரத்தம் 2,3,4
பா. ராகவன்
ரிப்பேர்ட்டர் தொடரில் இருந்து சில பகுதிகள்
இரண்டு
ஆபிரஹாம் பெரியவருக்கு தொண்ணூற்றொன்பது வயது. அவரது மகனுக்கு பன்னிரண்டு வயது. முதல் மனைவிக்கு எண்பத்தொன்பது வயது. இரண்டாவது மனைவியின் வயது அப்போது என்ன என்று சரியாகத் தெரியவில்லை. இத்தனை தள்ளாத காலத்தில் அவரது கனவிலோ, நினைவிலோ ஒருநாள் கடவுள் வந்து பேசினார்.
"இதோ பார். உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போவது உறுதி. அதுவும் இத்தனை நாளாகக் குழந்தை இல்லாத வருத்தத்தை மட்டுமே கருவாகச் சுமந்துகொண்டிருந்த உன் முதல் மனைவி மூலம் அது நடக்கப்போகிறது" என்று ஒரு குரல் கேட்டது.
தம் முதல் மனைவி இறந்த பிறகு வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். அவள் பெயர் கேதுரா அவளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன.
அவருடைய முதல் மனைவியின் பெயர் சாரா. சாராவிடம் வேலைக்காரியாக (அடிமையாக) இருந்த பெண் ஆகார். அவள் எகிப்து தேசத்தைச் சேர்ந்தவள். அவளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் இஸ்மயீல். சாராளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் ஈஸாக்.
ஆபிரஹாமால் வீட்டைவிட்டு அனுப்பப்பட்ட ஆகாரின் மகனான இஸ்மயீலின் வம்சத்தவர்கள்தான் அரேபியர்கள். சாராவுக்குப் பிறந்த ஈஸாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள். (இந்த வகையில் யூதர்களைக் காட்டிலும் அரேபியர்கள் பன்னிரண்டு வயது மூத்தவர்கள் என்றாகிறது.)
ஈஸாக் பிறந்ததை முன்னிட்டுத்தான் இஸ்மயீல் வீட்டைவிட்டு விரட்டப்பட்டான். இது நான்காயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்ததாக யூதர்களின் வேதமான ‘தோரா' சொல்கிறது.
யூதகுலம் அழியாமல் தடுக்க, தமக்கென ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முழுமூச்சுடன் அவர்கள் பாடுபடத் தொடங்கியபோது, தமது அடையாளங்களை வரிசைப்படுத்த அவர்களுக்கு ஹீப்ரு மிக முக்கியத் தேவை என்று தோன்றியது. 1880_ஆம் ஆண்டு யூத இனத்துப் பண்டிதர்கள் கூடி, ஹீப்ருவில் எழுதப்பட்ட பழைய பிரதிகளைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து ஆராய்ச்சிகள் செய்யத் தொடங்கினார்கள். எப்படியாவது பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் என்கிற தேசத்தை ஸ்தாபித்தே தீருவது என்று முடிவு செய்ததும், கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதியில் ஹீப்ரு மொழி பள்ளிக்கூடங்களைத் திறந்தார்கள். 1913_ஆம் வருடம் பாலஸ்தீனிலுள்ள பள்ளிகளில் ஹீப்ருவே போதனாமொழி என்கிற அளவுக்கு அதன் தாக்கம் மிகுந்திருந்தது. 1948_ல் இஸ்ரேல் சுதந்திரம் பெற்றதும், ஹீப்ரு அதன் தேசிய மொழியாகவே ஆகிப்போனது.
மூன்று
சிரியா அப்போது ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அடைக்கலம் கோரி வந்தவரை அரவணைத்து, சிரியாவின் ஒரு சிறு மாகாணத்துக்கு அவரை கவர்னராக நியமித்து கௌரவித்துவிட்டார்கள். அவருக்கு ஒரு கனவு இருந்தது. எப்படியாவது ஜுதேயாவின் (இஸ்ரேலின் அன்றைய பெயர்) மன்னனாக தான் ஆகிவிடவேண்டும். அதற்கு முதலில் ஹாஸ்மோனியர்களின் ஆட்சியை ஒழிக்கவேண்டும். அதற்கு ரோமானியர்களின் உதவி வேண்டும். தளபதி மனம் வைத்தால் காரியம் நடக்கும்.
ஒரு சரியான சர்வாதிகாரியின் மனோபாவம் அந்த கவர்னருக்கு இருந்தது. நினைத்ததைச் செயல்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தார். பொறுமையாக, தருணத்துக்குக் காத்திருந்து மார்க் ஆண்டனியிடம் தன் விருப்பத்தைச் சொன்னார். நண்பர் என்று ஆகிவிட்டபடியால் அவரும் கவர்னரின் விருப்பத்துக்குத் தன் சம்மதத்தைத் தெரிவித்து ஒத்துழைப்பதாக வாக்களித்தார். கி.மு. 37_ம் ஆண்டிலிருந்து தொடங்கி அடுத்த முப்பத்து மூன்று வருடங்கள், தன் மரணம் வரை ஜுதேயா எனப்பட்ட இஸ்ரேலை ஆண்ட அவரது பெயர் ஹெரோத்.
சகிக்கமுடியாத ஆட்சி என்று வருணிக்கப்பட்டாலும் ஹெரோத் ஒரு தீவிர யூதர் என்பதால், தாம் பதவிக்கு வந்ததுமுதல் யூதர்களுக்கான பாதுகாப்பு என்கிற பெயரில் நிறைய கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் கொண்டுவந்தார். அவர் செய்தவற்றுள் உருப்படியான பணி என்றால், பாலைவனமாக இருந்த அன்றைய இஸ்ரேலில், நிலமற்ற அத்தனைபேருக்கும் ஒரு துண்டு நிலமாவது கிடைக்கும்படிச் செய்து விவசாயத்தை ஊக்குவித்தது. அது ஓர் அற்புதம்தான்.
கிருஷ்ணன் பிறந்தபோது, அவனைக் கொல்லுவதற்கு கம்சன் மேற்கொண்ட முயற்சிகளை எப்படியெல்லாம் ஹிந்துமதக் கதைகள் விவரிக்கின்றனவோ, அதற்குச் சற்றும் சளைக்காத கதைகள் இயேசுவின் பிறப்பு தொடர்பாகவும் உண்டு.
அங்கே கம்சனின் பெயர் ஹெரோத். இரண்டாவது கோயிலைக் கட்டிய அதே யூதமன்னன் ஹெரோத்.
நான்கு
யூத குலத்தின் அடையாளமே ‘தேவதூதனுக்காகக் காத்திருக்கும் குலம்’ என்பதுதான்.
இயேசுவைத் தனித்துக்காட்டிய முதல் விஷயம், அவர் தம்மை ‘மனிதகுமாரன்' (பைபிளில் மனுஷகுமாரன் என்று வரும்.) என்று குறிப்பிட்டது. இது மிக முக்கியமான குறிப்பு. ஏனெனில் யூதகுலம் அப்படியருவனைத்தான் காலம் காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. யூதர்களின் வேதத்தில், மனிதகுமாரன் எப்படி இருப்பான் என்பது பற்றி ஒரு குறிப்பு உண்டு. இறுதித் தீர்ப்பு நாளில் நீதி வழங்கும் நீதிபதியைப்போல் அவன் இருப்பான் என்று தான் கனவில் கண்டதாக யூதர்களின் வேதத்தில் டேனியல் என்கிற தீர்க்கதரிசி எழுதிய பகுதிகளில் வருகிறது.
டேனியலின் கனவில் கிடைத்த குறிப்பு தன்னைப்பற்றியதுதான் என்பதாக இயேசு ஒருபோதும் சொன்னதில்லை. ‘கர்த்தரால் மனிதகுமாரனுக்குச் சொல்லப்பட்டது' என்பதுபோல அவர் விளக்கிய விஷயங்கள் கூட படர்க்கையில்தான் வருகின்றனவே தவிர ஒருபோதும் ‘கர்த்தரால் எனக்குச் சொல்லப்பட்டது’ என்பதுபோல அவர் குறிப்பிட்டதில்லை.
அப்போது இஸ்ரேல், ரோமானியர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ரோம் மன்னரின் பிரதிநிதியாக கவர்னர் பான்ட்டியஸ் பிலாட் (பைபிளில் பொந்தியு பிலாத்து என்று குறிப்பிடப்படும் பிலாத்து மன்னன் இவனே.) ஆட்சிசெய்துகொண்டிருந்தார். வழக்கைக் கேட்ட அவருக்கு, இது ஓர் அநியாயமான வழக்கு என்றே தோன்றியது. ஆயினும் மதகுருக்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கூட்டத்தினர், இடைவிடாமல் ‘இயேசுவுக்கு மரணதண்டனை தந்தே ஆகவேண்டும்’ என்று வலியுறுத்தியதால், வேறு வழியில்லாமல் தம் சம்மதத்தைத் தெரிவித்தார்.
இஸ்ரேலின் கவர்னராக பிலாட் இருந்தது, கி.பி. முதல் நூற்றாண்டின் 27லிருந்து 36_ம் வருடங்களுக்கு இடைப்பட்ட காலம் என்று சரித்திரம் சொல்கிறது. இதனடிப்படையில் இயேசுவின் மரணம் 30_35_ம் ஆண்டுகளுக்கு இடையில் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று கணிக்கப்படுகிறது.
சிலுவையில் அறையப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்து அவர் விண்ணுக்குச் சென்றார் என்கிற கிறிஸ்தவர்களின் நம்பிக்கைதான் யூதர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக்காட்டும் முதல் ஆதாரம். ஏனெனில், யூதர்களின் நம்பிக்கையின்படி, மரணத்துக்குப் பின் தேவதூதன் உயிர்த்தெழுவதென்பது கிடையாது. வேறுபாடு அங்கேதான் தொடங்குகிறது.
கருத்துரையிடுக